×

தீரா வினை தீர்க்கும் இருக்கன்குடி மாரியம்மன்

விருதுநகரில் இருந்து 38 கிமீ தொலைவில் உள்ளது இருக்கன்குடி. இங்கு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இப்பகுதியில் அர்ச்சுனா நதி, வைப்பாறு என இரு கங்கைகள் கூடும் இடத்தில் அம்மன் குடி கொண்டதால், இருக்கங்(ன்)குடி மாரியம்மன் என பெயர் பெற்றுள்ளார். இரண்டு ஆறுகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பில் 10 அடி உயரமுள்ள கல்கோட்டைக்குள்  அமைந்துள்ளது இக்கோயில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கர்ப்பக்கிரகத்தில், கற்சிலையாக இருந்தாலும் உயிர்ப்புடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் அன்னை பராசக்தி.

கருவறைக்கு முன்புறம் உள்ள அர்த்த மண்டபத்தில், அன்னைக்கு வலப்புறம்  விநாயகர் அமர்ந்திருக்கிறார். சன்னதியின் முன்புறம் உள்ள மகா மண்டபத்தில் நந்தீஸ்வரர், கொடி மரம், பலிபீடம் உள்ளன. சன்னதியை சுற்றிலும் பரிவார தேவதைகளாக வாய்ச்சொல்லி, வெயிலுகாத்தம்மன், அரச மரத்தடியில் சித்தி விநாயகர், பேச்சியம்மன், முப்பிடாதி,  வீரபுத்திரர், பைரவர் மற்றும் காத்தவராயர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.
தெற்கு பிரகார மண்டபத்தின் சுவர்களில் இத்தலத்தின் வரலாறும், அன்னை பராசக்தியின் பல்வேறு அவதாரங்களும், படங்களும் வண்ண மயமாக காட்சியளிக்கின்றன. மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களின் பார்வைக்காக, மேற்கூரையில் அஷ்டலட்சுமியின் அவதார படங்கள் வரையப்பட்டுள்ளன.

கோட்டை சுவருக்கு வெளியே தென்கிழக்கு பகுதியில் காவல் தெய்வம் கருப்பசாமியின் சன்னதி உள்ளது. தென் கிழக்கே கயிறு குத்து மஞ்சள் நீராட்டு அம்மன் சன்னதி உள்ளது. கருவறையில் அம்மன் வலது காலை மடித்து வைத்து, இடது காலை தொங்க விட்ட நிலையில் உள்ளது கோயிலின் சிறப்பாகும். இங்கு தினமும் 6 கால பூஜைகள் நடக்கின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பவுர்ணமியில் மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆடி, தை, பங்குனி மாத வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

*********
மக்கள்பேறு, மாங்கல்ய பாக்கியம், திருமண வரம் தருவதுடன், தீராத வினைகளையும் தீர்க்கும் வல்லமை பெற்றவர் இருக்கன்குடி அம்மன் என பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இக்கோயிலில் வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள், தீராத வயிற்று வலி, அம்மை நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நோய் குணமானதும் அம்மனுக்கு அக்னிசட்டி எடுத்தும், மாவிளக்கு ஏந்தியும், அங்கபிரதட்சணம் செய்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

Tags : Thera ,Mariamman ,
× RELATED நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் வீதி உலா