×

கர்ப்பிணி பெண்ணின் பசி போக்கிய இறைவன்

திருவடகுரங்காடுதுறை, சுவாமி மலை

திருவாரூர் மாவட்டம் சுவாமி மலை அடுத்துள்ளது திருவடகுரங்காடுதுறை. இங்குள்ள சிவாலயத்தின் இறைவன் குலை வணங்கி நாதர். இவருக்கு வாலி நாதர் என்றும் பெயர்கள் உள்ளன. இறைவி அழகு சடை முடியம்மை. சடாமகுட நாயகி என்பது அன்னையின் இன்னொரு பெயர்.பிணக்கு கொண்டு பிரிந்த தம்பதியினர் அமாவாசைக்கு மறுநாள் இங்கு வந்து அர்த்த நாரீஸ்வரருக்கு மஞ்சள் மற்றும் வெள்ளை உடை சாத்தி எலுமிச்சை சாதம் செய்து அர்ச்சனை செய்து வணங்கினால் அவர்கள் பிணக்கு மறைந்து இனிய இல்லறம் நடத்துவார்கள் எனக் கூறுகின்றனர் பக்தர்கள்.பலநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு செட்டியாரும், அவரது மனைவியும் திருவடகுரங்காடு துறையில் அருள்பாலிக்கும் குலை வணங்கி நாதரையும் அழகு சடை முடியம்மையையும் தரிசிக்க அடிக்கடி வந்தனர்.

தம்பதியர் இருவரும் குழந்தை வேண்டி இத்தலத்து இறைவனை மனப்பூர்வமாக வேண்டி வந்ததால் இறைவன் அருளால் செட்டியார் மனைவி கர்ப்பம் ஆனாள். குழந்தைப்பேரு அருளிய இறைவனுக்கு நன்றி தரிசனம் செய்ய இருவரும் ஆலயம் வந்தனர். செட்டிப்பெண்ணுக்கு நல்ல பசி. கணவனிடம் தன் பசியைக் கூறினாள். கர்ப்பிணி மனைவியை ஆலயத்தில் அமரச் செய்துவிட்டு செட்டியார் உணவுப்பொருள் ஏதேனும் வாங்கி வரலாம் என்று அருகில் உள்ள தெருவை நோக்கி நடந்தார். நேரம் கடந்தது. கணவர் வரவில்லை, பசியும் தாங்க முடியவில்லை உடனே செட்டியார் மனைவி தவித்தாள். ஆண்டவா என வேதனைப்பட்டாள். அந்தப் பெண்ணின் பசியை உணர்ந்த இறைவன்.

அடுத்த கணம் அந்தப் பெண்ணின் அருகே இருந்த தென்னை மரம் வளைந்தது. மரம் தானாகவே பெண்ணின் அருகே இளநீரை உதிர்த்தது. கர்ப்பிணி பெண் பசியாறினாள். தென்னங்குலை இறைவனை வணங்குவது போல் வளைந்து அந்தப் பெண்ணுக்கு இளநீரைக் கொடுத்ததால் இந்த இறைவன் குலைவணங்கி நாதர் என்ற பெயாில் அழைக்கப்படலானார்.பசி தீர்ந்து களைப்பாறிய செட்டிப்பெண்ணுக்கு மறுபடியும் சோதனை அவளுக்கு பிரசவ வலி எடுத்தது. கணவரையும் காணோம். வலியால் துடித்த அந்தப் பெண் தன்னை காக்கும் பொருட்டு சிவனையும், அம்பாளையும் மனதாற
வேண்டினாள். ‘‘கலங்காதே நாங்கள் இருக்கிறோம்’’ என்று இருவரும் அவளுக்கு காட்சி கொடுத்தனர். அவளது பிரசவ வலி குறைந்தது. அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

உணவு தேடிப் போன செட்டியார் திரும்பி வந்தார். மனைவி குழந்தையுடன் இருக்கும் காட்சியை கண்டார். நடந்ததை செட்டிப்பெண் கணவரிடம் கூறினாள். ஆனால் செட்டியார் அதை நம்பத் தயாராக இல்லை.என்ன செய்வது என்று புரியாத அந்தப் பெண் மீண்டும் இறைவனை வேண்டினாள். அவளது துயரம் தீர இறைவனும் இறைவியும் கணவன் மனைவி இருவருக்கும் காட்சி தந்தனர். அத்துடன் செட்டிப் பெண்ணுக்கு மோட்சமளித்தார் இறைவன். அந்த செட்டிப் பெண்ணின் விக்ரஹம் ஆலயத்தில் கிழக்குப் பிரகாரத்தில் இப்போதும் உள்ளது.வாலி மாயாவி ஒருத்தியுடன் சண்டையிட நேர்ந்தது. காடு மலை குகை என அவர்கள் சண்டை நீடித்தது. முடிவில் மாயாவி இறந்தாள். வாலியின் வால் அறுபட்டு போனது. தனது அறுந்து போன வால் மீண்டும் வளர வாலி இத்தல இறைவனை வணங்கி துதிக்க வாலிக்கு மீண்டும் வால் வளர்ந்ததாம். எனவே இத்தல இறைவன் வாலிநாதர் என அழைக்கப்படலானார்.அனுமன் பூஜை செய்த ஐந்து தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு வந்து அனுமன் பூஜை செய்த பின்னரே அனுமனுக்கு தன்னுடைய அசுரபலம் தெரிய வந்ததாம். அனுமன் இறைவனை பூஜை செய்யும் அற்புத சிற்பம் ஒன்று இறைவன் விமானத்தில் உள்ளது.

இந்த ஆலயத்தின் பிராகாரத்தில் ஒரே விதையில் உருவான இரட்டை தென்னை மரம் உள்ளது. அதுவே இந்த ஆலயத்தின் தலவிருட்சம். தீர்த்தம் காவிரி.மகாமண்டபத்தின் வலது புறம் ஆதி சிதம்பரம் என்ற திருநாமத்தில் நடராஜர், சிவகாமி அன்னை சந்நதி உள்ளது. ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாக இங்கு நடைபெறுகிறது. இங்குள்ள சனீஸ்வரன் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள் பாலிப்பது சிறப்பான அம்சம்.
பங்குனி உத்திரம், திருக்கல்யாண வைபோகம், நவராத்திரி 9 நாட்களும் ஊஞ்சல் உற்சவம், ஐப்பசி பெளர்ணமியில் அன்னாபிஷேகம் ஆடிப்பூரத்தில் காவிரியில் தீர்த்த வாரியும் நடைபெறுகிறது. கார்த்திகை சோம வாரங்களிலும் பிற விசேஷ நாட்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பிரதோஷத்தின் போது பிரதோஷ நாயகர் திருச்சுற்றில் புறப்பட்டு வலம் வருவார். அனுமன் ஜெயந்தியும் இங்கு கொண்டாடப்படுகிறது.

குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள் 16 விரலி மஞ்சளில் மாலை கட்டி அம்மனுக்கு சாத்தி முளைப்பிறை அம்மன் வயிற்றில் கட்ட அவர்கள் வேண்டுதல் நிறைவேறுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர். அந்தப் பெண்கள் குழந்தைப் பிறந்ததும் அன்னைக்கு புடவை சாத்தி நன்றி தொிவித்துக் கொள்கின்றனர்.இத்தலத்து இறைவன் தன் பக்தர்களை சோதிப்பதில்லை. அவர்கள் வேண்டுதலை எந்தவித தடையுமின்றி நிறைவேற்றுவதால் இவர் சோதிக்காத சிவன் என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறார். சுவாமி மலையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசன நேரமாகும்.சுவாமி மலை - கல்லணை சாலையில் திருவையாறிலிருந்து
11 கி.மீ தொலைவில் உள்ள திருவடகுரங்காடு துறையில் உள்ளது இத்தலம்.

- ஜெயவண்ணன்

Tags : Lord ,
× RELATED இறைவன் நமக்கு பலம் தருகிறார்