×

உழவுக்கு வந்தனை செய்வோம்

மண்ணே மாணிக்கம்
பயிரெலாம் பசுந்தங்கம்
காளைகள் மணிமுத்து
கலப்பை வைடூரியம்
வியர்வை வைரமணியில்
விளையும் நெல்மணிகள்
விவசாயம் சொத்தாகும்
விவசாயி உறவாகும்!
 
வரப்புமேல் வளர்ந்தாலும்
வரம்புமீறாத கதிர்பெண்
அடக்கத்துடன்  தலைகுனிந்து
அறுவடைக்கு காத்திருப்பாள்
பருவபயிரும் பெண்ணும்
படைப்பில் ஒன்றல்லவா
போத்து நடவு அல்லவா
பட்டிக்காடு சொர்க்கமல்லவா!
 
பொங்கப்பானை புத்தரிசி
பொங்கிடும் பனிப்புகை
பறந்து வான்கலந்து
பவனிவரும் தைமேகம்
பகலவனை கண்டுமகிழ
பருவத்தில் மழைபெய்து
பாரெங்கும் வளம்பெருகும்
பாமரர் வாசல் பொன்வரும்!
 
கட்டுடலிருக்க காளைகளமிருக்க
சிட்டுதுணையிருக்க தெம்மாங்கு பாட்டிருக்க
தெள்ளுதமிழாய் மனமினிக்க
தங்கப்பயிர் பூத்துக்குலுங்க
பூமியே வைகுண்டம்
புன்னகையே நாராயணன்
பழையசோறு உணவாகும்
பரமனுக்கு அமுதாகும்!
 
பச்சை பயிரெங்கும்
பரந்தாமன் குறுநகை
இசைக்கும் திருப்பாவை
வாய்க்கால் தண்ணீர்!
பரந்தமரமதில் சைவகிளிகள்
திருவெம்பாவை பாடும்
திருக்காட்சி காண தேவரும்
திருவயல் விவசாயி ஆகிடுவர்!
 
ஒருபொழுது உண்டு
ஒட்டிய வயிறுடன்
ஓயாமல் உழைக்கும்
விவசாயிக்கு தினம் ஏகாதசி
பரம்பொருள் இறங்கிவந்து
பக்கத்தில் நின்றவன்
வியர்வையில் குளிக்கிறான்
கண்ணீரை துடைக்கிறான்!

விஷ்ணுதாசன்

Tags :
× RELATED சுந்தர வேடம்