×

தை அமாவாசை நாளில் இவற்றை தவறாமல் செய்தால் மிகுந்த பலன் உண்டு

நமது பழமையான கலாச்சாரத்தில் பல விதமான சடங்குகள், நமக்கு நன்மையான பலன்களை அளிக்க வேண்டும் என்கிற உயர்ந்த காரணத்திற்காக ஏற்படுத்தப்பட்டவை ஆகும். அதில் ஒன்று ஒருவரின் பரம்பரையில் மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம், சிராத்தம் போன்றவற்றை தருவது ஆகும். இத்தகைய சடங்குகளை செய்வதற்குரிய ஒரு மிக சிறந்த நாள் “தை அமாவாசை” தினமாகும். இந்த தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம், திதி தருதல் போன்றவற்றால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தை மாதத்தில் சூரியன் தனது தட்சிணாயனம் எனப்படும் தென் திசை நோக்கிய பயணத்திலிருந்து உத்தராயணம் எனப்படும் வடக்கு திசை நோக்கி பயணிக்க தொடங்கும் காலமாகும். இந்த உத்தராயணம் காலம் என்பது மிகவும் புண்ணியமான காலமாகும். தேவர்கள், பித்ரு லோகத்தில் வாழும் நமது முன்னோர்களுக்கு உத்திராயண காலம் என்பது பகல் பொழுது ஆகும். மகாபாரதத்தில் அம்பு படுக்கையில் வீற்றிருந்த பீஷ்மர் இந்த தை மாத உத்திராயண காலத்திலேயே தனது உயிரை நீத்து மோட்சம் அடைந்தார்.

 வருடத்தின் அனைத்து மாதங்களில் வரும் அமாவாசை தினங்களுக்கென்று சிறப்புக்கள் உண்டு. ஆனால் உத்திராயணம் தொடக்க காலம் எனப்படும் தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மறைந்த நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம்,திதி, சிராத்தம் போன்ற சடங்குகளை செய்வதற்கு மிகவும் ஏற்ற தினம் ஆகும். அதிலும் திங்கட்கிழமை அன்று வரும் அமாவாசை தினமானது மகோதய புண்ணியகாலம் என அழைக்கபடுகிறது. இத்தகைய தினத்தில் நீத்தார் கடன் சடங்குகளை செய்வது மிகவும் பலன் தருவதாகும்.

தை அமாவாசை தினத்தன்று அதிகாலை எழுந்து தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். பொதுவாக இத்தினத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை தீர்த்தங்கள், புனித நதிகள் ஆகியவற்றில் நீராடி பின்பு மறைந்த உங்கள் முன்னோர்களுக்கான சிரார்த்த சடங்குகளை செய்வது சிறப்பு. தர்ப்பணம், திதி போன்றவற்றை அளித்த பின்பு சடங்குகளை செய்வித்த வேதியர்களுக்கு அரிசி, புத்தாடை, தட்சிணை போன்றவற்றை தானம் செய்வதால் உங்களை அண்டியிருக்கும் பித்ரு சாபங்கள், தோஷங்கள் ஆகியவை நீங்கும். மேலும் காய்கறிகளை பயன்படுத்தி செய்யபட்ட சாதத்தை முன்னோர்களை வணங்கி, காகங்களுக்கு வைத்த பின்பே நீங்கள் சாப்பிட வேண்டும்

மேலும் இத்தினத்தில் உங்கள் சக்திக்கு முடிந்த அளவிற்கு ஏழைகள், முதியோர்களுக்கு அன்னதானம், ஆடை தானம் செய்வதால் மறைந்த பித்ருக்களின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய தோஷங்களும் நீங்கி நன்மையான பலன்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுவதை நீங்களே உணர முடியும்.


Tags :
× RELATED சுந்தர வேடம்