×

கண் பிரச்னைகள் தீர்ப்பார் கண்ணாயிரநாதர்

வாழ்க்கையில் கண் ஒரு முக்கிய கருவி! அது இல்லாமல் உலகத்தை பார்க்க இயலாது. நல்லதை படிக்கமுடியாது. இந்த கண்ணுக்கு கோளாறு ஏற்பட்டால் எல்லோரும் உடனே குணப்படுத்திக் கொள்ள துடிப்பர். இந்த வகையில் கண் உபாதை குணமாக கண்டிப்பாக செல்ல வேண்டிய ஸ்தலம் திருக்காரவாசல். இங்குள்ள கண்ணாயிரநாதர் அருளால் கண் தொடர்பான எந்த பிணிகளும் நீங்கி விடும். இங்குள்ள சேஷ தீர்த்தத்தில் பெளர்ணமியன்று நீராடி, கண்ணாயிர நாதரை தரிசித்து, அப்போது கோயிலில் கொடுக்கப்படும் சேஷ தீர்த்தத்தை பருகினால் சரும வியாதிகள் மறைந்து விடும்

இத்தல சிவனின் பிரம்ம தீர்த்தக் கரையில் கடுக்காய் பிள்ளையார் வீற்றிருக்கிறார். மேலும் ப்ரமோதம் பிள்ளையாரும் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். ப்ரமோதம் என்றால் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்ச்சியை தருபவர் எனப் பொருள். ஏழு விடங்களில் ஒரு விடங்கரை கொண்ட கோயில் இது. அது என்ன விடங்கர்? ‘சுயம்பு’ என்பதை தான் விடங்கர் என கூறுகின்றனர். விடங்கம் என்றால் சிற்பியின் உளி இல்லாமலே உருவானது என அர்த்தம்.

ஒரு சமயம் இந்திரனுக்கும் அரக்கர்களுக்கும் இடையே பிரச்னை எழுந்தபோது இந்திரனுக்கு ஆதரவு கரம் நீட்டினார் முசுகுந்த சக்ரவர்த்தி. அதில் இந்திரன் ஜெயித்தான். நன்றி கூறி உனக்கு என்ன வேண்டும் என கேட்டான். அதற்கு முசுகுந்த சக்ரவர்த்தி “உம்மிடம் உள்ள விடங்க லிங்கங்கள் வேண்டும்” என்றார். இந்திரனுக்கு அவற்றை கொடுக்க இஷ்டம் இல்லை. அதனால் மயனை அழைத்து ஆறு சிவலிங்கங்களை உருவாக்கச் சொல்லி, முசுகுந்த சக்ரவர்த்தியிடம் கொண்டு வந்து கொடுத்தான். அவரோ,  ‘‘இவை வேறு.

உம்மிடமுள்ள விடங்க லிங்கத்தை தந்தால் மகிழ்ச்சி’’ எனக் கூற, ‘‘இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்து, ஏழு லிங்கங்களை, முசுகுந்த சக்ரவர்த்தியிடம் கொடுத்தார். அவர், அவற்றை திருவாரூர் - வீதி விடங்கர், திருநள்ளாறு - நகர விடங்கர், நாகப்பட்டினம் - சுந்தரகர், திருவாய்மூர் - நீலவிடங்கர், வேதாரண்யம் - புவனி விடங்கர், கடைசி மற்றும் இறுதியாக திருக்காரவாசலில் ஆதிவிடங்கர் ஆகியோரை பிரதிஷ்டை செய்தார். இந்தக் கோயி்ல் மிகப் பழமையானது. உள்ளே மூன்று நிலைகள் கொண்ட கோபுரம் உள்ளது.

அதனைத் தாண்டி நடந்தால் திருக்கண்ணாயிர நாதரை தரிசிக்கலாம். இங்கு சிவன் குக்குட நடனம் ஆடியபடி தரிசனம் தருவதாக ஐதீகம். இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் பலா. ஒரு காலத்தில் காரக்கல் என்ற மரங்கள் நிறைந்த காடாக இந்த பகுதி இருந்துள்ளது. இதுவே திருக்காரக்கல் ஆகி, காலத்தால் மறுவி திருக்கார வாசல் ஆகிவிட்டது. கண் விஷயமாச்சே. அதனால் இங்கு கிடைக்கும் முக்கலவை எண்ணெயை பயபக்தியுடன் வாங்கிச் செல்கின்றனர். அது மட்டுமல்ல, கண் நோய் குணமாக என்றே இங்கு ஒரு அமிர்தம் 48 நாட்கள் சாப்பிட ஏதுவாய் தரப்படுகிறது.

தேனில் ஊற வைக்கப்பட்டுள்ள அத்திப்பழம் தான் அது. ஆக அதனையும் வாங்கிச் சென்று, முக்கலவை எண்ணெயில் தலை குளித்து அமிர்தத்தையும்
சாப்பிட்டு வந்தால் கண்பார்வை மீள்வது நிச்சயம். இங்கு பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது, பிரம்மன் தன் சாபம் நீங்க, இந்த சிவனை வேண்டி குளம் வெட்டி அதில் ஸ்நானம் செய்து தவம் செய்து விமோசனம் பெற்றாராம். இந்த பிரம்ம தீர்த்தத்தின் கரையில்தான் கடுக்காய் பிள்ளையார் உள்ளார். இது சார்பாகவும் ஒரு கதை உண்டு. ஒரு வணிகன் இரவாகிவிட்டதால் இதன் அருகில் தங்கினான்.

அவன் ஒரு வண்டி நிறைய ஜாதிக்காய் மூட்டைகளை ஏற்றி எடுத்துக் கொண்டிருந்தான். ஜாதிக்காய்க்கு அதிக வரி உண்டு. அதனால் ரகசியமாய் எடுத்துச் சென்று விட திட்டமிட்டிருந்தான் அந்த வணிகர். இந்த விஷயம் தெரிந்து, ஒரு அதிகாரி வந்து, மூட்டையில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளார். அருகில் இருந்த பிள்ளையாரிடம் மானசீகமாக வேண்டிய வணிகர், மூட்டை திறக்க அங்கு ஜாதிக்காய்க்கு பதில் கடுக்காய் இருந்துள்ளது. இதனால் வணிகன் தப்பித்தான். அதிகாரி சென்று விட்டனர்.

மீண்டும் மூட்டையை கட்டிவிட்டு, பிள்ளையாரிடம் ‘உன் எதிரில் பொய் சொன்னதுக்கு என்னை மன்னித்து விடு! அதேசமயம் பெரிய மனதுடன் அவற்றை மீண்டும் ஜாதிக்காயாய் மாற்ற உதவ வேண்டும் என பிரார்த்தித்தார். நினைத்தது நிறைவேறியது. மறுநாள் காலை மூட்டையை திறந்து பார்த்தபோது மீண்டும் ஜாதிக்காயாய் இருந்தது. ஆக இந்த “கடுக்காய்” பிள்ளையாரை வணங்காமல் கிளம்புவது சரியல்ல. இந்த கோயிலில் கயிலாச நாயகியாக சக்தி உள்ளார்.

மற்றும் கோயிலுக்குள் கபால முனிவர், பதஞ்சலி முனிவர் வியாக்ரபாதர் ஆகியோர் உள்ளனர். மேலும் தட்சிணாமூர்த்தி (இங்கு இவர் பெயர் ஞானதட்சிணாமூர்த்தி), மகாவிஷ்ணு, மகாலட்சுமி, இந்திரன், ஆறுமுகம், பைரவர், சரஸ்வதி, கஜலட்சுமி மேலும் பல சிவலிங்கங்கள் உண்டு.
பதஞ்சலி முனிவருக்கு ஏழு தாண்டவங்களை ஈசன் இங்கு ஆடிக் காட்டினாராம். இங்கு தமிழ் புத்தாண்டு பூஜை மிக சிறப்பாக நடக்கும்.

இக்கோயிலில் உள்ள பைரவருக்கு சொர்ண கர்ண பூஜை செய்தால் இழந்த பொருட்களை திரும்பப் பெறலாம். வைகாசி விசாகத்தின்போது இங்கு பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்பர், சம்பந்தரால் பாடப்பெற்றது இந்த ஸ்தலம். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தொகுப்பு: ராஜிராதா

Tags :
× RELATED மணிக்கணக்கில் இடைவிடாமல் தொடர்ந்து...