×

பில்லி சூனியம் போக்கும் ஐந்து வீட்டு சுவாமி

செட்டியாபத்து, தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அடுத்துள்ளது செட்டியாபத்து. இங்கு அருட்பாலிக்கிறார் ஐந்து வீட்டு சாமி.தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சார்ந்தவர் வடுகநாதர். இவருடைய மனைவி பொன்னம்மாள். இவர்கள் இருவரும் மணமுடிந்து 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், மதுரை சென்று மீனாட்சி அம்மனை மனமுருக வழிபட்டு வந்தனர். மறுமுறை அவர்கள் மதுரை சென்றனர். அப்போது கோயில் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர், ‘‘வைகையில் தம்பதியர் சகிதமாக நீராடி வந்து அம்பாள் மீனாட்சியையும், அப்பன் சொக்கனையும் வணங்கி செல்லுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறும்’’ என்று அவர்களிடம் கூறினார்.

அதனை தெய்வ வாக்காகக் கருதி வைகை ஆற்றங்கரையினிலே நீராடச் சென்றனர்.  அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது.  அந்த அழுகுரல் வந்த இடத்தினை நோக்கி சென்றபோது  அங்கு அழகான ஓர் ஆண் குழந்தையைக் கண்டனர்.  அந்த குழந்தையை கையிலெடுத்து வாரி அணைத்த பொன்னம்மாள், தனது கணவரிடத்தில், ‘‘நாம, இந்த குழந்தையை வீட்டுக்கு கொண்டு போவோமாங்க’’ என்றாள். அவர் இது “கடவுள் தந்த பரிசு, அதனால் நாம் வீட்டுக்கு கொண்டு போவோம் என்றார். அதன்பிறகு குழந்தையுடன் சென்று மீனாட்சியையும், சொக்கநாதனையும் வழிபட்டு விட்டு  ஊர் வந்து சேர்ந்தார்கள்.தும்பைச் செடிகளின் அருகே கண்டு எடுத்ததால் அந்த குழந்தைக்கு ‘தும்பையப்பர்’’ என்று பெயர் சூட்டினர். தும்பையப்பர் மருவி பையப்பர் ஆகி அது ஐயப்பர் ஆனது.   
 
ஏழு வயது நிரம்பிய தும்பையப்பரை அழைத்துக்கொண்டு வடுகநாதரும் - பொன்னம்மாளும் மதுரை மீனாட்சி கோயில் திருவிழாவுக்கு சென்றனர். குழந்தைச் செல்வத்தைக் கொடுத்த மீனாட்சியைத் தரிசித்த பின்னர் மதுரை நகரை சுற்றி வந்த போது, விழாக்கூட்டத்தில் தும்பையப்பனை தவறவிட்டனர். எங்கு தேடியும் குழந்தையைக் காணவில்லை. பெற்றோர்கள் அழுது புலம்பி தவித்தனர்.  உயிரற்ற ஜடம்போல் ஆனார் பொன்னம்மாள். அவரை தேற்ற முடியாத துயரத்தோடு வடுகநாதர் அவளை அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றார். மதுரை நகர் முழுவதும், பெற்றோரை தேடி அலைந்து ஓய்ந்து போன தும்பையப்பர், அங்கு மளிகைக் கடை ஒன்றில் பணியாளராக சேர்ந்துக்கொண்டார்.

தாய், தந்தையர் மீனாட்சி, சொக்கநாதரின் பெருமைகள் பற்றி அடிக்கடி கூறியதால், தினமும் கடை திறக்கும் முன், கோயிலுக்கு சென்று மீனாட்சி அம்மனை வணங்கி செல்வார். ஒரு நாள் கோயிலுக்கு சென்ற போது அம்பாள் சந்நதியில் செந்நிற பட்டுகட்டி, செந்தூர திலகமிட்டு மணம் புரிந்த மங்கையாய், பிள்ளை பெற்ற அன்னையாய் மீனாட்சி அம்பாள் மானிட பெண் வடிவில் நின்றிருந்தார். அவர், தும்பையப்பரிடம், குழந்தாய், கோயிலுக்கு தினமும் வந்து செல்கிறாயே, என்ன வேண்டுதல் உனக்கு இந்த சின்ன வயதில் என்று வினவ, தும்பையப்பர் கூறலானார் அம்மா, என் பெற்றோர்களிடம் நான் மீண்டும் சேரவேண்டும். அவர்களை என்மனம் தேடுகிறது. படுத்தால் என் தாயின் முகம்தான் என் கண்ணுக்குள் தெரிகிறது. எனக்கு தூக்கமே வரவில்லை என்று கூறியபடி அழுதார்.

சரி, சரி அழாதே, மீனாட்சி அம்மனை வணங்கி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்புறீயா என்று கேட்க, நிச்சயம் நடக்கும் என் தாய், தந்தையர் கூறியிருக்கிறார்கள் அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். அது மட்டுமல்ல, மீனாட்சி அம்பாள் அருளால் தான் நான் பிறந்தேனாம் என்றார் தும்பையப்பர். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, நேரமாச்சு, கடை மாமா தேடுவாங்க, நான் போயிட்டு வாரேன். நீங்க வீட்டுக்கு போகலியா என்று தும்பையப்பர் கேட்க, நான் அப்புறமா போறேன். சரி, நீ போயிட்டு நாளைக்கு வா என்று விடைகொடுத்தாள் அம்பாள். இப்படி பல நாள் தும்பையப்பரிடம் ஒரு மானிட பெண்ணாக மாறி பேசி வந்தார் மீனாட்சி அம்மாள். ஆண்டொன்று முடிந்த நிலையில் வழக்கம் போல் கோயிலுக்கு வரும் பெற்றோரை, தும்பையப்பர் ஒரு நாள் நேரில் கண்டார். அவர்கள்  தன் மகன் எதிர்வருவதைக் கண்டு மகிழ்ந்தனர். மகிழ்ச்சி மிகுதியால் தாய், தந்தை இருவரும் ஒருசேர ‘ஐயப்பரே’’ என்று கூவி அழைத்தனர். இருவருமே ஓடோடிச்சென்று குழந்தையை
கட்டித்தழுவி ஆனந்தமாய் நின்றனர்.

தும்பையப்பரிடம் “ஐயப்பா ஊருக்கு போகலாம் வா” என்று அழைத்தனர். இவ்வார்த்தைகளைக் கேட்டதும் தும்பையப்பர் அவர்களிடம் “சிறிது நேரம் இங்கு இருங்கள் என்று கூறிவிட்டு, அம்பாள் சந்நதி முன்னே சென்றார். அம்மா, எங்க அம்மா, அப்பாவ, நான் கண்டுவிட்டேன். என்று கூறியவாறு கண்களை மூடி இருகைகளையும் ஒரு சேர வைத்து வணங்கியபடி மீனாட்சி அம்பாளுக்கு நன்றி கூறினார். அப்போது எதிரே மானிட பெண்ணாக அம்பாள் நின்று கொண்டிருந்தார். அவரைக்கண்டு சந்தோஷம் பொங்கிய தும்பையப்பர், அம்மா உங்களை தான் நான் தேடினேன். மீனாட்சி அம்பாள் அருளால் என் பெற்றோர் எனக்கு கிடைத்து விட்டனர் என்றார். அப்படியா ரொம்ப சந்தோஷம் என்று பதில் கூறிய, அன்னை தன்னை யாரென்று அவன் அறியும் பொருட்டு சிறுவனுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் ஒரு கண்ணாடியையும், எலுமிச்சைகனி ஒன்றையும் கையில் கொடுத்து “தும்பையப்பா, கண்ணாடியை வைக்கிற இடத்தில், அந்த கண்ணாடி மேல் இந்த எலுமிச்சம் கனியை வைத்துக்கொள். கனி அழுகி என்றைக்கு கண்ணாடியில் முகம் தெரியாமல் போகிறதோ அன்று என்னிடம் வா. இப்போது பெற்றோருடன் ஊருக்கு சென்று வா” என்று விடை கொடுத்தார்.

பெற்றோருடன் ஊர் வந்த தும்பையப்பர். தனிமையில் ஒரு இடம் அமைத்து அதில் அன்னையை பூஜை செய்தார். குதிரை வளர்ப்பிலே  மிகவும் நாட்டம் கொண்ட அவர், அதிலே பொழுதை அதிகம் கழித்தார். வசதி மிக்க வீட்டிலே வளர்ந்த அவருக்கு தேவையான எல்லா சுகபோகங்களுக்கும் வாய்ப்புகள் இருந்தும் எதிலும் தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் ஒருநாள் பூஜை செய்யும் போது கனி அழுகி இருப்பதைக் கண்டார். கண்ணாடியையும் பார்த்தார் முகம் தெரியாமல் இருந்தது. உடனே, யாரிடமும் எதுவும் கூறாமல் அன்னையைக் காண  மதுரையை நோக்கி சென்றார். அங்கே அன்னையை அம்மா,அம்மா அழைத்தபோது எந்த பதிலும் வரவில்லை. அங்கே யாகம் நடந்து கொண்டிருந்தது. தும்பையப்பர் அந்த யாகத் தீயினுள் பாய்ந்து விட்டார். “அம்மா, அம்மா” என்றழைத்த மகன் தன்னைக் காணாது யாகத் தீயினுள் பாய்ந்துவிட்டான் என்பதை அறிந்த அன்னை யாகசாலைக்கு வந்தார். அப்போது யாக குண்டத்துள்ளிருந்து தும்பையப்பர் வெளியே வந்தார். அன்பு மகனின் மேனியில் அனலின் வடு எங்கும் இல்லாதது கண்டு அன்னை அகமகிழ்ந்தாள். தும்பையப்பரின் பக்தியை கண்டு மகிழ்ந்து, தும்பையப்பரின் செவிகளிலே எட்டெழுத்து மந்திரத்தை அன்னை உபதேசம் செய்தார்.

பின்னர் இந்த லோகத்தில் மாய சக்திகளும், மாந்திரீக சக்திகளும் மேலோங்கி வருகிறது. குறிப்பாக தென்னாட்டில் மாந்திரீக சக்தியால் தெய்வ சக்தியை அடக்கி ஆள ஒரு கூட்டம் உதயமாகியிருக்கிறது. அதிலிருந்து மக்களை காத்து வா, அதற்காக நீ இந்த மண்ணில் தோன்றியிருக்கிறாய். என்னை நோக்கி “பூஜை செய்து வா. நான் உன்னோடு இருப்பேன். தென்திசையை  நோக்கி செல் என்று அன்னை கூறியதும், தாயே, நான் எங்கு இருக்க வேண்டும். என்று தும்பையப்பர் கேட்க, நீ, செல்லுமிடத்தில் எங்கே சம்பு அடர்ந்து நீர் நிலையோடு இருக்குமிடத்தில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துகிறதோ அவ்விடமே நீ தங்கி இருக்க ஏற்ற இடமாகும். என்று கூறி வாழ்த்தி விடைகொடுத்தார் அன்னை. அன்னையின் வாக்கை சிரமேற்கொண்டு தென்திசை நோக்கி தும்பையப்பர் புறப்பட்டார்.தென்திசை நோக்கி வந்த தும்பையப்பர், உவரி வந்து, அங்கு குடிகொண்டுள்ள சுயம்புலிங்கசுவாமியை தரிசனம் செய்து விட்டு செட்டியாபத்து  கிராமத்துக்கு வந்தார். செட்டியாபத்து பகுதி அந்நாளில் வனமாக இருந்தது. நல்லநீர் நிலையோடு, சம்பும் அடர்ந்து வளர்ந்து இருந்த இடத்தில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துவதைக் கண்டார்.  அன்னை கூறிய படியே அந்த இடம் இருந்ததை உணர்ந்து ஆனந்தமடைந்தார். அன்னையின் ஆணைப்படி நாம் தங்கியிருக்க இதுவே சரியான இடம் என்று முடிவு செய்து அந்த இடத்தில்  யோகநிலையோடு அமர்ந்தார்.அம்மனுக்கு கோயில் எழுப்பி, பூஜை செய்து வந்தார்.

நாளடைவில் அங்கு நிலம் வைத்திருந்த வைணவர் ஒருவரின் கனவில் தோன்றிய தும்பையப்பர் தான் பூஜித்து வந்த அம்பாளுக்கு தினமும் நீ பூஜை செய்து வா, அதோடு என்னையும் கவனி, உன் நிலத்துக்கும், குலத்துக்கும் காவலாய் இருப்பேன் என்றார். அந்த வைணவர் அம்பாளுக்கும், தும்பையப்பருக்கும் கோயில் எழுப்பினார். முதன்முதலில் எழுப்பிய சாமி என்பதாலும், கனவில் பெரிய உருவமாக வந்ததாலும் அவருக்கு பெரியசாமி என்று பெயரிட்டார். அம்பாளுக்கு அவரறிந்த வைணவ நாமங்களில் ஒன்றான பெரிய பிராட்டி என்ற நாமத்தை கொடுத்தார். தொடர்ந்து வந்த தலைமுறையினர் வைணப்பெருமாள் சந்நதி, அனந்தம்மாள் சந்நதி, ஆத்தி சாமி சந்நதி என 5 சந்நதிகள் உருவாக்கினர். ஆத்திசாமி தான் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இக்கோயில் 5 வீட்டு சாமி என்று அழைக்கப்பட்டது. அடுத்து வந்த தலைமுறையினர் திருப்புளியாழ்வார் சந்நதியை உருவாக்கினார்கள். 1984 ஆம் ஆண்டு புதிதாக  பெரிய சுவாமி சந்நதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சந்நதி கட்டப்பட்டுள்ளது. இப்போது பல சந்நதிகள் இருந்தாலும் பழைய பெயரான ஐந்து வீட்டு சாமி என்றே இப்போதும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

பெரிய சாமி திருக்கையில் சங்குசக்கரம் ஏந்தியவராய் பக்தர்களுக்கு அருட் பாலித்துக்கொண்டிருக்கிறார். பில்லி. சூனியம், செய்வினை, ஏவல் உள்ளிட்டவைகளை போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னைகளுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சுகபிரசவம் வேண்டுவோரும் பெரியபிராட்டி அம்மையாருக்கு வளையல்களை காணிக்கையாக செலுத்தி வேண்டிக்கொள்கின்றனர்.கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தி சுவாமி கோயிலுக்கு நேர்ச்சையாக செருப்பு மற்றும் கதாயுதம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக மறுவருடம் வந்து பார்த்தால் ஆத்தி சுவாமியின் கால் தடங்கள் அந்த செருப்பில் விழுந்திருப்பதை இன்றும் பார்க்கலாம். கிரக தோஷத்தால் கஷ்டப்படுவார்கள்  அவர்கள் தலையை சுற்றி முட்டைகளை  பெரியசாமி, ஆத்திசாமி, பெரியபிராட்டி ஆகிய அம்மன் சந்நதிகளில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். ஒரு சிலர் கோழி குஞ்சுகளை தங்களின் தலையைச் சுற்றி இத்தலத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

இந்த கோயிலில் வடக்கு வாசலில் இருந்து உள்ளே நுழைந்தால் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அதை தொடர்ந்து சென்றால் பெரியசாமி  தெற்கு நோக்கி காட்சி  அளிக்கிறார், அவர் அருகே பெரிய பிராட்டியும் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்கள்.  தொடர்ந்து செல்லும் போது திருப்புளி ஆழ்வார் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அவரை தொடர்ந்து ஆத்தியப்பன்சாமி கிழக்கு நோக்கி அவரின் எதிரே குதிரை வீரன் வடக்கு நோக்கியும் காட்சி அளிக்கின்றனர். அதை கடந்து சென்றால் வயணப்பெருமாளும், அலந்தம்மாளும் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18ம் தேதி துவங்கி 6 நாட்கள் வரை சித்திரை திருவிழாவும், தைமாதம் 5ம்தேதி துவங்கி மூன்று நாட்கள் தை திருவிழாவும் மிக விமர்சையாக நடக்கும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் விசேஷ பூஜைகளும் நடக்கும். சித்திரை திருவிழாவின் இறுதி நாளன்று வழங்கப்படும் அன்னமுத்திரை என்ற பிரசாதம் முற்றிலும் மகிமை உள்ளதாக கருதப்படுகிறது.இக்கோயிலில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண்களால் தொட்டு வணங்கிய பிறகே, பூஜைக்குரிய சாமான்கள் ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த கோயில் செல்ல நெல்லையிலிருந்து உடன்குடி  செல்லும் பஸ்சில் ஏறி மெஞ்ஞானபுரம் வழியாக செட்டியாபத்து செல்லலாம்.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி