×

ஹிருதய கமலத்தில் ஹரிஹரன்!


ஒரு சமயம் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும். அம்பிகையை நோக்கி தவமிருந்தார்கள். அவர்களது தவத்தால் மகிழ்ந்த அம்பிகை அம்மூவருக்கும் முன் தோன்றினாள். அம்பிகையின் ரூபம் கண்டு பேரானந்தம் கொண்ட மும்மூர்த்திகளும், மகாதேவியை வணங்கி நின்றார்கள். அப்போது தேவியின் ஹ்ருதயத்தின் நடுவே கோடி சூரியனின் ஒளிக் கதிர்கள் காட்டும் பிரகாசத்துடன் கூடிய ஒரு அற்புத ஜோதியை கண்டனர். ‘‘ஜகத் ஜனனீ! உன் தரிசனமே எங்களை தன்யர்கள் ஆக்கியது.

ஆயின் நீ உன் ஹ்ருதய கமலத்துள் ஒரு சக்தியை வைத்திருக்கிறாயே ? அது எந்த சக்தி”  என்று மும்மூர்த்திகள் அம்பிகையை நோக்கி வினவினர்.  அதற்கு அம்பிகை மெல்லிய புன்னகை பூத்தபடி  ‘‘ஆம் ரகசியம் தான். அந்த சக்தி தவத்தினாலேயே அறியத்தக்கது. அதனை உணர  வேண்டுமென்றால் மீண்டும் தவம் புரியுங்கள்’’ என்றாள்.மும்மூர்த்திகளும் மீண்டும் கடுமையான தவத்தினை மேற்கொண்டார்கள். இம்முறை ஆனந்தமாக அவர்கள் முன் தோன்றினாள் அம்பிகை ‘‘உங்கள் விடா முயற்சி என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. நீங்கள் கோரிய பலன் உங்களுக்கு கிடைக்கட்டும்’’ என்றாள்.

ஆதிசக்தியின் முன்பு ஒரு லட்சம் கோடி இதழ் கொண்ட ஒரு தாமரை தோன்ற, தேவியின் ஹ்ருதயாரவிந்தவாசி ஒரு அற்புத ஜோதி வடிவில் அங்கே எழுந்தருளியது. ‘‘என்னுள் நான் வைத்திருக்கும் என் ஆத்ம சக்தியான அதற்கு ஹ்ருதயாரவிந்த வாசி என்றே பெயர். அவனே என் ஆத்ம ஸ்வரூபன். அவனே பரமான பிரபஞ்ச ரகசியத்தின் மொத்த வடிவும். அவனே பர தத்துவ ரகசியம். அவனே பராய குப்தன். அதற்கு அப்பாலும் உள்ள அனைத்தும் இயங்குகிறது. கடல் கரையை தாண்டாமலும், பூமியும், கோள்களும் காலாகாலத்துக்கு சுற்றுவதும், காலையும், இரவும் கூட அவன் கட்டளைதான். இவ்வளவு ஏன் பிரம்மா, விஷ்ணு, சிவன் கூட அவன் இட்ட கட்டளைப்படி தான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை மேற்கொள்கிறார்கள். அனைத்தையும் தன் கட்டளைப்படி இயக்கும் அந்த ஹிருதயாரவிந்தவாசியை மகா சாஸ்தா என்பார்கள் என்று மொழிந்தருளினாள்.மும்மூர்த்திகளும் அதனைக்கண்டு பேரானந்த நிலை அடைந்தார்கள்.

* சு.இளம் கலைமாறன்

Tags : Hariharan ,Hrudaya Kamal ,
× RELATED அறந்தாங்கியில் பைக்குகள் மோதிய விபத்தில் சவுண்ட்சர்வீஸ் தொழிலாளி பலி