பிரிந்த தம்பதி இணைய அருள் தரும் கைலாசநாதர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நித்யகல்யாணி சமேத ஸ்ரீ  கைலாசநாதர் கோயில் உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயி்ல் போன்று இங்கு தனது வலது புறத்தில் நித்யகல்யாணி வீற்றிருக்க கைலாசநாதர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் உற்சவர் சிலைக்கு பின்புறம் கோயில் கட்டுமான பணியின் போது கண்டெடுக்கப்பட்ட ஸ்ரீ தேவி, பூதேவி மற்றும் பெருமாள் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. முன்புறம் பக்தர்கள் நீராட குளமும், கோயில் வளாகத்தில் அலங்கார மண்டபமும் உள்ளது. இந்தியாவில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத முற்றிலும் ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்ச கேடயம் உள்ளது. விழா காலங்களில் போது இந்த கேடயத்தில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். கோயில் நுழைவாயிலில் வரிசையாக உள்ள தூண்களில் தட்சிணாமூர்த்தி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலம், கண்ணப்ப நாயனார், குழல் ஊதும் கிருஷ்ணன் என ஒவ்வொரு சிற்பமும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் மேற்கூரை முழுவதும் வரையப்பட்டுள்ள நவபாஷாண ஓவியங்கள் இன்றும் பழமை மாறாமல் உள்ளன.  

தல வரலாறு

நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த செல்லப்ப செட்டியார் இமயமலைக்கு புனித யாத்திரை சென்றார். அங்குள்ள ஒரு குளத்தில் பானலிங்கம் என அழைக்கப்படும் கையடக்க சிவலிங்க சிலையை கண்டெடுத்தார். தேவகோட்டை திரும்பிய அவர் அப்பகுதியில் ஒரு கோயிலை எழுப்பி, அதில் பானலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முன்னதாக இந்த கோயி்ல் கட்டுமான பணிக்கு நிலத்தை தோண்டிய போது, கிடைத்த ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் சிலைகளும் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அஷ்டமி தினத்தன்று சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் முடிந்த பின்னர், கோயில் பிரகாரத்தில் 100 இலைகளில் உணவு பரிமாறப்படுகிறது. இதில் முதல் இலையில் உள்ள உணவு சுவாமிக்கும், மற்றவை பக்தர்களுக்கும் வழங்கப்படுவது கோயிலின் சிறப்பாகும்.

பிரிந்த தம்பதியர் இணைவர்

இந்த கோயிலில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு 4 கால பூஜைகள் நடக்கின்றன. விசேஷ தினங்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகளும் நடக்கின்றன. திருமணம் ஆகாதவர்கள் இந்த கோயிலில் உள்ள பள்ளியறையில் தொடர்ந்து 7 வாரங்கள் மல்லிகைப்பூ மாலை அணிவித்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர், இங்கு வந்து வழிபட்டால் மீண்டும் இணைவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Related Stories: