×

தீபத்தின் பயன்கள்

தீபத்தினை ஏற்றப் பயன்படும் விளக்குகள் இன்றைய நவீன காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் வருகின்றன. வெள்ளியால் ஆன விளக்குகள், பஞ்சலோக விளக்குகள், பாவை விளக்கு, காமாட்சி விளக்கு, கோடி விளக்கு என்று பல வகையான விளக்குகளைக் காணமுடிகிறது.இவற்றுள் மண்ணினால் ஆன விளக்கானது துன்பத்தினைப் போக்கும். வெள்ளி விளக்கு திருமகளின் அருளைக் கொண்டு வந்து சேர்க்கும்.பஞ்சலோக விளக்கு தேவதைகளின் அருளைத் தரும். வெங்கல விளக்கு நல்ல உடல் நலத்தினைத் தந்து நிற்கும்.

இரும்பினால் ஆகிய விளக்கானது கிரக தோஷ நிவர்த்தியைத் தரும். விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டுப் பாகத்தில் திருமாலும் நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கின்றனர். மேலும் தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும் ஒளியில் கலைமகளும் வெப்பத்தில் பார்வதியும் உறைவதாய் ஆன்மிக நூல்கள் குறிப்பிடுகின்றன.  விளக்குகள் பொதுவாக ஐந்து முகங்களைக் கொண்டவையாய் அமைந்திருக்கும். இத்தகைய ஐந்து முகங்களுக்குமான காரணங்களையும் அவற்றை ஏற்றுவதால் பெறும் பயன்களையும் மிகச் சிறப்பாக நமது முன்னோர்கள் எடுத்துரைத்திருக்கின்றனர். ஒரு முக விளக்கினை ஏற்றுவதால் குடும்பத்தில் மத்திமமான பயன்கள் கிடைக்கும். இரண்டு முக விளக்கினை ஏற்றுவதன் மூலம் குடும்ப ஒற்றுமை உருவாகும்.

மூன்று முக விளக்கு வீட்டில் குழந்தைச் செல்வங்களை மிகுவிக்கும். நான்கு முக விளக்கானது மாடு, மனை முதலிய செல்வங்களை உருவாக்கும். ஐந்து முக விளக்கானது இல்லத்தில் மகாலெட்சுமியின் பார்வையை மிகுவித்துச் செல்வச் செழிப்பினைக் கொண்டு வந்து சேர்க்கும். தீபம் ஏற்றும் பொழுது நாம் பெரும்பாலும் வெண்மையான பஞ்சினால் ஆகிய திரிகளையே பயன்படுத்துகிறோம். ஆனால் நமது முன்னோர்கள் இறைவனிடம் நாம் வேண்டும் வரங்களுக்கு ஏற்ப பல்வேறு வகையான திரிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். மஞ்சள் நிறம் என்பது சக்தியின் நிறம் ஆகும். மஞ்சள் நிறப்பொருள்களில் அம்பாள் உறைகிறாள்.

எனவே, மஞ்சள் நிறத் திரிகளைப் பயன்படுத்தினால் அன்னையின் அருள்கிடைப்பதோடு தொடங்கிய செயல்களை வெற்றியாய் முடித்துத் தருவாள். சிவப்பு நிறம் கொண்ட திரிகளைக் கொண்டு தீபம் ஏற்றி வழிபடுவோமேயானால் இல்லங்களில் தடைபட்டு நின்ற திருமணங்கள் விரைந்து கைகூடும். வாழைநாரினால் செய்யப்பெற்ற திரியினை ஏற்றி வழிபாடு செய்தால் குழந்தைப் பாக்கியம் பெறலாம். பம் ஏற்றுவதற்கு  வெள்ளெருக்கு மிகச் சிறந்ததாகும். இதனால் தீபம் ஏற்றி வழிபட செல்வங்கள் பெருகும். தாமரை தண்டினால் செய்யப்பெற்ற திரிகொண்டு தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் அறியாது செய்த  தெய்வக் குற்றங்களும் நீங்கும். தீய சக்திகள் நம்மை விட்டு அகலும்.

இல்லங்களில் தீபங்களை ஏற்றும் முறை என்று ஒன்று உண்டு. அதன்படி  தீபத்தினை எந்தச் சூழலிலும் தென்திசை நோக்கி ஏற்றுதல் கூடாது. வடதிசை நோக்கி ஏற்றப்படும் தீபம் மனிதனுடைய அறிவாற்றலை மிகுவிக்கும். கிழக்குத் திசையில் ஏற்றப்படும் தீபம் மனித வாழ்வில் ஏற்படும் துன்பங்களை நீக்கி இன்பங்களைத் தரும். மேற்குத் திசையில் ஏற்றப்படும் தீப ஒளியானது கடன் தொல்லைகளை நீக்கியருளும்.தீபத்தினைக் கற்பூரம் காட்டி வழிபாடு செய்யும் பொழுது,

திங்கள் ஜோதி தினகரன் ஜோதி நீ
அங்கியில் ஜோதி நீ அனைத்திலும் ஜோதி நீ
எங்களுள் ஜோதி நீ ஈஸ்வர ஜோதி நீ
சுங்கில ஜோதி நீ கற்பூர ஜோதி நீ

 - எனக் கூறி வழிபட வேண்டும். விளக்குகள் தெய்வத்தன்மை பெற்றவை. எனவே அவற்றை அணைப்பதற்கு முன்னம் அதற்கான விதிகளைத் தெரிந்து கொள்ளல் சிறப்பு. தீபத்தை ‘அணைத்தல்’ என்று சொல்லுதல் மங்கல வழக்கு இல்லை என்பதற்காக தீபத்தினை ‘மலையேற்றுதல்’ என்று கூறுவர். இவ்வாறு தீபத்தினை மலையேற்றும்போது வெறும் வாயினால் ஊதி மலையேற்றக்கூடாது. பூ அல்லது பால் துளியைக் கொண்டுதான் மலையேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது அம்பாளின் நாமத்தினை மனதிற்குள் சொல்லுதல் சிறந்த
பலன்களைத் தரும்.

இவ்வாறு வாழ்வியல் பயன்களையும் ஆன்மிகப் பயன்களையும் தந்து நிற்கும் தீப வழிபாட்டின் அருமையை நாம் உணரும் வகையிலே வருடத்திற்கு ஒருமுறை, ஐம்பெரும் பூதங்களுள் நெருப்பின் வடிவமாய் இறைவன் காட்சி தரும் திருஅண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அத்தீப ஒளிவெள்ளமாகிய இறைவனின் அருட்பிரகாசத்தை மனத்துள் வாங்கி அண்ணாமலையாரின் அடிக்கமலம் சென்று இறைஞ்சி நாளும் நம் இல்லத்தில் தீபமேற்றி உள்ளம் நிறைவோம்! உயர்நலம்  
பெறுவோம்.!

உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே.

Tags : Deep ,
× RELATED அடுத்தடுத்து தொடரும் ஆழ்கடல்...