×

இறை அரியணையின் நிழலில்...

இஸ்லாமிய வாழ்வியல்

கடுமையான கோடை காலம். தலைக்குமேல் சூரியன் தகித்துக் கொண்டிருக்கிறான். பயணமோ சுட்டுப்பொசுக்கும் பாலை வெளியில். வேர்த்து  வேர்த்துக் கொட்டுகிறது. தாகத்தால் நாக்கு தள்ளுகிறது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை புல்பூண்டோ  சின்ன நிழலோ கூட இல்லை. கடும் வெப்பத்தினால்  கருகியே இறந்து விடுவோமோ என்கிற நிலை. அத்தகைய இக்கட்டான சூழலில் சுவையான நீரூற்றுடன் கூடிய ஓர் இனிய சோலை தென்பட்டால் அந்தப் பயணியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது அல்லவா?இதே போன்ற ஒரு நிலைமை மறுமையில் ஏற்படும். இறுதித் தீர்ப்பு நாளன்று இறைவனின் தீர்ப்பை எதிர்பார்த்து மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் கூட்டம் கடும் வெப்பத்தில் நின்றுகொண்டிருக்கும். தலைக்கு மேல் மிகக்கிட்டத்தில் சூரியன் தகித்துக்கொண்டிருக்கும். இம்மையில் அவரவர் செய்த நன்மை- தீமைகளுக்கு ஏற்ப வியர்வையில் நனைந்துகொண்டிருப்பார்கள்.

சிலர் கணுக்கால் வரை வியர்வையில் நின்றுகொண்டிருப்பார்கள். சிலர் முழங்கால் வரை வியர்வையில் இருப்பார்கள். இன்னும் சிலருக்கு முகம் வரைக்கும் வியர்வை வெள்ளமாய்ப் பெருகியிருக்குமாம். தாங்கமுடியாத வெப்பத்தால் தவித்துக் கொண்டிருப்பார்கள். ஒதுங்குவதற்குச் சின்னதாய் ஒரு நிழல்கூட இருக்காது.அந்த மைதானத்தில் நிழல் என்று பார்த்தால்  அர்ஷின் நிழல் மட்டும்தான். ‘அர்ஷ்’ என்பது இறைவனின் அரியணை.  இந்த அரியணையின் நிழல் தவிர வேறு எந்த நிழலும் இருக்காது.“மறுமையில் ஏழு பிரிவினரைத் தவிர வேறு யாருக்கும் இறை அரியணையின் நிழல் கிடைக்காது” என்று நபி(ஸல்) தெளிவாக அறிவித்துள்ளார்கள். நற்பேறு பெற்ற அந்த ஏழு பிரிவினர்கள் யார்?
1. நீதி செலுத்தும் அரசன்
2. இறைவழிபாட்டில் தன் இளமையைக் கழித்த வாலிபன்
3. எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கிறதோ அந்த மனிதன்.(அதாவது ஒரு தொழுகையை முடித்தவுடன் அடுத்தத் தொழுகைக்குப் பள்ளிவாசல் செல்வதை எதிர்பார்த்துக் காத்திருப்பவன்)
4. நட்பையும் பகையையும் இறைவனுக்காகவே வெளிப்படுத்துபவர்கள்.
5. உயர்குலத்தைச் சேர்ந்த அழகான ஒரு பெண், தகாத உறவுக்கு அழைத்தபோது இறையச்சத்தின் காரணமாக அந்த அழைப்பை ஏற்க மறுத்தவர்
6. வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதவண்ணம் தர்மம் செய்யும் மனிதர்.
7. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் மனம் கசிந்து கண்ணீர் சிந்தும் மனிதர்.

நீதிசெலுத்தும் அரசன் என்பது மன்னர்களை மட்டும் குறிப்பதல்ல. நீதிமிக்க ஆட்சியாளர்கள் அனைவரும் இதில் அடங்குவர். நட்பும் பகையும் இறைவனுக்காகவே என்பதன் பொருள், தனிப்பட்ட லாபம், தனிப்பட்ட உணர்ச்சிகள், கோபதாபங்களுக்கு இடம் கொடுக்காமல் இறைவனுக்காகவே நேசிப்பது, இறைவனுக்காகவே கோபம் கொள்வது.ஐந்தாவது புள்ளி இன்றைய இளைஞர்கள் இதயத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய வழிகாட்டலாகும். அதிக விளக்கம் தேவையே இல்லை. தான தர்மங்களை வெளிப்படையாகவும் செய்யலாம்  எனினும்,  பகட்டையும், விளம்பரத்தையும்  தவிர்த்து பிறர் அறியாமல் செய்யும் தான தர்மங்களுக்கு மறுமையில் உயர் தகுதி உள்ளது.தனிமையில் இறைவனை நினைந்து கண்ணீர் சிந்துபவர்  தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் இறைவனின் வழிகாட்டுதலுக்கே முன்னுரிமை அளிப்பார்.

- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED சுந்தர வேடம்