×

மங்களம் அளிக்கும் மங்களாதேவி

மங்களூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற நகரம். ஆலயங்கள் பல இங்கே உண்டு. அவற்றில், புராணத் தொடர்பும், பழமைச் சிறப்பும் கொண்டது மங்களாதேவி கோயில். மங்களாதேவி என்ற இந்த அம்பாளின் பெயரிலிருந்துதான் மங்களூர் பெயரும் பிறந்தது. இதன் புராதனப் பெயர் மங்களாபுரி. மங்கள்பூர் என்றும் மங்களூர் என்றும் மாறி, இன்று மங்களூரு ஆகியுள்ளது.

தற்போது நாம் காணும் இந்தக் கோயில், பத்தாம் நூற்றாண்டுக் கோயில். அம்பிகை மங்களாதேவி, காளியின் வடிவில் வணங்கப்படுகிறாள். இந்தக் கோயிலில் நவராத்திரி உற்ஸவம்தான் முக்கியத் திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது.

புராணக் கதை


ஹிரண்யாட்சனை வதம் செய்து இந்த உலகைக் காத்தார் மகாவிஷ்ணு. ஆனால், கொல்லப்பட்ட ஹிரண்யாட்சனின் மகள் விகாசினி, தன் தந்தையைக் கொன்ற மகாவிஷ்ணுவை எதிரியாக நினைத்தாள். தேவலோகத்தைத் தாக்க தன் அசுரப் படையுடன் கிளம்பினாள். தேவலோகத்தைத் தூள் தூளாக்கினாள். இந்திரன் அவளை எதிர் கொள்ள பயந்து ஓடினான். ஆனால், குபேரன் விகாசினியைத் தடுத்து பூலோகத்தில் தள்ளிவிட்டான்.

வருந்திய விகாசினி, பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் செய்தாள். அவளின் கோர தவத்தைத் தாங்க இயலாத பிரம்மா, மனமிரங்கி விகாசினி முன் தோன்றினார். “தனக்கு வீரம் மிக்க அழிவு இல்லாத மகன் வேண்டும். அவன் விஷ்ணுவை வதைக்க வேண்டும்’ என்று வரம் கேட்டாள். “அது சிவபெருமான் மூலம் அமையும், அவரை நோக்கி தவம் செய்’ என்று உபாயம் கூறி மறைந்தார் பிரம்மா.

இதையடுத்து, சிவனை நோக்கி தவம் செய்தாள். பார்வதியின் வேடத்தைத் தாங்கி, லிங்கப் பிரதிஷ்டை செய்து, தவத்தில் ஆழ்ந்தாள். பார்வதி வேடத்தில் தவம் மேற்கொண்ட விகாசினியுடன் சிவபெருமான் சேர்ந்தார். தன் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில், தன் நாட்டை அடைந்தாள் விகாசினி.விகாசினி கர்ப்பம் தரித்தாள்.

ஆனால், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் செயலால் அச்சமுற்ற விகாசினி, பூமாதேவியின் துணை கொண்டு, பூமித்தாயின் வயிற்றில் தன் கருவைக் காத்தாள். பூமியிலிருந்து குழந்தை பிறந்தது. அதற்கு அந்தகாசுரன் என்று பெயர் சூட்டினாள். அந்தகாசுரன் வளர்ந்து, விஷ்ணுவை பழிவாங்க அலைந்தான்.

அந்தகாசுரனை அழிக்க, அன்னை சக்தியை நாடினர் தேவர்கள். அதன்படி, அந்தகாசுரனைப் போருக்கு அழைத்தாள் அன்னை சக்தி. தான் எதிர்த்துப் போரிடுவது அழகான ஒரு பெண் என்பதை அறிந்து போருக்குப் புறப்பட்டான். அடுத்த நொடி அங்கே பன்னிரு கைகளுடன், சிங்கத்தின் மேல் அமர்ந்து, சூலாயுதம் கொண்டு சக்தி காட்சி தந்தாள். சக்தியின் தோற்றத்தைக் கண்டு பயந்த அந்தகாசுரன் கடலினுள் குதித்தான். அன்னை ரக்தேஸ்வரி உருவம் எடுத்து அந்தகாசுரனை வதைத்தாள். அன்னையின் வெற்றி மூவுலகிலும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது. அசுரரைக் கொன்று மக்களுக்கும் தேவர்களுக்கும் மங்களம் உண்டாகச் செய்ததால் அன்னை, மங்களாதேவியாகத் துதிக்கப்பட்டாள்.

அசுரனை வதம் ெசய்த இடத்தில் அன்னைக்கு ஒரு கோயில் எழுந்தது. காலவெள்ளத்தில் அந்தக் கோயில் மண்ணால் பூமிக்குள் புதைந்தது. பின்னாளில் துளுநாட்டில் ஆட்சி செய்த மன்னன் வீரபாகு, தனக்குப் பின் வாரிசு யாரும் இல்லாததால், நாட்டை நல்லோரிடம் ஒப்படைத்துவிட்டு, அரச கடமைகளைத் துறந்து, காட்டுக்குச் சென்று தவம் செய்து தன் இறுதிக் காலத்தைக் கழிக்க எண்ணினான்.

குலகுருவான முனிவர் பாரத்வாஜரின் ஒப்புதலின் பேரில், பங்கராஜாவிடம் தன் நாட்டை ஒப்படைத்துவிட்டுச் சென்றான். முனிவர் பாரத்வாஜர், மங்களாதேவியின் சிறப்புகளையும் புராதனப் பெருமையையும் பங்கராஜாவிடம் எடுத்துரைத்தார். மன்னன், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட சந்நிதியை மேலே எடுத்துவந்து, புனருத்தாரணம் செய்தான். அழகிய கோயில் உருவானது.

அதனுள் சிவலிங்கமும், லிங்கத்தின் மேல் எப்போதும் தண்ணீர் விழுந்துகொண்டிருக்கும் வகையில் தாராபாத்திரமும் அமைக்கப்பட்டது. மீண்டும் கோயில் பக்தர்கள் புடைசூழ, அனைவரும் வணங்கத்தக்க ஆலயமாக உருப்பெற்றது.திருமண பாக்கியம் திருப்திகரமாய் அமையஅம்பிகை மங்களாதேவி, கன்னியர்க்கு வரமருளும் தெய்வமாக இங்கு துதிக்கப்படுகிறாள். கன்னிப் பெண்கள் இந்தக் கோயிலுக்கு பக்தி சிரத்தையுடன் வந்து, தங்கள் மனம் விரும்பும் மணாளன் வேண்டியும், மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டியும் மங்களாதேவியைத் தொழுகின்றனர்.

இன்றும் அங்கே மங்களாதாரவிரதம் (சுயம்வரா பார்வதி விரதம்) கன்னிப் பெண்களால் கர்ம சிரத்தையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. கோயிலுக்குள்ளே ஹோமம் செய்து, மனம் விரும்பும் திருமண வாழ்க்கை கைகூட பிரார்த்தனை நடக்கிறது. அவ்வாறு பிரார்த்தனை நிறைவேறப்பெற்றவர்கள் இங்கே வந்து, திருமணம் செய்து கொள்கின்றனர். இதை இன்றும் நாம் இங்கே காணலாம். அதற்கென கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன.

இன்றும் மங்களூரு நகரத்தின் முக்கியத் தலங்களாகத் திகழும் கத்ரியும் மங்களாதேவி ஆலயமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றன. கத்ரி மஞ்சுநாதர் ஆலய விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியின்போது, கத்ரி யோகிராஜ மடத்தின் சாதுக்கள் மங்களாதேவி ஆலயத்துக்கு எழுந்தருளி, மங்களாதேவிக்கு பட்டுத்துணி அளித்து, பூஜித்து செல்கின்றனர்.

கோயில் விழாக்கள்

நவராத்திரி (தசரா) ஒன்பது நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரியின் ஏழாம் நாள், மங்களாதேவி அன்னை சாரதாம்பாளாகவும், எட்டாவது நாள் மாரிகாம்பாவாகவும் வணங்கப்படுகிறாள். எட்டாம் நாளில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அனைத்து விதமான ஆயுதங்களையும் ஒன்றாக வைத்து, அசுரர்க்கு எதிராக அன்னை போர் புரிந்த நன்னாளை எண்ணி சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஒன்பதாம் நாள் மகா நவமி.

அன்றுதான் ரத உற்ஸவம். ஆவணி, மார்கழி மாதங்களில் சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம் தினமும் நடக்கின்றது. கார்த்திகை பகுள நவமி அன்று லட்ச தீபோற்ஸவம் நடைபெறுகிறது. கோயிலில் சண்டி ஹோமம் செய்வது விசேஷம். குழந்தைகளுக்கான வித்யாரம்பம், விஜயதசமி நன்னாளில் இந்தக் கோயிலில் நடைபெறுவது சிறப்பான ஒன்று.

பூஜை நேரம்


காலை 6 மணி, மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு அபிஷேகத்தோடு கூடிய பூஜை நடைபெறும். இரவு 8.30 மணிக்கு பூஜை செய்யப்பட்டு நடை சாத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பூஜை நேரம் ஒரு மணிநேரம் அதிகமாக, விரிவாக நடக்கிறது.செல்லும் வழிமங்களூருவின் பிரதானமான ஹம்பங்கட்டா பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள இந்தக் கோயிலுக்கு பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள்
வசதிகள் உள்ளன.

Tags : one ,Mangaladevi ,
× RELATED ஒளியாக அல்ல பேரொளியாக மாறுவோம்