×

பராம்பிகை

அன்னை ஆதிபராசக்தியை வழிபடு பவர்கள் அம்பிகையை பல்வேறு கோலங்களில் வழிபட்டு மகிழ்கின்றனர். அவற்றில் ஒரு திருக்கோலம் - பராம்பிகை. நம் கண்ணிற்கு புலப்படாத சக்தியாய் எங்கும் நிறைந்திருக்கும் தன்மைக்கு ‘பரா’ என்று பெயர். சக்தி உபாசனையில் பிரம்மா, விஷ்ணு, சிவன், ருத்ரன், சதாசிவன் போன்றோரின் மேல் அமர்ந்த காமேஸ்வரி ரூபமாய் அம்பிகை வரிக்கப்படுகிறாள். இந்த உபாசனை ‘பஞ்சப்ரேதாசனஸீனா’ எனப்படுகிறது. படைத்தல்,  காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களையும் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன், ருத்ரன், சதாசிவன் எனும் ஐவரும் செய்வதாகக் கொண்டாலும் அவர்களுடைய அந்தத் திறன், அவர்களையே ஆசனமாய்க் கொண்ட சக்தியிடமிருந்து வருவதால் அவள் ‘பராசக்தி’ ஆகிறாள்.

பிரம்மாவுக்கு சரஸ்வதி, திருமாலுக்கு திருமகள், ருத்ரனுக்குப் பார்வதி, ஈஸ்வரனுக்கு கௌரி, சதாசிவனுக்கு லலிதா என்று பராசக்தி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். இவர்களில் திருமாலுக்கு, திருமகளாக அருளுபவள் பராம்பிகை எனப்படுகிறாள்.திருமாலின் வாகனமாகிய கருடன் தோள்களில் திருமாலைத் தாங்கியுள்ளான்.  நாராயணனின் சக்கரம், காலச்சக்கரமாய் உலகை இயக்குகிறது. ஓம் எனும் பிரணவ மந்திரத்தை சதா ஒலிக்கும் சங்கு  உலகிற்கு நலம் உண்டாகச் செய்கின்றன.

பெருமாளின் இடது தோள் பராம்பிகையான திருமகளைத் தாங்கியுள்ளது. பூமாதேவியின் அம்சமாக திருமகள் உள்ளதால் அவளைத்தாங்கிக் காக்கும் அவர் உலக பாரங்களையும் தாங்குகிறார் என்பதாக. திருமால் எப்போதுமே நாற்கரத் தான்தான். ஆனால், பராம்பிகை சமேதராக அவர் திகழும்போது இரு கரங்களுடன் காட்சியளிக்கிறார். அடுத்த இரு கரங்களின் ஆற்றல்கள் அனைத்தையும் பராம்பிகையே ஏற்கிறாள். இந்த பராம்பிகைக்கு 4 திருக்கரங்கள். அம்பிகை, திருமாலின் திருமார்பில் நித்யவாசம் புரிகிறாள்.  இதிலிருந்து  உலக நலனில் அவள் காட்டும் அக்கறை புரிகிறது.

அவள் திருப்பாதம் கருடனின் திருமுடியில் பதிந்திருக்கிறது. தேவியின் மேல் இரு கரங்கள் செந்தாமரை மலர்-களைப் பற்றியிருக்கின்றன. தாமரை சேற்றில் மலர்ந்தாலும், அதன் அழுக்கோ, நாற்றமோ அதில் ஒட்டுவதில்லை. வானத்தின் சூரியனை நோக்கி அது மலர்கிறது. அதுபோலவே ஞானிகளும், பக்தர்களும் உலகியல் சங்கடங்களில் அகப்பட்டாலும், அவை சம்பந்தப்பட்ட பாவங்கள் தம்முடன் ஒட்டிக்கொள்ளாத தூயோராய் ஆண்டவனை மட்டுமே தம் இதயங்களில் இருத்தி, அகமும், முகமும் மலர வாழ்கின்றனர். தாமரை தூய ஞானத்தையும், அழகையும் குறிக்கின்றது.

கீழ் இரு கரங்களில் இவள் அமிர்த கலசங்களை தாங்கியிருக்கிறாள். உலகியல் அதர்மங்கள், பயங்களிலிருந்து மீண்டு, பேரானந்தமான அமரத்துவத்தைத் தன் பக்தர்களுக்குத் தரும் தோற்றம் இது. மண்ணுலகோர்க்கும், விண்ணுல கோர்க்கும் பேரருளோடும், பேரழகோடும், அமிர்தமளிக்கும் வடிவினளாய் தோன்றுகிறாள் பராம்பிகை. கண்ணுக்குப் புலப்படாத ஸ்ரீ, பரா, காமதா, ஐந்த்ரீ, புவானிதிபா, ஆனந்தா, விபூதிதா, கமலா, கலா, பரமேஸ்வரி, சரஸ்வதி, மாயா, வாகீஸ்வரி, மகா மோகினி, மகா பராஸ்ரீ போன்ற சக்திக் கூட்டங்களால் வணங்கப்படுகிறாள். இவளுடைய தேஜஸ், சக்தி எல்லாம் திருமாலின் அருளோடு இணைந்து நமக்குத் திருவருள் புரியும்; நம் மனமும், கவலை மேகம் சூழாத நீல வெளியாக பரப்பிரம்ம ஸ்வரூபமாக மாறும்.

* ந.பரணிகுமார்

Tags :
× RELATED வாசகர்களின் ஆன்மிக அனுபவம்