கந்தனுக்கு கார்த்திகை விரதம்

‘முருகா’என்னும் நாமத்தினைச் சொல்லி வழிபடுபவர்கள் உலகில் நீங்காத செல்வத்தினை அடைவர்; நோயால் வருத்தமுறமாட்டார்; ஒருநாளும்  துன்பமடையார்; பரகதியுற்றிடுவார்; எமனின் நாடு புகார் என போற்றி உரைப்பார், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள். இத்தகைய திருநாமப் பெருமையினை உடைய முருகப் பெருமான் தமிழரின் தனிப் பெரும் கடவுளாகப் போற்றப்படுகிறார். முருகப் பெருமான் தமிழாய் போற்றப்படுவதுடன் தமிழ்ப் புலவராய் சங்கத்தில் இருந்து தமிழை வளர்த்தெடுத்த தனிக் கருணை உடையவராகவும் சிறப்பிக்கப்படுகிறார்.

“நூலறி புலவ” (திருமுருகாற்றுப்படை)

“பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே” (திருமுருகாற்றுப்படை)

“புலமையோய்’’ (திருமுருகாற்றுப்படை)

“சங்கத் தமிழின் தலைமைப் புலவா”

(முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் -. தாலப்பருவம்.)

- என வரும் பாடல் அடிகள் தமிழுக்கும் முருகனுக்குமான தொடர்பினை விளக்கி நிற்கும். மேலும் முருகன்  வெற்றியைத் தரும் கொற்றவையின் சிறுவன் எனத் திருமுருகாற்றுப்படையில் போற்றப்படுகிறார். இதனை,

“மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ

விழையணி சிறப்பிற் பழையோள் குழவி

வானோர் வணங்குவிற் றானைத் தலைவ”

- என்பதனால் அறியலாம்.

நாள் நட்சத்திரங்களுள் மிக்க ஒளியுடையதாய் அமைந்த அறுவகை நட்சத்திரங்களாகிய கார்த்திகைப் பெண்களே சரவணப் பொய்கையில் அறுமுகனாய் அவதாரம் செய்த முருகப் பெருமானை வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்கள் ஆவர். சூரபத்மனின் துன்பம் தாளாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று ஆதியும் நடுவும் முடிவும் இல்லாத மெய்ப்பொருள் ஆகிய தாங்கள் தங்களைப் போன்ற தன்மை கொண்ட ஒரு புதல்வனைத் தந்தருள வேண்டும். அப்புதல்வன் சூரபத்மனை வதம் செய்து தேவர்களாகிய எங்களை காத்தருள வேண்டும் என வேண்டி நின்றனர். சிவபெருமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி தன் நெற்றிக் கண்ணில் இருந்து அறுவகையான நெருப்புப் பொறிகளைத் தோற்றுவித்தார். அப்பொறிகளையே சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்கள்  முருகனாய் வளர்த்தெடுத்தனர்.

அருளின் வடிவமான முருகப் பெருமான் அவதரித்தது விசாக நட்சத்திரம் எனினும் வளர்த்தெடுத்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் என்றமையால் கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு உயர்வுடையதாய் ஆயிற்று. இத்தகைய கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் யார் முருகனை எண்ணி விரதம் நோற்கிறார்களோ அவர்களுக்கு அனைத்து வளமும் நலமும் வந்து சேரும் என சிவபெருமான் அருளினார் எனக் கந்த புராணம் குறிப்பிடுகின்றது.

“கந்தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கண்

மைந்தன் என்னும் பெயராகுக மகிழ்வால் எவரேனும்

நுந்தம் பகலிடை இன்னவன் நோன்தாள் வழிபடுவோர்

தந்தங் குறைமுடித்தே பரந்தனை நல்குவம் என்றான்”

(கந்தபுராணம் - சரவணப்படலம் - 30 )

சங்ககாலம் தொடங்கியே கார்த்திகை மாதத்தில்  தமிழர்கள் விரதமிருந்து மாலைப்பொழுதில் வீட்டில் விளக்கேற்றி மாலைகளால் வீட்டினை அலங்கரித்து இத்திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடினர் என்பதனை,

“குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர”

 - என நற்றிணை குறிப்பிடும்.  

இந்து சமயத்தைச் சேர்ந்தோர் தாங்கள் ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்காகவும் இறைவனின் திருவருள் சித்தத்தினைப் பெறுவதற்காகவும் மேற்கொள்ளும் வழிமுறைகளுள் குறிப்பிடத்தக்கதே விரதம் இருத்தல் என்பதாகும். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என்னும் பொருளைத் தந்து நிற்கும். இதனை உபவாசம் எனவும் குறித்தல் உண்டு. உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும் சொல்லாகும். எனவே இத்தகைய விரத முறையினைப் பின்பற்றுபவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி உணவினை நீக்கி இறைவன் குறித்த  தியானத்தில் இருத்தல் வேண்டும். மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல் விரதமாகும் என ஆறுமுகநாவலர் விளக்கம் தருவார்.

இவற்றுள் கார்த்திகை விரதம் இருக்கும் முறைமையினைக் கந்த புராணம் விளக்கியுரைக்கும். ஒருமுறை நாரத முனிவர் விநாயகப் பெருமானிடம் சென்று தாம் சப்த முனிவர்களிலும் உயர்வுடைய முனிவராய் மதிக்கப்படுவதற்கு எத்தகைய விரதத்தினை மேற்கொள்ள வேண்டும் என வேண்டி நின்றார். அதற்கு விநாயகர் கார்த்திகை விரதத்தினைப் பன்னிரண்டு ஆண்டுகள் மேற்கொள்ளுமாறு பணித்தார் என்பதனை,

 

“மன்னவன் அதனைக்கேளா முழுதருள் புரிந்து நோக்கி

அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி

பொன்னடி வழிபாடாற்றி பொருவில்

கார்த்திகை

நன்னாள் நோன்மைப் பன்னிரு வருடம் காறும் பரிவுடன் புரிதி என்றார்”

 - என்ற பாடல் விளக்கி நிற்கும்.இத்தகைய விரதத்தினை மேற்கொண்டு நாரதர் மட்டுமே உயர்வு பெற்றார் என்பது இல்லை. உயர்வு பெற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காததாகும். அதனால்தான் கச்சியப்பர் அத்தகைய எண்ணிக்கையை யாரே விளம்புவார்? எனக் குறிக்கின்றார்.

“இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் நோற்று

முப்புவனத்தின் வேண்டும் முறைமையை அடைந்த நீரார்

மெய்ப்படு தொகையை யாரே விளம்புவார்” (கந்த புராணம் - 9970)

இத்தகைய கார்த்திகை விரதத்தினை மேற்கொள்பவர்கள் பரணி நட்சத்திரத்தின் பின் நேரத்தில் ஒருவேளை உணவினை உட்கொண்டு கார்த்திகை நட்சத்திரத்தில் ஆடையுடன் குளத்தில் மூழ்கிக் குளித்துப் பின் தூய்மையான ஆடைகளைப் புனைந்து ஐம்புலன்களையும் அடக்கி குருவின் திருவடிகளை மனதினுள் தியானம் செய்து முருகனை வழிபட்டு அவனின் திறம் கூறும் பாடல்களைப் பாராயணம் செய்தல் வேண்டும்.

இதனை,

“தூசு ஒடு கயத்தில் மூழ்கித் துய்ய வெண் கலைகள் சுற்றி

ஆசு அறு நியமம் முற்றி ஆன்று அமை புலத்தன் ஆகித்

தேசிகன் தனது பாதம் சென்னிமேல் கொண்டு செவ்வேள்

பூசனை புரிந்திட்டு அன்னான் புராணமும் வினவினான் ஆல்”

(கந்த புராணம் - 9963)

என்பதால் அறியலாம். மேலும், கையினால் நீரை முகந்து பருகி தருப்பைப்புல் படுக்கையில் உறங்கி பெண்களை மனத்தினுள் நினையாது மனத்தினுள் முருகனை நினைத்துத் துதித்தல் வேண்டும்.

“கடிப் புனல் அள்ளித் தன்னோர் கை கவித்து உண்டு                                                 

முக்கால் படித்திடு தருப்பை என்னும்

பாயலில் சயனம் செய்து

மடக் கொடி மாதர் தம்மை மறலியா மதித்து வள்ளல்

அடித்துணை உன்னிக் கங்குல் அவதியும் உறங்காது உற்றான்”.

(கந்த புராணம் - 9964 )

பின்னர் அடுத்த  ரோகிணி நட்சத்திரத்தில் காலை வழிபாட்டினை நிறைவு செய்து முருகப் பெருமானின் திருவடிகளை வணங்கி அடியவர்களுடன் பாடல்களைப் பாடித் துதித்து பகலில் உறங்காது விரதத்தினை நிறைவு செய்தல் வேண்டும்.

“அந்த நாள் செல்லப் பின்னர் உரோகிணி அடைந்த காலைச்

சந்தியா நியமம் எல்லாம் சடக்கு என முடித்துக் கொண்டு

கந்த வேள் செம் பொன் தண்டைக் கான் முறை வழிபட்டு ஏத்தி

வந்த மாதவர் களோடும் பாரணம் மகிழ்ந்து செய்தான்”.

(கந்த புராணம் - 9965 )

- என்ற கந்தபுராணப்பாடல் கார்த்திகைத் திருநாள் விரதத்தினை எடுத்துரைக்கும். முருகப் பெருமானுக்கு விரதம் மேற்கொண்டோர் விரதம் இருந்த தன்மையை திருமுருகாற்றுப்படை விளக்குகின்றது.

அறுமுக உருவாய் தோன்றிய முருகப் பெருமானின் ஆறு முகங்களும் அன்பருக்கு அருளவும் அநீதி இழைப்போரை அழிப்பதற்குமாய் அமைந்தது என்பார் நக்கீரர். இருள் மிகுந்த உலகம் ஒளியுடன் திகழவும் அன்பர்கள் தம்மை துதித்து வணங்க அவர்கள் வேண்டியதைத் தந்தருளவும் முறைப்படியும் மந்திர விதிப்படியும் அந்தணர்கள் செய்யும் யாகத்தினை காத்தருளவும் அரிய பொருட்களை துறவிகளுக்கு அறிவித்து திசைகளை விளக்கமுறச் செய்யவும் பகைவர்களாகிய அசுரர்களை கொன்று களவேள்வி புரியவும் வள்ளியுடன் இன்புற்று இருக்கவும் முருகன் ஆறு திருமுகங்களைக் கொண்டான் என்று குறிப்பார் நக்கீரர். இதனை,

“மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,    

பல் கதிர் விரிந்தன்று, ஒரு முகம்; ஒரு முகம்,    

ஆர்வலர் ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி,    

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே;   

ஒரு முகம்    

மந்திர விதியின் மரபுளி வழாஅ     

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம்    

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,    

திங்கள் போலத் திசை விளக்கும்மே;

ஒரு முகம்    

செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி,    

கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே;

ஒரு முகம்     

குறவர் மட மகள், கொடி போல் நுசுப்பின்    

மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே;

ஆங்கு, அம் மூஇரு முகனும், முறை நவின்று

ஒழுகலின்”    

என்ற திருமுருகாற்றுப்படையின் அடிகள் எடுத்துரைக்கும்.

இவ்வாறு அறுமுகம் கொண்ட கடவுள் ஆறுபடை வீடுகளில் எழுந்தருளி அருள்செய்கிறான். இவ் ஆறுபடை வீடுகள் மனிதனின் ஆறு மூலாதாரங்களைக் குறிப்பதாகும். மூலாதாரம் திருப்பரங்குன்றம், சுவாதிஷ்டானம் திருச்சீரலைவாய், மணிப்பூரகம் திருவாவினன்குடி, அநாகதம் திருவேரகம், விசுத்தி குன்றுதோராடல்,ஆக்ஞை பழமுதிர்ச்சோலை என்பதாகும்.எனவே அகமாகிய முகத்தினால் இம்முருகனைத் தரிசனம் செய்தல் வேண்டும். மேலும் புறக் கண்களால் தரிசனம் செய்வதற்காகவே அறுபடைவீடுகளாகிய திருக்கோயில்களில் வீற்றிருக்கிறார். எனவே கார்த்திகை விரதம் இருந்து முருகனின் நாமத்தினைச்  சிந்திப்பவர்கள் முருகப் பெருமானின் அறு முகங்களின் அருளாற்றலைப் பெற்று உயரலாம்.

மேலும், இந்த விரதத்தினை மேற்கொள்பவர்கள் அன்றைய நாளில் அன்னதானம் செய்தால் மிகுந்த பலன்களை  கொடுக்கும். கார்த்திகை நட்சத்திர விரதம் மேற்கொண்டு வருபவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய்கள் மற்றும் தீய சக்திகளின் பாதிப்புகள் அணுகாமை, உடல்நலம், மன நலம், நன்மக்கட் பேறு, வளமான பொருளாதார நிலை போன்றவை வந்தமையும். இந்த விரதத்தை 12 ஆண்டுகள் வரை மேற்கொள்பவர்களுக்கு முருகப் பெருமானின் தரிசனம் கிடைக்க பெற்று, மரணம் குறித்த பயங்கள் நீங்கி இறுதியில் முக்தி நிலை கிடைக்க பெறுவார்கள் என்பது நமது புராணங்கள் உணர்த்தும் உண்மையாகும். கார்த்திகைத் திருநாளில் கந்தவேளை மனத்துள் கொண்டு விரதம் மேற்கொண்டு முருகப் பெருமானின் அருள்பெற்று உய்வோமாக!!

* முனைவர் மா. சிதம்பரம்

Related Stories: