பக்தர்கள் குறை தீர்க்கும் அய்யனார்

திட்டக்குடி.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆதமங்கலம் கிராமத்தில் சலவை தொழிலாளி ஒருவரின் மனைவி கணவனுடன் கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்கு புறப்பட்டாள். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். நள்ளிரவு நேரம் என்பதால் பயந்து கொண்டே தனது பயணத்தை தொடர்ந்தாள். அங்குள்ள ஒரு ஓடையை கடக்க முயன்றபோது பிரசவ பலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அலறினாள். பின்னர் அங்குள்ள கிராமதேவதை கோயிலை பார்த்ததும் மனமுருக வேண்டினாள். அப்போது நடுத்தர வயது கொண்ட பெண் ஒருவர் கர்ப்பிணியை தனது குடிசைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சற்று நேரத்தில் கர்ப்பிணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மயக்கத்தில் இருந்த அந்தப்பெண் மறுநாள் காலை கண்விழித்தபோது அங்கு ஒரு கோயில் இருந்தது. இதையறிந்த அந்தப்பெண் மெய் சிலிர்த்துப்போனாள். கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து வயிற்று சிறையில் இருந்து குழந்தையை மீட்ட அந்த கிராம காவல் தெய்வம் அய்யனார் என அழைக்கப்படுகிறார்.

இந்த அய்யனார் கோயிலில் அன்னை மீனாட்சி, கருப்பசாமி, செம்மலையப்பர், பூமாலையப்பர் ஆகிய தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள். ஒரு காலத்தில் புன்னை மரங்கள் அடர்ந்து விளங்கிய இப் பகுதியில் சுதை வடிவ சிலைகளாக இந்த தெய்வங்கள் விளங்கி வந்தன. பின்னர் கற்சிலைகள் வடித்து மக்கள் வணங்கி வந்தனர். இதில் கொட்டாரம், போத்திரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கோயில் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை ஏற்பட்டது. இது பெரிதாகி நீதிமன்றம் வரை சென்றது. அன்று பெருமாள் தலைமையில் போத்திரமங்கலத்து மக்களும், சிதம்பரம் தலைமையில் கொட்டாரத்து மக்களும் நீதி மன்றத்தில் வழக்கை நடத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி சாட்சி கேட்டார். அப்போது கொட்டாரத்தைச் சேர்ந்த சிதம்பரம் அய்யனாருடன் இருக்கும் கருப்பண்ண சுவாமியையே சாட்சி சொல்ல கூட்டி வருகிறேன் என கூறினார். அதிர்ச்சி அடைந்த நீதிபதி அவரை அழைத்து வராவிட்டால் உனக்கு சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரித்தார்.

பின்னர் வாய்தா நாளுக்கு முதல் நாள் கொட்டாரத்தை சேர்ந்த சிதம்பரம் சிறை மீட்டார் கோயிலுக்கு சென்று கற்பூரம் ஏற்றி கருப்பசாமியை வணங்கி நீ சாட்சி சொல்ல கண்டிப்பாக வரவேண்டும், இல்லாவிட்டால் எனக்கு சிறை தண்டனை கிடைக்கும் என மனமுருக வேண்டினார். மறுநாள் சிதம்பரம் நீதிமன்றத்திற்கு சென்றார். எதிர் தரப்பில் போத்திரமங்கலத்து பெருமாள் நின்றிருந்தார். நீதிபதி சிதம்பரத்தை பார்த்து நீ சொன்னபடி கருப்புசாமி சாட்சி சொல்ல வந்திருக்கிறாரா என கேட்க ஆம் வந்திருக்கிறார் என்றார் சிதம்பரம். அப்பொழுது டவாலி கருப்பசாமி கருபபுசாமி என மூன்று முறை கூப்பிட வெண்ணிற ஒளி வேகமாக பாய்ந்து மறைந்தது.

அதே சமயம் குதிரையின் கனமான கனைப்பு சத்தம் நீதிமன்றத்தையே கிடுகிடுக்க வைத்தது. உடல்சிலிர்த்த நீதிபதி கருப்புசாமியே வந்து சாட்சி சொல்லிவிட்டார் எனவே கொட்டாரம் கிராமத்திற்கே சிறை மீட்டார் கோயிலும், உற்சவர்களும் சொந்தம். யார் வேண்டுமானாலும் அந்த கோயிலுக்கு சென்று வணங்கலாம், பொங்கல், படையலிடலாம் ஆனால் திருவிழா உட்பட அந்த ஆலயத்தை கொண்டாடும் உரிமை கொட்டாரம் கிராமத்திற்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தார் இதனை அனைவரும் ஏற்று கொண்டனர். அதன்பின் மக்கள் ஒற்றுமையாக கோயிலில் வழிபட்டு வருகின்றனர். இந்த அய்யனாரை வணங்கினால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும், தடைகள் நீங்கி அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

செல்வது எப்படி?

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொழுதூர் மாநில நெடுஞ்சாலையில் ஆவினங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கொட்டாரம் அய்யனார் கோயில். பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

Related Stories:

>