×

வீட்டில் விநாயகர் பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்...

நமது மதத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு வினைகளை தீர்க்கும் தெய்வமான விநாயகரை வழிபட்ட பின்பு செயல்களை மேற்கொள்வது மரபு. அந்த விநாயகரை வழிபடுவதற்கு சிறந்த நாளாக இருப்பது விநாயகர் சதுர்த்தி தினமாகும். ஆனால் வருடத்தில் எல்லாக்காலங்களிலும் விநாயகரை வழிபடுவதால் நன்மைகள் அதிகமுண்டு. அந்த வகையில் நமது வீட்டில் “விநாயகர் பூஜை” செய்யும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் பலன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் விநாயகர் பூஜை செய்வதற்கு சிறந்த தினமாக திங்கட்கிழமை இருக்கிறது. ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த பூஜையை செய்வது மிகவும் சிறப்பான பலன்களை உண்டாக்கும். மாதந்தோறும் வரும் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களிலும் இந்த பூஜையை செய்யலாம். இந்த பூஜை செய்து முடிக்கும் வரை உண்ணாநோன்பு இருப்பது பூஜையின் பலனை அதிகரிக்கும். விநாயகர் பூஜை நீங்கள் செய்ய நினைக்கும் நாளன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு மர பீடத்தை அமைத்து, அதன் மீது ஒரு தூய்மையான வெள்ளை துணியை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய விநாயகர் விக்ரகத்தையோ, படத்தையோ வைத்து மலர்களால் அலங்கரித்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, இரண்டு பக்கமும் அகல்விளக்கு அல்லது குத்துவிளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இப்போது தூபங்கள் கொளுத்தி செம்பு பாத்திரத்தில் இருந்து சிறிது நீரை உங்கள் வலது உள்ளங்கையில் ஊற்றி கொண்டு “ஓம் கம் கண்பத்யே நமஹ” என்கிற மந்திரத்தை 21 முறை துதித்து, கையிலிருக்கும் நீரை விநாயகர் விக்ரகம் அல்லது படத்தின் மீது தெளித்து, மலர்களை தூவி விநாயகரை வழிபட்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, கொழுக்கட்டை போன்றவற்றை விநாயகருக்கு முன்பு நைவேத்தியம் வைத்து விநாயகரை அவருக்குரிய பீஜ மந்திரங்களை 1008 முறை உரு ஜெபித்து வணங்க வேண்டும்.

இந்த மந்திர உரு ஜெபித்து முடித்ததும் விநாயகருக்கு கற்பூரம் கொளுத்தி ஆரத்தி எடுத்து, சில மலர்களை விநாயகர் சிலையின் பாதத்தில் சமர்ப்பித்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விநாயகரை வணங்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு நைவேத்திய பொருட்களை பிரசாதமாக குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். பூஜை செய்த மறுதினம் விநாயகர் விக்கிரகம் அல்லது படத்திற்கு மலர்களை சமர்ப்பித்து, தீபமேற்றி உங்கள் வீட்டிற்கு எழுந்தருளியதற்காக நன்றி கூறுதல் வேண்டும்.

வினைகள் அனைத்தையும் தீர்ப்பவர் விநாயகர். விநாயகர் பூஜையை மேற்கூறிய முறையில் தொடர்ந்து செய்து வருபவர்களின் இல்லத்தில் துஷ்ட சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் நுழையாது. வீட்டில் வறுமை ஏற்படாது. தனம், தானியங்களின் சேர்க்கை அதிகரித்து கொண்டே செல்லும். எந்த ஒரு காரியத்திலும் தடங்கல்கள் ஏற்படாமல் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை தொடர்ந்து நீடிக்கும். அனைத்து நன்மைகளும் உங்களை தேடி வரும்.

Tags : Ganesha ,home ,
× RELATED அளப்பரிய பலன்களை தரும் வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு!!