ஆவுடையார் கோவில் அத்துவா தீபங்கள்

* சதாசிவம்

‘ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கும்’ திருவாசகத்தை அருளிச் செய்த ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளை இறைவன் ஆட்கொண்ட திருத்தலம் திருப்பெருந்துறையாகும்.நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் அன்பர்கள் இறங்கி நீராட வசதியாக அமைக்கப்படும் வழிகளுக்குத் துறைகள் என்பது பெயர். சிவானந்த வெள்ளம் பொங்கி வரும் பேராற்றில் அன்பர்கள் இறங்கி நீராடும் துறையாக இவ்வூர் அமைவதால் இது பெருந்துறை எனப்பட்டது. இங்கு மாணிக்கவாசகர் தம்மை ஆட்கொண்ட இறைவனுக்குக் கட்டிய கோயிலே ஆவுடையார் கோயில் என்றழைக்கப்படுகிறது.

சிவபெருமானால் அருளப் பெற்ற ஞானநூலான ஆகமங்களின் தத்துவங்களை விளக்கும் நிலையமாக இக்கோயில் விளங்குகிறது. மாணிக்கவாசகர் சிவமாக மங்களைச் சிறப்பித்துப் போற்றுவதைத் திருவாசகத்தில் பல இடங்களில் காண்கிறோம்.இறைவன் ஆகமத்தைத் திருமேனியாகக் கொண்டிருப்பதை ‘‘ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்’’ என்றும் சிவாகமங்களை மகேந்திர மலை மேல் இருந்து உபதேசித்ததை, ‘‘மன்னுமலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் என்றும் குறித்துள்ளார்.

சிவாகமங்கள் உலகம் பரவெளியில் இருந்து தோன்றி நடைபெற்று மீண்டும் ஒடுங்குவதற்குரிய காரணப் பொருட்களாக அத்துவாக்களைக் கூறுகிறது. அத்துவா என்பதற்கு வழி என்பது பொருள். உலகம் பரசிவத்திலிருந்து இறங்கி வந்து மீண்டும் அங்கேயே சென்று ஒடுங்கிவிடும் வழியையே ஆகமங்கள் அத்துவா என்று சொல்லால் குறிக்கின்றன. சித்தாந்த நூல்கள் மாயை தன் செயல்களால் ஆன்மாக்களைப் பற்றி நிற்கும் வழி என்று அத்துவாக்களுக்கு விளக்கம் கூறுகிறது.அத்துவாக்கள் ஆறு வகைப்படும். அவை 1 தத்துவம், 2. கலை, 3. புவனம், 4. வர்ணம், 5. பதம், 6. மந்திரம் என்பனவாகும். இவற்றில் தத்துவம், கலை, புவனம், என்ற மூன்றும் (காண்பதற்குரிய) பொருள் வடிவானவை. எஞ்சிய, வர்ணம், பதம், மந்திரம் ஆகிய மூன்றும் ஒலி வடிவானவை. இவற்றைப் பொருட் பிரபஞ்சம், சொற் பிரபஞ்சம் எனவும் கூறுவர்.

இவை ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பன. இணைந்த பற்சக்கரங்களைப் போன்று ஒன்று இயங்கினால் தான் மற்றது இயங்கும் தன்மை உடையது. சிவபூசையின்போது இந்த அத்துவாக்களைச் சிவபெருமானின் திருமேனியாக உருவம் செய்து போற்றித் துதிக்கின்றனர்.  குமரகுரு சுவாமிகள் கந்தர்கலிவெண்பாவில் சிவபெருமானுக்கு ஐந்து கலைகள் திருமுடிகளாகவும், மார்பு, குய்யம், முழந்தாளோடு பாதமும் ஆக உள்ளன என்று கூறுகிறார். மேலும் புவனங்கள் ரோமங்களாகவும், வண்ணம் தோலாகவும், மந்திரங்கள் ரத்தமாகவும், பதங்கள் நரம்புகளாகவும், தத்துவங்கள் எலும்பு மஜ்ஜை முதலான சப்த தாதுக்களாகவும் உள்ளன என்றும் குறித்துள்ளார்.

இது இறைவன் அத்துவாக்கில் நிறைந்திருப்பதைக் குறிப்பதாகும். ஆலய வழிபாட்டிலும் இந்த அத்துவாக்கள் தனிச் சிறப்புடன் போற்றப்படுகின்றன. இவற்றின் வடிவம், வண்ணம், அமைப்பு ஆகியவற்றை ஆகம நூல்கள் விரிவாக கூறுகின்றன. ஆவுடையார் கோயிலிலுள்ள கனகசபை எனப்படும் குதிரைச்சாமி மண்டபத்தில் ஆகமங்களில் கூறப்பட்டுள்ள இந்த ஆறு அத்துவாக்களின் திருவுருவங்களும் பெயர்களுடன் பொறிக்கப்பட்டுள்ளன.  பஞ்ச கலைகளின் வடிவங்கள் கிழக்கிலும், தென்கிழக்கில், ஏகாதச மந்திரங்களும், 81 பதங்களும் ; வடமேற்கில் 51 வர்ணங்களும்; மேற்கில் 224 புவனங்களும் வடக்கில் 36 தத்துவங்களும் அமைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். மேலும், ஆகமங்களில் கூறப்படும் அஷ்ட மூர்த்தங்கள் மகாமண்டபத்தின் விதானத்தில் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

இன்னும் அனேக வகையில் ஆகமங்களை விளக்கும் சிற்ப  ஓவியக் காட்சிகளை இக்கோயிலில் தீட்டியுள்ளனர்.இவையாவற்றிலும் மேலாக ஆகமங்களின் சாரமான சைவ சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ள அத்துவாக்களைக் குறிக்கும் வகையில் அனேக திருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை சித்தாந்த தீபங்கள் என்று போற்றப்படுகின்றன.  அத்துவாக்களின் வகைக்கேற்ற எண்ணிக்கையில் இங்கு விளக்குகள் அமைக்கப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. கலாதீபங்கள் ; தத்துவங்களுக்கு அடுத்தபடியாக விளங்குவது கலைகள் ஆகும். கலைகள் என்பதற்கு ஒளிமிகுந்த பகுதிகள் என்பது பொருள். மேலே குறித்த தத்துவங்கள் இந்த ஐந்து கலைப் பகுதியில் நிறைந்துள்ளன. இவை நிவர்த்தி கலை, பிரதிஷ்டா கலை, வித்யா கலை, சாந்தி கலை, சாந்தியாதீத கலை என்று ஐந்து பகுதிகளாகும்.

இவற்றிற்கு முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்திரர், மகேசர், சதாசிவர் என்பர்கள் அதிபதிகளாவர்.

இவர்கள் யாவரும் ஐந்தொழிலை நடத்திக் கொண்டே இருக்கின்றனர் என்றாலும், பிரம்மாவுக்குப் படைத்தலும், விஷ்ணளளுவுக்குக் காத்தலும், ருத்திரருக்கு அழித்தலும், மகேசருக்கு மறைத்தலும், சதாசிவருக்கு அருளலுமே முதன்மைத் தொழில்கள் ஆகும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் வியூகர் எனப்படும் நான்கு உதவியாளர்கள் உள்ளனர்.

Related Stories: