×

மன்னருக்காக தோன்றிய மாறாந்தை சிவன் கோவில் : இரட்டை பைரவர்களும் அருள்பாலிக்கின்றனர்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். ஸ்ரீவல்லப பாண்டியன் என்ற பாண்டிய மன்னர் இந்த ஊரின் வழியாக நடந்து சென்றபோது மாலை நேரத்தில் சிவபூஜை செய்வதற்காக சிவன் கோயிலை தேடியுள்ளார்.
அப்போது இங்கு சிவாலயம் ஏதும் இல்லை. இதனால் அந்த ஊர்மக்கள் அருகில் உள்ள குளத்து மண்ணை எடுத்து மன்னர் பூஜைக்காக சிவலிங்கம் செய்து கொடுக்க முற்பட்டனர். இதற்காக குளத்தில் இறங்கி மண் எடுக்க முற்பட்டபோது அங்கு கல்லில் வடிவமைக்கபட்ட அழகிய லிங்கத்தின் பாணப்பகுதி மட்டும் கிடைத்துள்ளது.

அதனை மக்கள் மன்னரிடம் கொடுத்தனர். மன்னர் மனம் மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து திருப்தியுடன் சென்றார். பின்னர் அந்த மன்னரே இந்த ஊரில் சிவனுக்கு ஆலயம் கட்டினார். ஸ்ரீ வல்லப பாண்டியன் வழிதோன்றலான மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவ்வூர் மக்கள் தன் முன்னோருக்கு செய்த உதவிக்காக மன்னருக்கு செலுத்தவேண்டிய வரியிலிருந்து விலக்களிக்கும் தனி உரிமையை வழங்கினார்.மாறனால் உரிமம் (தாயம்) வழங்கப்பட்ட நல்லூர் இந்த ஊர் என பெயர் பெற்றதாக வரலாற்று தகவல்கள் ெதரிவிக்கின்றன. 12ம் நூற்றாண்டின் பிற்கால பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. மன்னன் பூஜை ெசய்த பாண லிங்கத்தின் மீது அங்கே மேய்ந்துகொண்டிருந்த பசு பால் சுரந்ததைக்கண்டு அருகில் இருந்தவர்கள் பசுவை விரட்டினர். அப்போது பசுவின் குளம்படி தடங்கள் பாணலிங்கத்தின் மீது பதிந்தது.

இதனை இன்றும் இக்கோயிலில் காணலாம். பசு தானாக பால் சுரந்ததைக் கண்ட இவ்வூர் மக்கள் கோயிலில் அம்மன் சன்னதியை நிறுவி ஆவுடையம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதும் வரலாற்றில் உள்ளது. கோயிலில் 15 கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகளில் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.விக்கிரமபாண்டியபுரம் என இந்த பகுதி அழைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் இறைவன் கைலாயமுடைய நாயனார் என பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வல்லப பாண்டியன், விக்கிரமபாண்டியன், குலசேகரபாண்டியன், சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்கள் ேகாயிலில் திருப்பணிகளை செய்துள்ளதும் கல்வெட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. சில கோயில்களில் உள்ள சிவலிங்கங்கள் மட்டுமே சதுர வடிவ ஆவுடை எனப்படும் அடிமட்டத்துடன் காணப்படும். இக்கோயில் மூலவர் கைலாசநாதர் சதுரவடிவ ஆவுடையின் மீது வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.மூலவர் கைலாசநாதர் சந்நிதியின் பின்புறம், கோமளவல்லி, குமுதவல்லி உடனுறை ஆதிநாத பெருமாள் சந்நிதி உள்ளது.

ஒரே சந்நதியில் இரட்டை பைரவர்கள் வீற்றிருக்கிறார்கள். இவர்களில் ஒருவருக்கு வாகனம் உண்டு. மற்றவருக்கு இல்லை. ஒருவர் உயரமானவர், மற்றவர் சற்று உயரம் குறைந்தவர். ஒரே சந்நதியில் இரட்டை பைரவர்கள் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டோர், இங்கு வந்து இரட்டை பைரவர்களை அஷ்டமி திதி அன்று பூஜை செய்து வணங்கினால் தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகுகிறது என்கிறார்கள்.நெல்லை - தென்காசி சாலையில் மாறாந்தை உள்ளது. தினமும் இருகால பூஜைகளும் ஐப்பசி திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன

Tags : Shiva ,king ,piravas ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...