தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்

தன் வீட்டில் வயதான தந்தையை வேண்டா வெறுப்பாக மகன் கவனித்து வந்தான். வீட்டின் ஒதுக்குப்புறத்தில் ஒரு மண்சட்டியில் தன் தந்தைக்கு சோறு போடுவது வழக்கம். ஒருநாள் அந்த மண் சட்டியைக் காணவில்லை. எங்கு தேடிப்பார்த்தாலும் அது அவன் கண்ணுக்கு எட்டவில்லை. பின்னர் தன் பத்து வயது குறும்புக்காரப் பையனின் நினைவு வந்தது. அவனிடம், தாத்தா சாப்பிடும் மண் சட்டியைப் பார்த்தாயா? என்று கேட்டான். ஓ! பார்த்தேனே, நான்தான் எடுத்துப் பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். அப்பா! நீங்கள் தாத்தாவைப்போல் ஆகும் போது சோறு போட அது வேண்டும் அல்லவா? அதற்காக எடுத்து வைத்திருக்கிறேன் என்றான் மகன். அதைக்கேட்ட அவன் துடித்துப் போனான். தன் தவறை உணர்ந்து வருந்தினான். திருந்தினான். அன்று முதல் தன் தந்தையை மரியாதையாக நடத்தத் துவங்கினான்.

நம்மைப் பெற்றெடுத்துப் பெரும்பாடு பட்டு வளர்த்து ஆளாக்கி பொறுப்போடு காத்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள்வோம். நம் வாழ்க்கையும் நம் முதுமைக் காலமும் நிச்சயம் நிறைவாக இருக்கும். நாம் நம் பெற்றோரைக் கவனிப்பதைப்போலத்தான் நம் பிள்ளைகளும் நம்மைக் கவனிப்பார்கள்.

‘‘ஞானமுள்ள பிள்ளைகள் தன் தந்தையை மகிழ்விக்கின்றனர். அறிவற்ற மக்களோ தம் தாய்க்கு துயரம் அளிப்பர். தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது. நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும். நல்லாரை ஆண்டவர் பசியால் வருந்தவிடார். ஆனால் பொல்லார் விரும்புவதை அவர்களுக்கு கொடுக்க மாட்டார்.

வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும். விடா முயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும். கோடைக்காலத்தில் விளைச்சலைச்

சேர்த்து வைப்போர் மதியுள்ளோர். அறுவடைக்காலத்தில்  தூங்குவோர் இகழ்ச்சிக்குரியர். நேர்மையாளர் மீது ஆசி பொழியும். பொய்யர் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும். நேர்மையாளரைப்பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும். பொல்லாரின் பெயரோ அழிவுறும். ஞானமுள்ளோர் அறிஞர்களை மனமாற ஏற்பர். பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர். நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர். கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்த்தப்படுவர். நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும். பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்து இருக்கும்.

பகைமை சண்டைகளை எழுப்பி விடும். தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும். விவேகமுள்ளவர்களின் சொற்களில் ஞானம் காணப்படும். மதிகெட்டவர்களின் முதுகிற்கு பிரம்பே ஏற்றது. ஞானமுள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர். மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும். செல்வரின்  சொத்து அவருக்கு அரணாய் இருக்கும். ஏழையரின் வறுமை நிலை அவர்களை இன்னும் வரியோராக்கும். நேர்மையாளர் தம் வருமானத்தை வாழ்வதற்குப் பயன்படுத்துகின்றார். பொல்லாதவரோ தம் ஊதியத்தைத் தீய வழியில் செலவழிக்கின்றனர். நல்லுரையை ஏற்போர் மெய் வாழ்வுக்கான பாதையில் நடப்பர். கண்டிப்புரையைப் புறக்கணிப்போரோ தவறான வழியில் செல்வர்.’’ - (நீதிமொழிகள் 10: 1-17)

‘‘நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கடவுள் ஆர்வம் காட்டவில்லை. நீங்கள் என்ன மனப்பான்மையுடன் செயல்படுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதில் தான் ஆர்வம் காட்டுகிறார்.’’

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: