5 கடமைகளையும் கூறும் அத்தியாயம்..!

திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் “அல்பகறா” என்று அழைக்கப்படுகிறது. இது பல சிறப்புகளையும் தனித்தன்மைகளையும் கொண்ட அத்தியாயம் ஆகும். திருக்குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மிகப்பெரும் அத்தியாயம் இதுதான். இதன் மொத்த வசனங்கள் 286. இந்த அத்தியாயத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மார்க்கச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக இஸ்லாமியச் சட்ட வல்லுநர்கள் கூறுவார்கள்.

இஸ்லாம் எனும் மாளிகை ஐந்து தூண்களின் மீது நிலைகொண்டுள்ளது என்று நபிகளார்(ஸல்) கூறியுள்ளார்கள். அந்த ஐந்து தூண்கள் - கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவை. “அல்பகறா” அத்தியாயத்தின்  தனிச்சிறப்புகளில் ஒன்று, இஸ்லாத்தின் இந்த  ஐந்து தூண்கள் குறித்தும் அது பேசுகிறது.

1.கலிமா

ஏக இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதே கலிமா வின் உயிர்நாடி. ‘அல்பகறா’ அத்தியாயத்தின் பின்வரும் வசனம் அதையே வலியுறுத்துகிறது:

“மனிதர்களே, உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள். அவ்வாறு செய்வதால் மட்டுமே நீங்கள் உங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.”(2:21)

2.தொழுகை

கலிமா எனும் ஏகத்துவ சத்தியப் பிரமாணத்தை மொழிந்த உடனே மனிதன் மீது இரண்டாவது அடிப்படையான தொழுகை கடமையாகி விடுகிறது. தொழுகை குறித்து அல்பகறா அத்தியாயம் கூறுகிறது:

“எல்லாத் தொழுகைகளையும்(குறிப்பாக, தொழுகையின் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ள நடுத்தொழுகையையும்(ஸலாத்துல் உஸ்தா) நீங்கள் பேணித் தொழுது வாருங்கள். இறைவனின் திருமுன் அடிபணிந்தவர்களாய்

நில்லுங்கள்.”(2:238)

3.ஜகாத்- இறைவழியில் செலவு

கலிமா, தொழுகைக்கு அடுத்து இறைவழியில் செலவு செய்வது அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். அல்பகறா அத்தியாயம் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

“நம்பிக்கை கொண்டவர்களே, எந்த விதமான பேரமும் நட்பும் பரிந்துரையும் பயன்தர முடியாத அந்த இறுதித் தீர்ப்பு நாள் வருமுன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள்.”(2:254)

4. நோன்பு

இது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் மிகவும் முதன்மையான வழிபாடாகும். இதுகுறித்தும் அல்பகறா அத்தியாயம் பேசுகிறது.

“உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.”(2:183)

5.ஹஜ்

வசதி வாய்ப்புகளும் உடல்நலனும் உள்ளவர்கள் மீது ஹஜ் செய்வது கடமையாகும். இந்த வழிபாடு கடமையானவர்கள், தம் வாழ்நாளில் ஒருமுறையாவது இதை நிறைவேற்றிவிட வேண்டும். இறுதிக் கடமையான ஹஜ் குறித்தும் அல்பகறா கூறுகிறது:

“இறைவனின் உவப்பைப் பெற ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுங்கள்.”(2:196)

இந்த அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்து நபிகளார் நிறைய கூறியிருக்கிறார்கள். அவற்றில் முக்கியமான ஒரு சிறப்பு - “எந்த வீடுகளில் அல்பகறா அத்தியாயம் ஒதப்படுகிறதோ அந்த வீடுகளில் ஷைத்தான் போன்ற தீய சக்திகள் நுழையாது.”

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“மறுமை நாளில் இறைவனிடம் பரிந்துரைக்கும் ஒளிச்சுடர்கள் போன்ற இரண்டு அத்தியாயங்கள்-(இரண்டாம் அத்தியாயமான) அல்பகறாவும் (மூன்றாம் அத்தியாயமான) ஆலுஇம்ரானும் ஆகும்.” -நபிமொழி

Related Stories: