தீபங்கள் பேசட்டும்

கண்கவரும் தீபங்கள்
கண்சிமிட்டும் கார்த்திகை
மணிமாடத்தில் கொலுவாகி
அருளணியாகும் தீபங்கள்
அண்ணாமலை வாருங்கள்

வெள்ளிச்சரிகை பனிப்பூ
வாசத்தை பரவ விட்டு
அள்ளிச்சூடும் ஆன்மிக தீபம்
அறிவுவானில் சுடரும் தீபம்
ஆகாயவெளி அமைதி தீபம்

பசுமரத்தில் பூ,, கனி தீபம்
பருவம் காணும் அழகுதீபம்
ஆசை எரிக்கும் ஞானதீபம்
தீமை பொசுக்கும் தேவதீபம்
ஊமை மனதில் பேசும்தீபம்

இளம்கன்று வீரதீபம்
இளங்குழந்தை புன்னகை தீபம்
இறைகண்கள் ஆட்சிதீபம்
இனியசொல் உறவுதீபம்
இருக்கிறான் என்பது நம்பிக்கைதீபம்

இல்லம்  காக்கும்  நெய்தீபம்
உள்ளம் வாழ்த்தும் அகண்டதீபம்
வாழ்வில் ஒளிரும் பரணிதீபம்
தலைமுறை வாழும் தர்மதீபம்
தடைகள் விலக்கும் சத்யதீபம்

கோபுரம்தோறும் கலைதீபம்
கோயில் உள்ளே ஆத்மதீபம்
கோலத்தில் மாட்சிதீபம்
குறைகள் தீர்க்கும் அகல்தீபம்
குன்றின் மீது மகாதீபம்

தாய்க்கு அன்புதீபம்
தந்தைக்கு உழைப்புதீபம்
குருவுக்கு அறிவுதீபம்
மனைவிக்கு தியாகதீபம்
மனிதருக்கு மனிதம் தீபம்

சுற்றி ஒளி பரவட்டும்
தீபங்கள் நின்று பேசட்டும்
பற்று மனதில் நீங்கிட
தீபத்தை கண்கள் பருகட்டும்
திருப்தி மனதை தழுவட்டும்

அச்சமில்லை அருளுண்டு
அருணாசலனை அணுகுவோம்
பஞ்சபூதனை தீபமாய்
ஏற்றி வணங்கிடுவோம்!

* விஷ்ணுதாசன்

Tags :
× RELATED எந்த தோஷம் நீங்க எத்தனை தீபம் ஏற்றவேண்டும் தெரியுமா?