மகத்தான பலன்கள் தரும் பிரார்த்தனை விளக்குகள்

* ஆட்சிலிங்கம்

மாவிளக்குகள் : அரிசிமாவை வெல்லம், இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி இதன் மேற்பக்கத்தைக் குழிப்பர். இப்படி இரண்டு உருண்டைகளைச் செய்து குழிகளில் நெய்விட்டு அதில் தாமரைத் தண்டு திரியினால் விளக்கேற்றுவர். இவற்றை ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காயுடன் சுவாமி முன்னிலையில் வைத்து வணங்குகின்றனர். இவை மாவிளக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் அம்பிகை ஆலயங்களில் மாவிளக்குகள் ஏற்றப்படுகின்றன.

மாவிளக்கை ஏற்றுவதால் உடல் நோய்கள் நீங்கி தேக சுகக் உண்டாகும் என்று நம்புகின்றனர்.தேங்காய் விளக்குகள் : தேங்காயைச் சமபாதியாக உடைத்து அம் மூடிகளில் நெய்விட்டு விளக்கேற்றுகின்றனர். இது சிறு தெய்வ வழிபாட்டில் அதிகம் காணப்படுகிறது.எலுமிச்சைப் பழ விளக்குகள் : எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி சாறைப் பிழிந்து விட்டு மூடியை எதிர் புறம் திருப்பி அம்மூடியில் நெய் நிறைத்து விளக்கேற்றுகின்றனர். துர்க்கை சந்நதியில் இவ்வகை விளக்குகள் அதிக அளவு ஏற்றப்படுகின்றன. இப்படி ஏற்றுவதால் வறுமை விலகும். தடைப்பட்ட திருமணம் விரைவாக நிகழும். எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம் என்று நம்பப்படுகிறது. இவற்றைச் சுவர்ணதீபம் என்றும் அழைப்பர்.

மண்டை விளக்குகள் ; மண்டுதல் என்பதற்கு நிறைந்திருத்தல் என்பது பொருள். ஒரு புதிய தூய மண்சட்டியைக் கழுவி காய வைத்து அரிசிமாவுடன் நாட்டுச் சர்க்கரையை கலந்து அதில் இட்டு அதன் நடுவில் குழி செய்து நெய்யூற்றி மலர்களுடன் வைப்பர் அதற்கு வெற்றிலை பாக்கு வைத்து கற்பூரம் காட்டி வணங்குவர். பின்னர் அதை கையில் வைத்துக் கொண்டு ஆலயத்தை வலம் வருவர். இதற்கு மண்டை விளக்கெடுத்தல் என்பது பெயர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக் கிழமைகளில் மண்டை விளக்கு எடுக்கும் பிரார்த்தனை இன்றும் உள்ளது.

ஆயிரக் கணக்கான அன்பர்கள் மண்டை விளக்கு எடுத்துக் கொண்டு ஆலயத்தை வலம் வருகின்றனர். தோரண தீபங்கள் ; மங்கல நாட்களில் ஆலயம், அரண்மனை, வீடுகள் முதலியவற்றிலுள்ள வாயிலின் நிலைகளின் இருபுறத்திலும் மேல் உத்திரத்திலும் மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றைக் கட்டி அலங்கரிப்பர். இது தோரணம் எனப்பட்டது. பின்னாளில் மகர மீனின் வாயிலிருந்து புறப்படும் கொடிகள் பின்னியிருப்பது போன்ற கலை வேலைப்பாடுகள் கல், கதை மரம் ஆகியவற்றால் செய்யப்பட்டன. இதையொட்டி இந்த அலங்காரம் மகர தோரணம் எனப்படுகிறது.

இவற்றில் வரிசையாக விளக்குகளை அமைக்கும் வழக்கம் வந்தது. வாயிற்படிகளை ஒட்டி மேலே குறுக்காகவும் இரண்டு புறமும் நெடுகிலும் அமைக்கப்பட தீபங்களின் வரிசை தோரண தீபங்கள் எனப்பட்டன. இவற்றைச் சரவிளக்குகள் எனவும் அழைக்கின்றனர். இவை வாயில்களை அலங்கரிக்கும் தீபமாலையாக இருப்பதால் ‘‘வாசல் மாலைத் தீபங்கள் என்றும் அழைக்கப்பட்டன. இந்நிலை வளர்ந்து (உச்சியில் யாளிமுகமும், இருபுறமும் மகர மீன்களும் கொண்ட அகலமான பெரிய திரு வாசிகள் அமைக்கப்பட்டு அதில் அனேக அகல்கள் பொருத்தப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டன. இவையும் தோரண தீபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. திருவண்ணாமலை, திருவிடைமருதூர் மயிலாப்பூர் முதலிய தலங்களில் இத்தகைய விளக்குகளைக் காணலாம். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அம்பிகை சந்நதிக்கு நேராக தீபத்திருவாசி உள்ளது.

Related Stories: