×

தீரா நோய்கள் தீர்க்கும் நவ நரசிம்மர்கள்

*முத்தியால்பேட்டை, புதுவை

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் மூலவராகவும், உற்சவராகவும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார். இதனால் இந்த கோயிலை லட்சுமி ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோயில் என குறிப்பிடுகிறார்கள். முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் அரசமரத்தின் அடியில் எளிமையாக தோன்றிய இக்கோயில் இன்று கோபுரங்களுடன் உயர்ந்து ஒரு முக்கிய ஸ்தலமாகியிருக்கிறது. இந்த கோயிலில் மற்றொரு சிறப்பம்சமும் இருக்கிறது. அந்த சிறப்பம்சம், உலகில் 11 நரசிம்ம மூர்த்திகள் ஒரே இடத்தில் அருட்பாலிக்கும் தலம் என்பதுதான்.

திருவுக்கும் திருவாகிய செல்வத்திருமால் எழுந்தருளிய அவதாரங்களில் ஏற்றமுடையதாகவும், எளிமையானதாகவும் விளங்குவது நரசிம்ம அவதாரம். மற்றைய அவதாரங்களில், குறிப்பாக ராம, கிருஷ்ண அவதாரங்களைக் காட்டிலும் ஏற்றம் உடையது ஸ்ரீ நரசிம்ம அவதாரம். ஏனெனில் தன் பக்தனுக்காக எடுத்த அவதாரம் இது. தன் அடியவன் பல துன்பங்களை அடைந்தாலும், தன் பகைவன் திருந்த மாட்டானா? அவனையும் கடைத்தேற்ற வேண்டுமே! என்ற உயரிய எண்ணத்தோடு காலம் கடத்தினார் ஸ்ரீ நரசிம்மர்.

ஆம். பிரகலாதன் தன் தந்தை இரணியனால் பல வகையில் துன்பப்பட்டாலும், இரணியனை திருத்திடவே பார்த்தார் பகவான். ஆனால் இரணியன் கடைசி வரை திருந்தவே இல்லை. நாராயணன், நாராயணன் என்கிறாயே? இந்த தூணில் இருக்கிறாரா? என ஆவேசமாக கேட்டு பிரகலாதனை இரணியன் சித்ரவதை செய்தான். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, ஆம். இந்த தூணில் நாராயணன் இருக்கிறார் என பிரகலாதன் பதில் அளித்தான். உடனே, தன் பக்தனின் வாக்கினை மெய்யாக்க அங்கிருந்த எல்லா தூண்களிலும் உள்நிறைந்து இருந்தார் ஸ்ரீ மந் நாராயணன். இரணியனின் அரண்மனையில் இருந்த தூண்கள் நிரசிம்ம கர்ப்பம் தரித்தன என்கிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.

அத்தகைய நரசிம்மர் அவதரித்த ஸ்ரீ அகோபில க்ஷேத்திரத்தில் நவ நரசிம்மர்களாய் இன்றும் தரிசனம் தருகிறார். அந்த நவ நரசிம்மர்களுடன் பானக நரசிம்மர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருடன் ஏகாதச ருத்ரர்களுக்கு 11 விதமாக நரசிம்மர் காட்சி தந்தது போலவே 11 நரசிம்மர்களாய் இந்த கோயிலில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். 80 திவ்ய தேசங்களுக்கு மேலாக கால்நடையாக சென்று மங்களசாசனம் செய்த மகான் என்ற பெருமை பெற்றவர் திருமங்கை மன்னன். அவரே அகோபிலத்தை சென்றடைய முடியாது. இதனாலேதான் தெய்வமல்லால் செல்லவொண்ணா சிங்கவேள் குன்றமே என பாடினார். இன்றைய சூழலில் கூட நரசிம்ம அவதாரத்தைக் காண பக்தர்கள் அகோபிலம் சென்றால் ஒரே மூச்சாக 9 மூர்த்திகளை சேவித்து விட முடிவதில்லை.

இந்த குறையை போக்கும் வகையில் பக்தர் ஒருவரின் கனவில் அந்த 9 மூர்த்திகளையும் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் பிரதிஷ்டை செய்யுமாறு பகவான் பணித்தாராம். அதன்படி நவ நரசிம்மர்களும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். கூடுதலாக ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகில் உள்ள மங்களகிரியில் எழுந்தருளியிருக்கும் பானக நரசிம்மரும் இங்கு அருள்புரிகிறார். மேலும் லட்சுமி ஹயக்ரீவர் மூலவராக காட்சியளிக்கும் கருவறையில் ஒருவராக லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கிறார். இவ்வாறு 11 நரசிம்மர்கள் பக்தர்களுக்கு அருள்புரியும் ஓர் அற்புத தலமாக இந்த கோயில் விளங்குகிறது. இங்கு வந்து நரசிம்மர்களை ஒருசேர தரிசித்து வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்’ என்கின்றனர்.

நரசிம்மர்களை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்:

1. ஜ்வாலா நரசிம்மர்: 10 கைகளுடன் தரிசனம் தரும் இந்த நரசிம்மர் இரணியனின் உடலைக் கிழிக்கும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தீராத கடன்கள், தீராத நோய்கள், பகைவர்களின் தொல்லைகள் ஆகியவற்றில் இருந்து காத்தருள்கிறார். சிறந்த தொழிலதிபர்களை உருவாக்குகிறார்.
2. அகோபில நரசிம்மர்: இரணியனை வதம் செய்த பின்பு கடுங்கோபமாக இருந்தவர், பின்னர் சாந்தம் அடைந்து தாயார் மகாலட்சுமியுடன் பிரகலாதனுக்கும், மற்றவர்களுக்கும் தரிசனம் அளித்தார். சுக்கிர தோஷத்தால் ஏற்படும் தோஷங்களை உடனடியாக போக்கி அருட்புரிவார்.
3. மாலோல நரசிம்மர்: சங்குசக்கரதாரியாய் அழகிய கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மனபயத்தைப் போக்கி தைரியத்தை அருள்கிறார்.
4. வராக நரசிம்மர்: சகல கலைகள், இயல், இசை, நாடகத்துறையில் சிறக்க அருள் புரிவார். நல்ல செழிப்பான இல்லங்களில் வாழும் பாக்கியம் அருள வல்லவர்.
5. காரஞ்ச நரசிம்மர்: ஞானம், வைராக்கியம், தீவிர பக்தி ஆகியவற்றை அருள்செய்து யாவரும் வணங்கி போற்றக்கூடிய ஞானிகள், மருத்துவ மேதைகளை உருவாக்க வல்லவர்.
6. பார்கவ நரசிம்மர்: பரசுராமர் இவரை வணங்கி சென்றதாக ஐதீகம் உண்டு. இவரை வழிபட்டால் பாவங்கள் தீர்ந்து நன்மை உண்டாகும். வெளிநாடு சென்று செல்வம் சேர அருள்புரிவார்.
 7. யோகானந்த நரசிம்மர்: பக்த பிரகலாதனுக்கு யோக பாடங்களை கற்றுக்கொடுத்தவர். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்படும் தடைகளை தகர்ப்பார்.
8. சத்ரவட நரசிம்மர்: நாட்டின் தலைமை பதவி, மற்றவர்களுக்கு ஆணையிடும் அதிகாரத்தை வழங்க வல்லவர்.
9. பாவன நரசிம்மர்: மனம் போனபடி நடந்துகொள்வது, தீச்செயல்களை துணிந்து செய்வது போன்ற தீமைகளை தடுத்தாட்கொள்கிறார்.
10. பானக நரசிம்மர்: நாம் அளிக்கும் பானகத்தை பிரசாதமாக ஏற்றுக்கொண்டு நமக்கு மங்கள வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் அளிப்பவர்.

இத்தகைய சிறப்புகள் மிக்க எம்பெருமான்களுக்கு டிசம்பர் 8ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் நரசிம்ம ஸஹஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனையாக நடக்கிறது. கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமையில் எம்பெருமான் தனது மூன்றாவது கண்ணை திறந்து பார்ப்பதாக ஐதீகம் உள்ளது. இந்த நன்னாளில் நடைபெறும் இந்நிகழ்வில் பக்தர்கள் கலந்துகொண்டு பல்வேறு நலன்களைப் பெறலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது.

* உ.வீரமணி

Tags : neo-Narasimharas ,Thera ,
× RELATED தீரா நோய்களை தீர்க்கும் தலங்கள்