தைலக் காப்பில் தன்வந்திரி

வாலாஜாபேட்டை, வேலூர்

உலக மக்களை காக்க வேண்டி மஹா விஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று அழைத்து மகிழ்கின்றோம். . தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணு புராணம் மற்றும் பிரமாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன. திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப் பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். இந்த தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர்.

மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீ ரங்கநாதருக்கு வைத்தியம் பாத்தவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான், அவரே ஸ்ரீமன் நாராயணன்.வாலாஜாபேட்டை அனந்தலை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தன்வந்திரி பகவான் வைத்தியராக இருப்பதாலும், மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவ மனையாக திகழ்ந்து வருகை புரியும் பக்தர்கள் நோய் நொடிகளின்றி வாழவும், நோயுற்றவர்கள் விரைவில் குணம் பெறவும், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று தன்வந்திரி வைத்தியரிடம் வேண்டி இங்கு நடைபெறும் கூட்டு பிரார்த்தனையிலும் யாகத்திலும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்கின்றனர். நோயற்று வாழட்டும் உலகு” என்ற தாரக மந்திரத்தை கொண்டு, தன் தாய்க்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றும் பொருட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் உருவாக்கப்பட்டது தான் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

உடல்பிணி மற்றும் உள்ளத்துப்பிணி தீர தன்வந்திரி ஹோமத்துடன் தைலாபிஷேக விழா    தற்போது நடந்து வருகிறது. இது  14.12.2019 தேதி காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு மூலமந்திர ஜபம் மற்றும் ஹோமத்துடன், நல்லெண்ணெயை கொண்டு உலக மக்களின் ஆரோக்ய கருதியும், ருண ரோக நிவர்த்திக்காகவும், நவகிரக தோஷ நிவர்த்திக்காகவும், உடல் ரீதியாகவும், சர்ம ரீதியாகவும் ஏற்படும் தோஷங்கள் குறைவதற்காகவும் தைலகாப்பு எனும் தைலத் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

நல்லெண்ணெய் என்பது எள் விதையிலிருந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விசேஷ திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷங்கள் உள்ளவர்கள் பரிகாரம் செய்து வருகிறார்கள்.

சனி பிரீத்திக்காக எள்ளு தானம், எள்ளு ஹோமம், எள்ளு எண்ணெய் கொண்டு ஆயுள் தோஷங்கள் விலக தெய்வங்களுக்கு எண்ணெய் காப்பு சாற்றுவது போன்ற வைபவங்கள் சனி பிரீத்திக்காக நம் முன்னோர்கள் செய்து வருகிறார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நல்லெண்ணையினால் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகமாக செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும், ஆயுள் தோஷம் நீங்கவும், மனத்தடைகள் விலகவும், மன நோய்கள் அகலவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறைவும், ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்தாஷ்டமச் சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து விடுபடவும், சர்க்கரை நோய், புற்று நோய், வலிப்பு நோய், மூட்டு வலி, வாய் புண், வயிற்று புண், குடல் சம்மந்தமான நோய்கள், ஆரோக்ய சம்மந்தமான நோய்கள் போன்ற பல்வேறு நோய்கள் நீங்குவதற்கு வழிவகை செய்கிறது இந்த தைலாபிஷேகம் என்கிறார் ஸ்ரீ  முரளிதர ஸ்வாமிகள்.

இத்தல சனி பகவானின் சிறப்பு :

ஒரு மனிதனை அவரவர் பூர்வபுண்ணியத்திற்கு தகுந்தவாறு வாழ்க்கை பாதையை கொண்டு செல்பவர்கள் நவகிரகங்களே. அந்த நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின் அடிப்படை மட்டுமின்றி பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர் இவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியாது. சனி பகவான் ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரனாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர் இவரே. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக கோயில்களில் நவகிரகங்களுடன் சேர்ந்திருப்பார். ஒரு சில பரிகாரக் கோயில்களில் தனி சந்நதிகளில் மூல மூர்த்தியாக காட்சி தருகிறார். அதைப் போலவே ஸ்ரீ  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் 13 படிகள் கொண்டு பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வர பகவான் தனி ஆலயம் அமைத்து கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அனுக்கிரகம் செய்கிறார்.

தம்பதிகள் நலன் கருதியும், மாங்கல்ய பலம் கூடவும், மரண பயம் விலகவும்,  குழந்தை பாக்யம் வேண்டியும், 14.12.2019 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கர்பரக்ஷாம்பிகை யாகத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது. இதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து 108 சுமங்கலி பூஜையும் கூட்டுப்பிரார்த்தனையும் யாகத்துடன் நடைபெற உள்ளது. இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளனர். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் மஹா பிரசாதம் வழங்கப்பட உள்ளது. அனைவரும் வருக, இறையருளுடன் குருவருள் பெறுக. தொடர்புக்கு : ஸ்ரீ  தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203 .

ந.பரணிகுமார்

Related Stories: