நிறம் மாறும் விநாயகர்

கேரளபுரம், தக்கலை, கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ளது கேரளபுரம். இவ்வூரில் நிறம் மாறும் அதிசய விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை, ஆறு மாதம் வெள்ளையாகவும், ஆறு மாதம் கருப்பாகவும், காட்சி தருகிறது. விநாயகர் சிலை நிறம் மாறுவதை பொறுத்து, அங்குள்ள அரச மரமும், கிணற்று நீரும், நிறம் மாறுவதாக நம்பப்படுகிறது.சுமார் 200 வருடங்களுக்கு முன்பு திருவிதாங்கூர் மன்னர் வீரகேரளவர்மா, தன்னுடைய அரண்மனை தந்த்ரியுடன் ராமேஸ்வரம் சென்றார். அங்கு இருவரும் கடலில் குளித்தனர். கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது மகாராஜாவின் காலில் ஏதோ பாறை இடறியிருக்கிறது.

ஆட்களை விட்டு அந்தப் பாறையைக் கரைக்கு எடுத்து வரச்சொல்லி பார்த்திருக்கிறார். அது ஒரு தெய்வச்சிலை போன்று காட்சியளித்தது. கண், மூக்கு, வாய் இல்லாத சாளக்கிராமம். தந்த்ரி மூலம் பிரஸ்னம் பார்க்கப்பட்டது. பிரஸ்னம் பார்த்தபோது ‘‘இது சந்திர காந்தக் கல். இது ஸ்ரீ கணபதி வடிவமாக சில காலத்தில் மாறும்!’’ என்று பிரஸ்னம் பார்த்துச் சொன்னார் தந்த்ரி. உடனே மன்னர் வீரகேரளவர்மா கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள தனது பெயரில் உருவான கேரளபுரத்தில் உள்ள ஸ்ரீ மகாதேவர் சிவாலயத்தின் வெளிச்சுற்றுப் பிராகாரத்தில்  பெரிய அரச மரத்தின் அடியில் அந்த விநாயகரை பிரதிஷ்டை செய்தார்.

இந்த விநாயகர் ஆறு மாத காலத்தில் பெரிய உருவமாக வளர ஆரம்பித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தொடர்ந்து கண், காது, துதிக்கையாவும் தோன்றின. முடிவில் விநாயகர் உருவமாக மலர்ந்தது. இதனையடுத்து தான் இந்த விநாயகர் ஆறு மாதங்களுக்கு வெண்மை நிறத்திலும், அடுத்த ஆறு மாதங்களுக்கு கருப்பு நிறத்திலும் மாறி மாறிக் காட்சியளிக்கிறார். இதனாலேயே இவருக்கு ‘ஸ்ரீ அற்புத விநாயகர்’ என்ற பெயர் சூட்டிப் போற்றுகிறார்கள் பக்தகோடிகள்.  

தை முதல் ஆனி வரை உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாய காலத்தில் கருப்பு நிறமாகவும் மாறி பக்தர்களுக்கு அருள் புரிகிறார். நிறம் மாறுவதால் இந்த விநாயகர் அற்புத விநாயகர் என்றும் அதிசய விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கருப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து சிறிது சிறிதாக நிறம் மாறி முழுமையாகக் கருப்பாகிறது. இந்த அதிசய விநாயகரை ஆய்வு செய்த புவியியல் துறை நிபுணர்கள், திருமேனி (சிலை) உருவாக்கப்பட்ட கல் சந்திர காந்தம் என்னும் அபூர்வ வகையைச் சார்ந்தது என்கிறார்கள்.

ஆலயத்தின் மூலவர் ஸ்ரீ மகாதேவர் என்ற பெயரில் விளங்கும் சிவலிங்கம்தான். ஆனால், இங்கு மூலவரைவிட, ஸ்ரீ  அற்புத விநாயகருக்குத்தான் பெயர், புகழ், பெருமை எல்லாம். தட்சிணாயண காலம் துவங்கும்போது பிள்ளையாரின் தலை உச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்குகிறது. ஓரிரு மாதங்களில் பிள்ளையார் பூரணமாக வெள்ளை நிறத்துக்கு மாறிவிடுகிறார். ஆறாவது மாதம் வரை இந்த வெள்ளை நிறம் அப்படியே இருக்கும். உத்தராயண காலத்தில் பிள்ளையாரின் நிறம், கால் பாதத்தில் தொடங்கி, மேல் நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக கருப்பு நிறத்துக்கு மாறும்.

இன்னொரு அற்புதமும் உண்டு. பிள்ளையார் வெண்மை நிறத்துக்கு மாறும்போது, ஆலய வளாகத்துக் கிணற்றில் உள்ள நீர் கருப்பு நிறத்துக்கு மாறுகிறது. பிள்ளையார் கருப்பு நிறத்துக்கு மாறும்போது, கிணற்று நீர் ஆற்றில் பெருக்கெடுக்கும் புது வெள்ளம் போல் நுங்கும் நுரையுமாக மாறி, வெள்ளை வெளேரென்று காட்சி கொடுக்கிறது. இந்தக் காலத்தில் கிணற்றுக்குள் பார்த்தால், தரை வரை தெளிவாகத் தெரியும்!

ஆலயத்தின் மேல்சாந்தியான ஆர்.கிருஷ்ணன் நம்பூதிரி நம்மிடம், “இங்குள்ள விநாயகர் எல்லா விநாயகரைப் போலவும் மோதகப் பிரியர். கதலி, உண்ணியப்பம் ஆகியவை இவருக்கு விசேஷமாகப் படைக்கும் நிவேதனங்கள். இங்கு கணபதி ஹோமம், சதுர்த்தசி பூஜை ஆகியவை விசேஷம். மாதா மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தியும், ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற கோயில்களில் ஆடி மாதம் செவ்வாய்க் கிழமைகளில் விசேஷ பூஜைகள் செய்வார்கள். இங்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது.

 இக்கோயிலில், ‘சீவேலி’ எனப்படும் சுவாமி ஊர்வலம் நடத்துவதில்லை. ஆலயத்தில் நுழைந்ததும் உள்ளே கருவறையில் ஸ்ரீ  மகாதேவர், லிங்க வடிவில் காட்சி கொடுக்கிறார். வெளிப் பிராகாரத்தில் இடது புறமாகச் சுற்றிவரத் தொடங்கினால், முதலில் தென்படுவது பெரிய அரச மரத்தடியில் காணப்படும் ஸ்ரீ  அற்புத விநாயர் சந்நதிதான். இதைத் தாண்டிச் சென்றால், நாகர், சப்த கன்னிகைகள் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

ஆலய நடை அதிகாலை ஐந்து மணிக்குத் திறந்து, 10:30 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் திறந்து இரவு 7:30 மணிக்கு மூடப்படும். இந்தக் கோயிலில் கார்த்திகை மாதம் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம், சிவனும் பார்வதியும் ஊர்வலமாக எழுந்தருளுகிறார்கள். சிவராத்திரிக்கு அடுத்த மாதம் தேரோட்டம் உண்டு. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித் தனித் தேர்கள்.

இக்கோயிலில் கேரள முறைப்படி பூஜைகள், திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும், தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்கி வருகிறது. ஸ்ரீ மகாதேவரையும் ஸ்ரீ  அற்புத கணபதியையும் வணங்கி வழிபட்டால், நினைத்த காரியம்

சித்தியாகும்!” என்றார்.

- ச.சுடலை குமார்

படங்கள்: எம். முருகன்

Related Stories: