கைவிடாது காக்கும் கைவிடேயப்பர்

கைவிளாஞ்சேரி

சாஸ்தாவுக்கு கைவிடேயப்பர் என்ற ஒரு பெயரும் உண்டு. முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகம் மற்றும் இந்திர லோகத்தையும் கைப்பற்றினார்கள். ஆட்சியைப் பறிகொடுத்த தேவேந்திரன், மனைவி இந்திராணியுடன் பூலோகம் வந்தான். சீர்காழி என்ற புண்ணியத் தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி மூங்கிலாக வடிவெடுத்து இருவரும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். பகல் வேளையில் தவமிருந்த அவர்கள், இரவில், சாஸ்தாவின் கையில் உள்ள தாமரை பூவிதழ்களின் நடுவே தங்கி, யார் கண்ணிலும் படாமல் தங்களை பாதுகாத்துக் கொண்டனர். இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், சிவலோகம் வந்து அவர்களுடைய குறைகளை தெரிவிக்கச் சொன்னார்.

இந்திரன் இந்திராணியை சாஸ்தாவின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு கயிலாயம் சென்றான். சற்று பின், சாஸ்தா தனது காவல் கணக்குகளை சிவபெருமானிடம் ஒப்படைக்க அவரும் சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வருமுன் இந்திராணியை தனது தளபதியான மகா காளனிடம் ஒப்படைத்தார். இதை அறிந்த சூரபத்மனின் தங்கை அஜாமுகி, அழகியான இந்திராணியை தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி அவளை கவர்ந்து செல்ல முயன்றாள். இதனால் கோபமுற்ற மகாகாளன் அஜாமுகியிடம் சண்டையிட்டு, அவள் கரத்தை வெட்டினார். அவள் அலறியடித்துக்கொண்டு ஓடினாள். அரக்கியான அஜாமுகியின் கை விழுந்த இடம், ‘கை விழுந்த சேரி’ என அழைக்கப்பட்டது. இதுவே மருவி, இப்போது கைவிளாஞ்சேரி என்றாகிவிட்டது. இந்திராணியைக் காப்பாற்றி இந்திரனிடமே சேர்ப்பித்த சாஸ்தா, இதே தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். அவர் பக்தர்கள் வேண்டும் வரமளித்து காக்கும் கடவுளாக அருள்பாலிக்கிறார்.

இந்திராணியைக் காப்பாற்றியதால், ‘கைவிடேயப்பர்’ என்றழைக்கப்படுகிறார். ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் கைவிடேயப்பர் பூரணா - புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டும், மறுகாலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார். சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து கைவிடேயப்பரை தரிசனம் செய்த பின்னரே தங்களது பயணத்தைத் தொடங்குகிறார்கள். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இருமுடி கட்டிக் கொண்டு தங்களது சபரிமலை பயணத்தை தொடங்குகின்றனர். இந்த ஆலய வளாகத்திலேயே, காசி விஸ்வநாதரும் தனியே கோயில் கொண்டுள்ளார். இந்த வகையில் இரட்டை கோயில் அமைந்த அற்புத தலம் இது. கைவிடேயப்பர் சந்நதிக்குமுன் ஒரு மணிமண்டபம் உள்ளது. ஊர் மக்கள் தங்கள் வீட்டில் நடைபெறும் காது குத்தல் போன்ற சுபகாரியங்களை இங்கு நடத்தி மகிழ்கின்றனர். இந்திராணியை கை விடாது காப்பாற்றிய கைவிடேயப்பர் தங்களது கோரிக்கைகளையும் தீர்த்து வைத்து தங்களையும் கைவிடாது காப்பார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கைவிளாஞ்சேரி என்ற இந்தத் தலம்.

Related Stories: