ஊரையே அடக்கி ஆளும் ஊரடச்சி அம்மன்

குழுமணி, திருச்சி

நம்ம ஊரு சாமிகள்

திருச்சியை அடுத்த குழுமணி கிராமத்தில் காவல் தெய்வமாக நின்று அருள்பாலிக்கிறாள் ஊரடச்சி அம்மன். குழுமணி ஊரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் நிலத்தைப் பயன்படுத்தும் உழவர்கள் உழுகிறபோது கொலுச்சிலையிலிருந்து தோன்றியதால் இந்த ஈசனுக்கு கொலுமுனை ஈசன் என்ற பெயரும் உண்டு. கொலுமுனை என்பதே காலப்போக்கில் குழுமணி என்று ஆயிற்று என்பர்.இவ்வூரில் உள்ள காவல் தெய்வங்களில் வெள்ளம் தாங்கி அம்மனும் ஒன்று. உய்யக்கொண்டான் ஆற்றில் வெள்ளம் வழிந்தோடும் துறையிலிருந்து மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறபோது அந்த வெள்ள நீர் இக்கோயில் வாசல் வரை வந்து திரும்புகிறது. ஊருக்கும் ஊரிலுள்ள மக்களுக்கும் ஏற்படும் ஆபத்தை தடுக்க வெள்ளத்தால் வரும் கேட்டினை அழிப்பதற்கே இந்த அம்மன் வெள்ளத்தை தாங்குவதால் வெள்ளந்தாங்கி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

இக்கோயிலுக்கு தென்கிழக்கு திசையில் உள்ளது குளுந்தலாயி அம்மன் கோயில். ஆகம முறைப்படி இந்த அம்மன் குடிக்கொண்டிருக்கும் தென்

கிழக்கு மூலை அக்னி மூலை. கொழுந்து விட்டு எரியும் அக்னி அங்கு குடியிருக்கும் மக்களை கொடுமை படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், ஊர் குளிர்ச்சியோடு இருக்க வேண்டும் என்பதால் அங்கே நிலையம் கொண்டு அருள்பாலிக்கும் அம்மனே இந்த குளுந்தலாயி அம்மன். இந்த ஆலயங்களுக்கு முத்தாய்ப்பாய் ஊரின் வடமேற்கில் அமைந்துள்ளது ஊரடச்சியம்மன் கோயில். ஊரை அடைத்து காவல் செய்கின்ற அம்மன் என்றும் தீய சக்திகளை அழித்து மக்களை காப்பாற்றும் தெய்வமாகவும் இருப்பதால் இத்தெய்வத்தின் முடியில் தீ ஜுவாலை வீசுவதாகவும், அதன் காலடியில் மகிஷாசுரன் என்னும் அரக்கனைக் கொன்று உலகத்தை காப்பாற்றிய பராசக்தியின் வடிவம் இது என்றும் மக்கள் கூறுகிறார்கள். அடை காக்கும் கோழி தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் எப்படிக் காக்குமோ அதுபோல் இந்த அம்மன் ஊரை அடை காக்கின்ற காரணத்தினால் ஊரடச்சியம்மன் என்று அழைக்கப்படுகின்றாள்.

ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பெரிய மகாமண்டபம் இரு பிரிவுகளாகக் கட்டப்பட்டுள்ளது. இடையே நெடிதுயர்ந்த குதிரை சிலை வண்ண மயமாக நிற்கிறது. ஆலய திருச்சுற்றின் மேற்கு திசையில் கன்னிமூலை கணபதி, ராஜாளி கருப்பு, மதுரைவீரன், பொம்மி சந்நதிகளும் கிழக்கு திருச்சுற்றில் காத்தவராயன், கருப்புசாமி, பனையடிகருப்பு ஆகியோரின் சந்நதிகளும் உள்ளன.தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக விளங்குகிறாள் இந்த ஊரடச்சி அம்மன்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. குழந்தைப் பேறு இல்லாதப் பெண்கள் ஆறு பௌர்ணமி நாட்களில்   அன்னையின் சந்நதிக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபட அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது என்கின்றனர் பக்தர்கள். பின் அவர்கள் தாய்மை அடைந்ததும் மூன்றாவது மாதம் அன்னைக்கு வளைகாப்பு இட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி தங்கள் நன்றிக்கடனை தெரிவித்துக் கொள்கின்றனர்.இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் பனையடிகருப்பு வியாபாரிகளின் கண் கண்ட தெய்வம். ஆம். இவரை ஆராதித்து வணங்குவதால் தங்களது தொழிலில் நிச்சயம் முன்னேற்றம் அடைந்து வெற்றி பெறலாம் என்று நம்புகின்றனர்

பக்தர்கள்.பனையடிக் கருப்பு பூந்தப்பனை மரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் ஊரடச்சி அம்மனின் ஏவலாளி. அநீதி தலை தூக்கும் போது மக்களின் அச்சங்களைப் போக்குவதற்காக அம்மன் அனுப்பும் ஏவலாளியே பனையடிக் கருப்பு.  இரவு வேளையில் நடுநிசியில் வெள்ளைக் குதிரையில் பயணித்து வருபவர் இந்த பனையடிக் கருப்பு.  ஆலயத்தின் வடகிழக்கில் வெளியே நிறைய சூலங்களுடன் காட்சி தருகிறார் கருப்பண்ணசாமி. குல மக்கள் ஆடுகளை பலியிட்டு இந்த கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.ஊரடச்சி அம்மன் கோயில் திருச்சி நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கும் குழுமணி கிராமத்தில் அமைந்துள்ளது. குழுமணி ஊர் பஸ் நிறுத்தத்திலிருந்து ½ கி.மீ சென்றால் ஊரடச்சி அம்மன் கோயிலை அடையலாம்.

Related Stories: