×

அம்மாவின் மனைவியை என்னவென்று அழைப்பது!

பலரும் போற்றித் துதிக்கும் ஐயப்பனைப் பற்றிய தகவல்களை அறியலாம் வாருங்கள்! அதற்கு முன்னால் சில கேள்விகள்!அம்மாவின் மனைவியை, என்ன உறவுமுறை சொல்லி அழைப்பது? சாஸ்தாவின் வாகனம் எது? ஐயப்பனின் வாகனம் என்ன? ‘பூர்ணா புஷ்களா சமேத ஹரிஹர புத்ர’ என்று ஐயப்பனுக்கு உண்டான நாமாவளியில் வருகிறது. அது எப்படி? ஐயப்பன் பிரம்மசாரியாயிற்றே! இவ்வாறு பல கேள்விகள். வாருங்கள்! இயன்றவரை ஒவ்வொன்றாக அறியலாம்!அம்மாவின் மனைவியை, என்ன உறவுமுறை சொல்லி அழைப்பது? இது முதல் கேள்வி. இந்தத் தகவலைப் பதினாறாம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

பதினாறாம் நூற்றாண்டில் நரசிம்ம பூபாலன் எனும், சோழ மன்னர் ஒருவர் இருந்தார். அவருடைய ஆஸ்தானத்தில்தான். ஈஸ்வர அவதாரமாகவே மதிக்கப்பட்ட மகான் அப்பைய தீட்சிதர் என்பவர் இருந்தார்; தீட்சிதர் பெரும் பண்டிதராக இருந்ததோடு, மகாஞானியாகவும் விளங்கினார்; நூறு நூல்களுக்கும் மேலாக எழுதியவர். அப்படிப்பட்ட மகானான தீட்சிதரையும் அழைத்துக்கொண்டு, மன்னர் நரசிம்ம பூபாலன் சாஸ்தா கோவிலுக்குச் சென்றார்; கூடவே மெத்தப் படித்த மேதாவி ஒருவரும் சென்றார்; அந்த மேதாவிக்கு ஆணவம் அதிகம்; ‘‘ஆகாயத்திற்குக் கீழே, பூமி்க்கு மேலே, எனக்குத் தெரியாதது எதுவுமில்லை’’ என்ற எண்ணத்தோடு, அதை வெளிப்படுத்தவும் செய்வார் அந்தப் பண்டிதர். கோயிலுக்குப் போன அரசருக்கும் உடன் வந்தவர்களுக்கும் தகுந்த மரியாதைகளைச் செய்த கோயில் நிர்வாகத்தினர், அவர்களை சந்நதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு போனதும் அரசரின் முகம் வியப்பில் ஆழ்ந்தது. காரணம்?அங்கே சாஸ்தாவின் விக்கிரகம், மூக்கின்மேல் விரலை வைத்த கோலத்தில் அமர்ந்திருந்தது. பார்த்த மன்னர் வியந்தார்;அருகில் இருந்த உள்ளூர் பெரியவர்களிடம், ‘‘இது ஏன் இப்படி உள்ளது? இதற்கு ஏதாவது ஐதீகம் இருக்கிறதா?” எனக் கேட்டார்.

 அருகில் இருந்த பெரியவர்கள் சிலர், ‘‘இங்கு ஒரு மகா ஞானி வருவார். அவர் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி, இதற்கான உண்மையான காரணத்தை வெளியிடுவார். அதைக் கேட்டவுடன், இந்த விக்கிரகம் மூக்கின்மேல் உள்ள விரலை எடுத்து விடும் என்று, எங்கள் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்’’ என்று பதில் சொன்னார்கள்.  அதைக் கேட்ட மன்னருக்கு சுவாரசியம் கூடியது; தன் அருகில் இருந்த மேதாவியான பண்டிதரிடம், ‘‘காரணம் என்ன என்பதை வைத்து, நீங்கள் ஒரு பாடல் பாடுங்கள்! “ என்றார்.    மேதாவியும் ஒருபாடல் பாடினார்; ‘‘விஷ்ணுவின் மகனான நான், பிரம்மனுக்கு இணையானவன்; பிரம்மனால் பூஜிக்கப்பட்டவன். பெரும் பாக்கியம் செய்த என்னை, தேவர்களும் வழிபடுவார்கள். இருந்தும், நான் பூதங்களுக்கு ஈசனான சிவனுக்கும் பிள்ளையாக இருக்கிறேன் அல்லவா? ஆகவேதான், என்னைப் பூத கணங்கள் சுற்றி இருக்கின்றன’’ - என்று இந்த சாஸ்தா சிந்தித்துக்கொண்டு இருக்கிறார் என்பதே அவர் பாடியதன் கருத்து.ஊஹும்! விக்கிரகத்திடம் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

அதன்பின் மன்னர், தன் அருகிலிருந்த மகாஞானியான அப்பைய தீட்சிதரிடம், ‘‘சுவாமி! உண்டான காரணத்தை அமைத்து, தாங்கள் ஒரு கவி பாட வேண்டும்’’ என வேண்டினார். தீட்சிதர் ஒரு விநாடி யோசித்தார். சாஸ்தா சிந்தனையில் ஆழ்ந்திருப்பவராக இருந்தால், கன்னத்தில் அல்லவா கையை வைத்திருப்பார்? ஆனால், இங்கு அப்படி இல்லையே! ஆகவே இவர் சிந்தனை செய்யவில்லை. ஆச்சரியப்படுபவர்கள்தான் மூக்கில் விரலை வைப்பார்கள். இங்கே சாஸ்தா ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?’’ என எண்ணினார்; காரணம் விளங்கி விட்டது.அக்காரணத்தை வைத்து உடனே பாடினார் தீட்சிதர்;

அம்பேதி கௌரீ மஹமாஹ்வயாமி
பத்ந்ய : பிதுர் மாதர ஏவ ஸர்வா :
கதன்னு லக்ஷ்மீம் இதி சிந்தயந்தம்
சாஸ்தாரமீடே ஸகலார்த்த ஸித்த்யை

‘‘நான் கௌரியை (பார்வதியை) அம்மா என்று அழைப்பேன். தந்தையின் மனைவியர் அனைவரும் நமக்குத் தாய் அல்லவா? ஆனால், லட்சுமி தேவியைத்தான், என்ன உறவுமுறை சொல்லி அழைப்பது என்று தெரியவில்லை. வியப்பான உறவு முறையாக அல்லவா இருக்கிறது இது! மகாவிஷ்ணு, மோகினியாக இருந்தபோது, அந்த மோகினிக்கும் சிவபெருமானுக்கும் நாம் மகனாய்ப் பிறந்தோம். ஆகவே, மோகினியாக இருந்த மகாவிஷ்ணுவை அம்மா என்று அழைத்தால், அதில் தவறில்லை. ஆனால், மகாலட்சுமி... அம்மாவான மகாவிஷ்ணுவிற்கு அல்லவா மனைவியாக இருக்கிறார்! இதுவரை தந்தைக்குத்தான் மனைவியைக் கண்டிருக்கிறோம்;

அம்மாவிற்கு மனைவி ஏற்பட்டது வியப்பே!’’ என சாஸ்தா மூக்கில் விரலை வைத்திருக்கிறார்.   இதைக்கேட்ட சாஸ்தா விக்கிரகம், உடனே தன் மூக்கில் இருந்து விரலை எடுத்து விட்டது. தீட்சிதர் பாடிய கவிதையின் கருத்தழகும் சாஸ்தா விக்ரகத்தில் ஏற்பட்ட மாறுதலும், அங்கிருந்த அனைவரையும்  பரவசத்தில் ஆழ்த்தின. (அம்மாவின் மனைவியை என்ன உறவுமுறை சொல்லி அழைப்பது எனும் சாஸ்தாவின் இவ்வைபவம், ‘தீக்ஷிதேந்த்ர விஜயம்’ எனும் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது).

அது சரி! பூரணா-புஷ்களாவைத் தர்ம சாஸ்தா எப்போது, எப்படி திருமணம் செய்து கொண்டார்? பார்க்கலாம் வாருங்கள்!

முதலில் ‘புஷ்களா’ திருமணம்; இது நிகழ்ந்தது நேபாளத்தில். நேபாளத்தைப் பளிஞன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவர் மந்திர- தந்திரங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்; காளி உபாசகர்; காளி பூஜையில் ஆழமாக ஈடுபட்டுக்காளியின் அருளைப் பெற்றவர்; செல்வ சுகங்களிலும் அரச போகங்களிலும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.எத்தனை நாளைக்கு? எதுவரை மூப்பு? முதுமை வரும் வரை தான். ஆம்! முதுமை வந்து விட்டால், அதுவரை நாம் அனுபவித்த இன்பங்கள் எல்லாவற்றையும், உடம்பு தானாகவே விலக்கத் தொடங்கி விடும்; ஆனால், மனது கேட்காது;

அனுபவித்துப் பழகியதை விட முடியாமல் திண்டாடும்; மாற்று வழிகளை ஆராயும். இதைத்தான் செய்தார் நேபாள மன்னரான பளிஞன். பளிஞனை முதுமை ஆக்கிரமித்தது; அதிலிருந்து தப்ப என்ன வழி? என ஆராய்ந்தார். சிலர் ஆலோசனை கூறினார்கள். ‘‘மன்னா! இதற்குப்போய் கவலைப் படுவானேன்? நீங்கள் வழிபடும் காளி தேவிக்கு, ஒரு கன்னிப் பெண்ணைப் பலி கொடுங்கள்! காளியிடம் இருந்து, முதுமையின்றி வாழும் வரத்தைப் பெறுங்கள்!’’ என்று கூறினார்கள்.மன்னரும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். கன்னிப் பெண் ஒருத்தியைக் கொண்டு வந்து, அவளை பலி கொடுப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தார்கள். பலி கொடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட கன்னிப் பெண், சிவ பெருமானிடம் தூய்மையான பக்தி கொண்டவள். நடந்த நிகழ்வுகளை புரிந்து கொண்ட அவள், சிவ பெருமானிடம், “தெய்வமே! என்னையும் தவறு செய்யும் மன்னரையும் காப்பாற்றுங்கள்!’’ என உள்ளம் உருகி முறையிட்டாள்.

அவள் முறையீடு வேலை செய்தது. சிவபெருமான், தர்ம சாஸ்தாவை அழைத்து, “போய், அந்த கன்னிப் பெண்ணைக் காப்பாற்றி, மன்னனுக்கு அறிவுரை - அறவுரை சொல்லி வா!’’ என அனுப்பினார். அதன்படியே வந்த தர்ம சாஸ்தா, மன்னர் செய்ய விருந்த பலியைத் தடுத்து நிறுத்தி, கன்னிப் பெண்ணைக் காப்பாற்றினார். கூடவே மன்னருக்கு அறிவுரையும் கூறினார்.“மன்னா! தவறு செய்கிறாயே. அடுத்தவர் உயிரைப் பலி கொடுப்பதன் மூலம், எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் சரி! எத்தனை இன்பங்களை அனுபவித்தாலும் சரி! அவையெல்லாம் என்றாவது ஒருநாள், முடிவடைந்துதானே ஆக வேண்டும்? ஆசைக்கு அளவு உண்டா? முடிவுதான் உண்டா? நல்வழியில் நட!’’ என்று உபதேசம் செய்தார்.தெய்வமே உபதேசம் செய்தபின், மன்னர் திருந்தாமல் இருப்பாரா? திருந்தினார். ‘‘தவறைத் தடுத்து நிறுத்தி, தர்ம உபதேசம் செய்த தர்ம சாஸ்தாவே! திருந்திய அடியேன் தரும் காணிக்கையை ஏற்று அருள வேண்டும்’’ என வேண்டினார். ஆம்! கன்னிப் பெண் ஒருத்தியைப் பலியிலிருந்து கட்டிக் காத்த தர்ம சாஸ்தாவிற்குத் தன் மகளான புஷ்களையைத் திருமணம் செய்து கொடுக்க எண்ணினார் மன்னர். மன்னர் பளிஞனின் வேண்டுகோள்படி அவர் மகளான ‘புஷ்களா’வை மணம் செய்து கொண்டார் தர்மசாஸ்தா.

புஷ்களாம் வாமபாகேது ச்யாமவர்ணாம் கனஸ்தநீம்
கிரீடமுகுடோ பேதாம் ஸர்வாபரண பூஷிதாம்
புஷ்களாம் தக்ஷிணே புஷ்பம் வாமே வை வரதா பவேத்
வாமேது லம்பிதம் பாதம் தக்ஷிணேனது குஞ்சிதம்
(சாஸ்தா பிரதிஷ்டா விதி)

பொருள்: புஷ்களை- சாஸ்தாவின் இடதுபுறம் இருப்பவள்; கருத்த திருமேனி கொண்டவள்; கிரீடமும் ஆபரணங்களும் அணிந்திருப்பவள்; வலக்கையில் மலரையும் இடக்கையில் வர முத்திரையும் கொண்டவள்; இடது திருவடியைத் தொங்கவிட்டு, வலது திருவடியை மடக்கிவைத்த கோலத்தில் அமர்ந்திருப்பவள். பாரதத்தின் வடகோடியில் நடந்த திருமணத்தைத் தரிசித்த நாம், பாரதத்தின் தென்கோடியில் நடந்த, அடுத்த திரு மணமான பூர்ணாவின் திருமணத்தைத் தரிசிக்கலாம் இனி!  கேரளத்தில், பக்தியும் விருந்தோம்பலும் வளர்ந்தோங்கிய வஞ்சி மாகரத்தில் பிஞ்சகன் என்ற மன்னர் இருந்தார்;மன்னர் ஒரு சமயம், வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றார்; படைவீரர்களும் சென்றார்கள். வேட்டை மும்முரத்தில் மன்னரும் வீரர்களும், திசைக்கு ஒருவராகப் பிரிந்து விட்டார்கள். இரவு நெருங்கியது. திசை தெரியாத - மனிதநடமாட்டம் இல்லாத அக்காட்டில் தனியே இருந்த மன்னர் திகைத்தார்.

அத்திகைப்பை மேலும் அதிகமாக்குவதைப் போல, அங்கே நிகழ்வுகள் அரங்கேறின. பெருத்த ஓசை கேட்டது; தெற்றுப் பற்கள், செம்பட்டை முடி, தீயைக் கக்கும் கண்கள், கன்னங்கரேல் என்ற வடிவம் ஆகியவற்றோடு, கோரமான பூதங்களின் கூட்டம் அங்கே தோன்றியது. மன்னருக்கு அடிவயிறு ஆட்டம் கண்டது.‘‘நாம் நிம்மதியாகச் சஞ்சாரம் செய்யும் வேளையில், இடையூறாக வந்த இவன் யார்?’’ என்பதைப்போல, பூதங்கள் கோபித்து மன்னரை நெருங்கின. மன்னர் பதறினார்; ‘‘செண்டு ஏந்திய கையனே! மோகினி மைந்தா! பூதாதிபதியே! தர்ம சாஸ்தாவே! காப்பாற்று! சரணம்! சரணம்!’’ என்று கதறினார். அவர் அலறல் அடங்கும் முன்னால் அங்கே, சாஸ்தா தோன்றினார். பிறகென்ன? ஔி வந்தால், தானே இருள் ஓடி விடாதா? பூதங்கள் எல்லாம் மறைந்தன. மன்னருக்கு அருள்புரிந்த சாஸ்தா, மன்னரை அரண்மனையில் சேர்த்தார். அரண்மனை சேர்ந்தவுடன் சாஸ்தாவை வணங்கிய மன்னர், “ஐயனே! அடியேனுக்கு அருள்புரிந்த தாங்கள், அடியேனின் மகளான பூரணையை மனைவியாக ஏற்று, என்னையும் என் வம்சத்தவர்களையும் காத்து அருள் புரிய வேண்டும்’’ என வேண்டினார்.

அடியவரான அந்த அரசரின் வேண்டு கோளை ஏற்று மன்னரின் மகளான பூரணையை மணம்செய்து கொண்டார் சாஸ்தா.

பூர்ணாம் வா கனகபாஸாம் நீலோத்பல தராம் வராம்
கரண்ட முகுடோபேதாம் தக்ஷ பார்ச்வேது ஸம்ஸ்திதாம்வாமே கரே ச புஷ்பம் ஸ்யாத் தக்ஷிணே லம்பிதம் கரம்குஞ்சிதம் வாமபாதம் து தக்ஷிணே லம்பிதம் பவேத்
   (சாஸ்தா பிரதிஷ்டா விதி)

பொருள்: பூர்ணா தேவீ - பொன்னிறம் கொண்டவள்; கரண்ட (கமண்டலம் போன்ற)மகுடம் கொண்டவள்; சாஸ்தாவின் வலப்பக்கம் இருப்பாள்; இடது கரத்தில் நீலோத்பல மலர் ஏந்தி, வலது கரத்தைத்தொங்க விட்டிருப்பாள்; இடது திரு வடியை மடக்கியபடியும் வலது திருவடியைத் தொங்க விட்டபடியும் அமர்ந்திருப்பாள்.

புஷ்களை எனும் சொல்லுக்கு, மிகுதியான - அதிகமான - மேலான - முழுமையான எனும் அர்த்தங்கள் உண்டு; இவைதவிர ‘அருகில் உள்ள’ எனும் பொருளும் உண்டு. அருகிலே இருந்து, மேலான அருளை முழுமையாகச்செய்யக் கூடியவர் ‘தர்ம சாஸ்தா’ என்பதை விளக்குவதோடு; பூர்ணத்தையும் முக்தியையும் வழங்கக் கூடியவர் ‘தர்ம சாஸ்தா’ என்பதையும் விளக்கும் சக்திகள் தாம் ‘புஷ்களா-பூர்ணா’ எனும் சக்திகள்.இந்தத் தர்மசாஸ்தாவின் அவதாரமே ஐயப்பன். ராமரே கண்ணனாக வந்து அவதரித்ததைப்போல், தர்ம சாஸ்தாவே ஐயப்பனாக வந்து அவதரித்தார். தர்ம சாஸ்தா தன்னருளை
தண்ணருளாய்ப் பொழிய வேண்டுவோம்.

* பி.என். பரசுராமன்

Tags : Mom ,
× RELATED இடவலத்துக் கக்காட்டு ஜானகி அம்மாள் : சிறந்த தாவரவியல் விஞ்ஞானி