தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை தினம்

கார்த்திகை தீபம் : 10  -12 - 2019

கார்த்திகை தீபம் தோன்றியது பற்றி பல்வேறு புராண சம்பவங்கள் உள்ளன. மூன்று வித காரணங்களால் திருக்கார்த்திகை தினம் தீப விழா கொண்டாடப்படுகிறது.  

1. தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது  அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் ஜோதியாக எழுந்து நின்று ஜோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும்,  அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களை பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தைத் தொடங்கினர். அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் வேண்ட, அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் ஜோதியாய் வெளிப்பட்ட நாள்தான் திருக்கார்த்திகை தீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மயமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள்.

2. தங்களை வதைக்கும் சூரனை கொல்ல வேண்டும் என்ற தேவர்கள் சிவனிடம் கோரிக்கை வைக்கின்றனர். அதை ஏற்ற அவர் அதற்கான காலம் விரைவில் வரும், சூரனை அழிக்க தமது படைப்பில் ஒருவன் வருவான் என வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தமது படைப்பை உருவாக்க தமது மனைவி சக்தியுடன் புணரத் தொடங்குகிறார். புணர்ச்சி நிற்கவில்லை. யுகம் யுகமாகத் தொடர்கிறது. அப்படி தொடரும்போது மானாகவும் யானையாகவும் இன்னும் பல மிருகங்களாவும் உருவெடுத்து புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர் சக்தியும் சிவனும். இவர்களின் செய்கையினால் தேவலோகம் தடுமாறுகிறது, இவர்களின் புணர்ச்சியை எப்படி நிறுத்துவது என்றுத் தெரியாமல் தேவர்கள் கவலைப் படுகிறார்கள். இருவரின் புணர்ச்சியினால் உருவான வியர்வை துளிகள் லட்சக்கணக்கில் பெருகி வழிகின்றன, அதிலிருந்து தேவ கணங்கள் உருவாகின்றன, முன்னணி படையணிகள் தோன்றுகின்றன, இறுதியில் சிவன் தனது சுக்கிலத்தை தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன.

அங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்த குழந்தைகள் கார்த்திகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள். அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன்  கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன் பிறந்தநாள்.  

3. சப்த ரிஷிகளின் மனைவிகளின் அழகில் மயங்கிய அக்னிபகவானுக்கு அந்த பெண்கள் மீது அடக்க முடியாத மோகம் உண்டானது. அதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவனது மனைவி சுவாகாதேவி தனது கணவன் முறைத் தவறி நடந்துக் கொண்டால் சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்துபோனாள். அதனால் தானே ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு, தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாள். ஆனால் வசிட்டரின் மனைவி அருந்ததியைப் போல அவளால் உருமாற முடியவில்லை. எனினும்  சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை பெண்கள்  என்று பெயர். இப்பெண்கள்தான் கார்த்திகேயனை வளர்த்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

- ஆர். அபிநயா

Related Stories: