×

கார்த்திகை பௌர்ணமி வழிபாடு மற்றும் பலன்கள்


பதினைந்து நாட்கள் வளர்பிறை, பதினைந்து நாட்கள் தேய்பிறை என வானில் சந்திரனின் நிலையை கொண்டு ஒரு மாதம் கணிக்கப்படுகிறது. இதில் வளர்பிறை காலங்களில் வரும் பௌர்ணமி தினம் அல்லது திதி ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட தினமாக கருதப்படுகிறது. அதிலும் “கார்த்திகை” மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் சைவ மற்றும் வைணவ தெய்வங்களை வழிபட்டு அருள்பெற கூடிய ஒரு சிறந்த தினமாக கருதப்படுகிறது. இந்த “கார்த்திகை பௌர்ணமி” தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

“கார்த்திகை” என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது “கார்த்திகை தீப திருவிழா” என்பதேயாகும். காரிருள் அதிகம் நீடிக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று மாலையில் தீபங்கள் ஏற்றி நமது உள்ளும், புறமும் இருக்கும் இருளை போக்கும் ஒரு உன்னத தினமாக கார்த்திகை தீப தினம் இருக்கிறது. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை பௌர்ணமி தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று சந்திரனை அணிகலனாக சூடியிருக்கும் “சந்திரசேகரன்” என பெயர் பெற்ற சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்குவதால் வாழ்வில் அனைத்து நலன்களையும் நிச்சயம் அடையலாம். இத்தினத்தில் “திருவண்ணாமலை” அருணாச்சல மலையை, கிரிவலம் வந்து அண்ணாமலை – உண்ணாமுலை அம்மனை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் நன்மைகள் பல ஏற்பட்டு இறுதியில் முக்தி என்பது நிச்சயம்.

தமிழ் மாத கணக்கீட்டின் படி சூரிய பகவான் “விருச்சிகம்” ராசியில் சஞ்சரிக்கின்ற மாதம் கார்த்திகை மாதம் எனப்படும். விருச்சிகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய ராசியாகும். போர்க்கிரகமான செவ்வாய் பகவானின் தன்மையை கொண்டவர் தமிழ்கடவுளாகிய “முருகப்பெருமான்” ஆவார். எனவே முருகப்பெருமானை வழிபடுவதற்குரிய ஒரு மாதமாக இருக்கிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திர தினங்களில் “கார்த்திகேயன்” ஆன முருகனை வழிபடுபவர்களுக்கு நோய் நொடிகள், துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்கி, எதிரிகள் தொல்லை ஒழிந்து, தொழில் மற்றும் வியாபாரங்களில் இன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். திருமண தடை தாமதங்கள் போன்றவை விலகும்.

கார்த்திகை மாதம் வைணவ மத தெய்வங்கள் வழிபாட்டிற்கும், அதிலும் குறிப்பாக “ஸ்ரீ நரசிம்மர்” சுவாமியை வழிபடுவதற்கு ஒரு சிறந்த மாதமாக இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் அருகே இருக்கும் “சோளிங்கர் ஸ்ரீ நரசிம்மர் சுவாமி” கோயிலின் மூலவரான ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி கண் திறத்தல் வைபவம் நடைபெறும் இக்காலத்தில் இந்த நரசிம்மரை வழிபட்டால் நமது எதிரிகளால் நமக்கு செய்யப்பட்ட செய்வினை மாந்தரீக கேடுகள் உடனே நீங்கும், கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள் அதிலிருந்து விடுபடுவர். இக்கோயிலிற்கு சென்று வழிபட முடியாதவர்கள் உங்கள் ஊரிலேயே இருக்கும் நரசிம்ம மூர்த்தியை வழிபடுவதால் மோகூரிய நன்மைகள் ஏற்படும்.

Tags : Kartik Purnima ,
× RELATED அயோத்தியில் வெகு விமர்சையாக...