×

வளமான வாழ்வருளும் வரதராஜர்

தென்பாண்டி நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் மட்டும் பெருமாளுக்கு 108 மணிமாடக் கோயில்களும் நவதிருப்பதிகளும் உள்ளன. இவற்றுள் நவதிருப்பதிகள் ஆழ்வாராதிகளால் பாடப்பெற்ற பெருமை பெற்றவை. அவற்றில் ஒரு தலம், வசவப்பபுரம்.  இந்தத்தலம் நாயக்க மன்னர்கள் காலத்தில் நரசப்பபுரம் என்று அழைக்கப்பட்டு அது நாளடைவில் மறுவி வசவப்பபுரம் என்றானது. இந்த ஊரில் வைத்தமாநிதி வரதராஜப்பெருமாள் அருளாட்சி புரிந்து கொண்டிருக்கிறார். பழமையும் பாரம்பரியமும் மிக்க இந்த பெருமாள் ஆலயத்தின் புராணத் தகவல்கள் சுவையானவை. இத்தல வரலாறு
ரத்னாகரமான்மியம் எனும் நூலில் கிரந்த எழுத்தில் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு சமயம் இப்பகுதியில் வசித்து வந்த ஒரு வணிகன், பெருமாளை நேரில் தரிசிக்க ஆவல் கொண்டான். அதற்காக வேதம் கற்ற பெரியவர் ஒருவரிடம் அதற்கான வழியைக் கேட்டான். அதற்கு அந்த பண்டிதர் “பகவான் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார். ஆனாலும், உனக்கு வழிபட கல் ஒன்றை நான் தருகிறேன். அதை நான் உபதேசம் செய்யும் மந்திரத்தால் ஆராதித்து வா. இறைவன் திருவருளால் உன் விருப்பம் நிறைவேறும்,” எனக் கூறி அந்தக் கல்லைத் தந்து, மந்திரத்தையும் உபதேசித்தார். அந்தக்கல்லை தன் குரு சொல்லித்தந்த முறைப்படி ஆராதித்து, தன் வாழ்வின் பெரும்பேறாகக் கருதி வந்தான் வணிகன். காலங்கள் கடந்தன. அப்போது அவ்வழியே வந்த பத்ரபாகு எனும் படைத்தளபதி வணிகன் வெறும் கல்லை வழிபட்டதைக் கண்டு, “இப்படி வழிபட்டால் பகவான் பிரசன்னமாக மாட்டார்.

சிற்ப ஆகம விதிப்படி செய்த திருமாலின் திருவுருவை, கோயில் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தில் வணங்கினால்தான் உனக்கு பெருமாளின் அருள் கிட்டும்,” என்று கூறினான். ஆனால், வணிகன் அந்த அறிவுறையை அலட்சியம் செய்யாமல், தன் குரு தந்த கல்லை, அவர் உபதேசப்படியே வழிபட்டான் வணிகன். ஆனால், “நீ இறைவழிபாட்டை களங்கப்படுத்துகிறாய். உனது வழிபாட்டை நான் அனுமதிக்கமாட்டேன்,” என்று வணிகனுடன் சண்டையிட்டான் பத்ரபாகு. இருவரும் நீதி கேட்டு மன்னனிடம் சென்றனர். “சாதாரண ஒரு கல் விஷயத்தில் இருவரும் சண்டை போடவேண்டாம். அந்த கல்லை ராஜசபையில் ஒப்படைக்கவும்,” என்றான் மன்னன். அன்றிரவு மன்னனின் கனவில் ஒரு பெரியவர் தோன்றி, “திருமால் பஞ்சபூதங்களிலும் உள்ளான். அதனால் அவற்றை வழிபடலாம்.

அவன் இயற்கை வடிவிலும் உள்ளான். சித் என்பது கல். அது இயற்கையில் உள்ளது. அதன் வெடிப்பில் இருந்து நீர் உண்டாகிறது. இரு கற்களைத் தேய்த்தால் நெருப்பு உண்டாகிறது. கல்லுக்குள் தேரை உள்ளது. அது உயிர்வாழத் தேவையான காற்றும் அதனுள் உள்ளது. அந்த கல்லே வானுயர்ந்த மலையாகவும் உள்ளது. எனவே கல்லில் பஞ்சபூதங்களும் அடங்கியிருக்கின்றன. அதனால் அது அழிவற்ற திருமாலின் வடிவமாகவும் ஆகிறது. எனவேதான் திருமால் கல்லில் அர்ச்சாவதாரமூர்த்தியாக
உறைகின்றான்,” எனக்கூறி மறைந்தார்.

திடுக்கிட்ட மன்னன் மெய்சிலிர்த்து தன் குழப்பம் நீங்கி அந்தக் கல்லை வணிகனிடம் ஒப்படைத்தான். தொடர்ந்து அந்தக் கல்லை வணங்கி வந்தான் வணிகன். அவன் பூஜையில் மகிழ்ந்த திருமால் மன்னனின் கனவில் தோன்றி வணிகன் தலைமையில் மாபெரும் யாகம் ஒன்றைச் செய்ய ஆணையிட்டான். மன்னனும் மனம் மகிழ்ந்து யாகத்தைச் செய்ய, யாகமுடிவில் பெருமாள் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, “தாங்கள் இத்தலத்தில், வைத்தமாநிதி வரதராஜப் பெருமாள் எனும் பெயருடன் தேவியருடன் நிலைகொள்ள வேண்டும்,” என்று மன்னன் கேட்டுக் கொண்டான். அதன்படி நிலைகொண்ட பெருமாளுக்கு ஆலயம் எழுப்பி, ஐந்துவகை கோத்திரக்காரர்களை சேர்ந்த அந்தணர்களைக் கோயில் வளாகத்தில் குடியேற்றி, வைகானச ஆகமப்படி வழிபாடுகள் நடத்த வழி செய்தான் மன்னன், என தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருவறை விமானம், இரு சுற்றுப் பிராகாரங்கள், 5 நிலை மண்டபத்துடன் விளங்குகிறது, ஆலயம். பெரியாழ்வார், ராமானுஜர், விஷ்வக்சேனர் போன்றோர் மகாமண்டபத்தில் அருள்கின்றனர். ஆலயத்திற்கு வெளியே பலிபீடம் உள்ளது. ஆலயத்தின் பின்புறம் நாகபுஷ்கரணி உள்ளது. புத்திர பாக்கியத்தடை உள்ளவர்கள் இத்தலத்தில் முறையாக நாகர் சிலைகளை பூஜித்து பிரதிஷ்டை செய்து அந்த தடை நீங்கப் பெறுகின்றனர்.
கருவறையில் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரத்துடன் கிழக்கு நோக்கி பெருமாள் அருளாட்சி புரிகிறார். பெருமாளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. வேண்டும் வரம் தருபவர் இந்த வரதராஜப் பெருமாள் என பக்தர்கள் போற்றுகின்றனர். ஆலயத்தில் அருளும் அனுமனும் வரப்ரசாதியாகத் திகழ்கின்றார். புரட்டாசி சனிக்கிழமைகளிலும், வைகுண்ட ஏகாதசியன்றும் இத்தல பெருமாள் விசேஷமாக வழிபடப்படுகிறார்.

கோயில் மிகப் பழமையானது. சீமாற சீவல்லபன் என்ற மன்னன் ஆட்சிக் காலத்தில் வீரபோசன் சதுர்வேதி மங்கலம் என்றும், சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் செய்துங்க நாட்டு சதுர்வேதிமங்கலம் என்றும் இத்தலம் வழங்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஊரில் இருந்து சற்றுத் தொலைவில் செய்துங்கநல்லூர் என்ற கிராமம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலத்திற்கு வைகாசன ஆகமப்படி பூஜைகள், பெருவிழாக்கள் நடைபெற சுந்தரபாண்டியமன்னன் காஞ்சிபுரம், ஓமநல்லூர் போன்ற பகுதிகளில் இருந்து வேதம் கற்றறிந்த அந்தணர்களை வரவழைத்து இங்கு அவர்களைத் தங்க வைத்து உள்ளான். நாயக்க மன்னர்கள் காலத்தில் வரதராஜப் பெருமாளுக்கு பெரும் விழாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களை ஆலயக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு மகரக் கோயில் என்றும், மூலவருக்கு வைத்தமாநிதி வரதராஜப்பெருமாள்கோயில் என்றும் பெயரிட்டு வழிபட்டிருக்கிறார்கள்.நெல்லை - தூத்துக்குடி வழியில் நெல்லையிலிருந்து 18 கி.மீ தொலைவில் பிரதான சாலையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது வசவப்பபுரம்.

Tags :
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா