ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா?

ஐயனார் வழிபாடு என்பது மிகப் பழைய காலந்தொட்டே தமிழகத்திலும் இலங்கையிலும் விரவிக் காணப்படுகின்றது. ஊர்கள் தோறும் வயல் நிலங்களிலும் கடலோரத்திலும் மலை உச்சிகளிலும் ஐயனாருக்கு கோயில் எழுப்பி தமிழர்கள் பாரம்பரியமாக கிராம உணர்வுடன் இயற்கை வழிபாடாற்றியும் சிவாகம பூர்வமாகப் திருக்கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்து வேதாகம நெறி சார்ந்தும் வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். சாத்தா (சாஸ்தா) என்றும் அழைக்கப்பெறும் ஐயனார் கிராம தேவதையாகவும் வழிபடப்பட்டு வந்துள்ளார்.

தமிழகத்தின் கிராமங்களில் ஊர் நடுவே சிவபெருமானுக்கோ, மகாவிஷ்ணுவுக்கோ திருக்கோயில் பெரிதாக எழுப்பி வழிபாடாற்றும் போது ஊரின் நாற்புறத்தும் கிராமத் தேவதைகளாக மாரி, பிடாரி, ஐயப்பன் முதலிய தெய்வங்களை கோயில் அமைத்து வழிபாடு இயற்றியிருக்கிறார்கள். இது இப்படியே இன்னும் விரிவடைந்து சில ஊர்களில் ஐயனாருக்கு பெரிய கோயில்கள் அமைத்து விழாக்களை கொண்டாடியும் வந்திருக்கிறார்கள்.

இந்த வகையில் பெரிய சிற்ப சித்திர தேரில் ஐயனாருக்கு உலாவும் நடைபெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிட வேண்டியதாகிறது. இது இவ்வாறிருக்க, மேற்படி ஐயனாரின் அவதாரமாகக் கொள்ளப் பெறும் ஐயப்பன் வழிபாடு கேரள தேசத்திலிருந்து அண்மைக் காலத்தில் மிகப் பிரபலம் பெற்றிருக்கிறது. இன்றைக்கு கேரளாவிலுள்ள சபரிமலைக்கு உலகெங்கிலுமிருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான அடியவர்கள் மிகுந்த பக்தி சிரத்தையுடன் சரண கோஷம் முழங்கச் செல்வதையும் காண்கிறோம்.

ஆக, நம் தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபடப்பட்டு வரும் ஐயனார் வழிபாடும், தற்போது பிரபலமடைந்துள்ள ஐயப்பன் வழிபாடும் நெருக்கமானதாகக் கருத முடிகிறது. ஐயனாரின் அவதாரமான ஐயப்பனை இணைத்து சிந்திக்க முடிகின்றது. எனினும் இரு வேறு வடிவங்களில் வழிபாட்டை இயற்றும்போது இடையில் சில சம்பிரதாய பேதங்களையும் அவற்றின் வழியான வழிபாட்டு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அவதானிக்கலாம்.

- ஸ்ரீசரண்

Related Stories:

>