அந்த இரண்டு அறிவுரைகள்!

இஸ்லாமிய வாழ்வியல்

கணவனுக்கு மனைவி நிறைவேற்ற வேண்டிய உரிமைகள்- கடமைகள் குறித்தும், மனைவிக்குக் கணவன் நிறைவேற்ற வேண்டிய உரிமைகள் கடமைகள் குறித்தும் மார்க்கம் பல பயனுள்ள அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.இஸ்லாம் கூறும் குடும்பவியல் சட்டங்கள் குறித்துப் பல நூல்கள் உள்ளன. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இல்லறம் நல்லறமாய்த் திகழ வேண்டும் எனில் கணவன் என்ன செய்ய வேண்டும், மனைவி என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் மிக அழகாக, எளிமையாக, தெளிவாகச் சொல்லியுள்ளார்.கணவன் மனைவியைத் தன் சக்திக்கு ஏற்ப பராமரிக்க வேண்டும், அவளுக்கு உணவும்  உடையும் அளிப்பதில் கஞ்சத்தனம் காட்டக் கூடாது, அவளை அடிக்கக் கூடாது, குறிப்பாக முகத்தில் அடிக்கக் கூடாது, பொது இடத்தில், உறவினர்களுக்கு இடையில் மனைவியை மட்டம் தட்டக் கூடாது....இப்படிப் பல பொறுப்புகளைக் கணவன் மீது மார்க்கம் சுமத்துகிறது.

அதே போலத்தான் மனைவிக்கும்.கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும், குழந்தைகளுக்குக் கல்வி- ஒழுக்கப் பயிற்சி அளிக்க வேண்டும், கணவனின் பேருபகாரங்களைக் குறைத்து மதிப்பிடும் வகையில், “உங்களைக் கட்டிக்கிட்டு என்ன சுகத்தைக் கண்டேன்” போன்ற சொற்களை வெளிப்படுத்தக் கூடாது.... இவையெல்லாம் மனைவிக்கு மார்க்கம் அறிவுறுத்தும் செய்திகள்.இத்தகைய அறிவுரைகளில் குறிப்பாக இரண்டு செய்திகளை இறைத்தூதர் அவர்கள் பெண்களுக்குச் சொல்லியுள்ளார்கள். அவற்றைக் “கணவனின் உரிமைகள்” என்றே நபிகளார் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த இரண்டை மட்டும் கடைப்பிடித்தாலே போதும், குடும்பத்தில் புயல் வீசுவதைத் தவிர்த்துவிடலாம்.அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்:

1. கணவனின் உரிமை என்பது (அதாவது மனைவி நிறைவேற்ற வேண்டிய கடமை) கணவனின் விரிப்பில் அவன் விரும்பாதவர்களை உட்கார வைக்கக்கூடாது.

2. கணவன் விரும்பாதவர்களை வீட்டில் அனுமதிக்காமல் இருப்பது. (ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத்)

இன்றைய நாளிதழ்களை புரட்டிப் பார்த்தால் குடும்பச் சீரழிவுகள் பற்றிய செய்திகள் வராத நாளே இல்லை. “கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி கைது” போன்ற செய்திகளை எத்தனையோ முறை படித்திருப்போம்.இந்தச் செய்திகளைச் சற்று உள்ளே சென்று ஆய்வு செய்தால் சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். ஒன்று, அந்தக் கள்ளக் காதலன் கணவனின் நண்பனாக இருப்பான்; அல்லது, “இதோ பார்..அவன் ரொம்ப மோசமானவன். அவன் வந்தால் வீட்டுக்குள்ளேயே அனுமதிக்காதே” என்று கணவன் எச்சரித்த ஆசாமியாகத்தான் இருப்பான்.லட்சுமண ரேகையைத் தாண்டினால் ஆபத்துதான். அது இதிகாசமாக இருந்தாலும் சரி, இன்றைய சகவாசமாக இருந்தாலும் சரி. அதனால்தான் நபிகளார் கூறினார்: “எந்தக் காரணத்தைக் கொண்டும் கணவன் விரும்பாத ஆசாமிகளை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்.”

‘கணவரின் நண்பர் ஆயிற்றே, கணவரின் அலுவலக மேலாளர் ஆயிற்றே, கணவரின் தூரத்து சொந்தம் ஆயிற்றே...’ என்றெல்லாம் எண்ணி அந்நிய ஆண்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. வீட்டிற்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது எனில் படுக்கையறை வரை அழைத்துச் சென்று உட்கார வைப்பது எத்ததுணை அறிவீனம் என்பதைச் சொல்லவே தேவையில்லை. இந்தச் செய்தி கணவனுக்குத் தெரிந்தால் தேவையில்லாத சந்தேகங்கள், கோபம், சண்டை, சச்சரவு....! பிறகு குடும்பத்தில் அமைதி என்பது கானல் நீர்தான்.இறைத்தூதரின் கட்டளையைப் பின்பற்றி இல்லற வாழ்வை இனிமையாக்குவோம்.

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“ஒரு மனிதன் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளி ஆவான். ஒரு பெண்  தன் கணவரின் இல்லத்திற்கும் அவரது பிள்ளைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். உங்கள் அனைவரிடமும் அவரவர் பொறுப்புகள் குறித்து(மறுமையில்) கேள்வி கேட்கப்

படும்.” - நபிமொழி

Related Stories: