×

சபரிமலை யாத்திரை

எருமேலி

சபரிமலைக்குச் செல்ல மரபுவழிப்பாதை எருமேலியிலிருந்துதான் தொடங்கும்.  இங்கு பேட்டை துள்ளி நீராடி பக்தர்கள் புறப்படவேண்டும். இங்கு சாஸ்தாவிற்கு சிறியதும், பெரியதுமாக இரண்டு கோயில்கள் உள்ளன. இதை கொச்சம்பலம் (சிறிய கோயில்), வலியம்பலம் (பெரிய கோவில்) என்பர். இந்த இரு கோயில்கள் தவிர வாவர் மசூதியிலும் வழிபாடுகள் நடக்கும்.

அழுதாமேடு


எருமேலியிலிருந்து தலப்பறக் கோட்டை என்ற இடத்தை அடைந்து அங்கு கோட்டைத் தலைவருக்கு மரியாதை செய்து விட்டு, காளகட்டி என்ற இடத்தில் உள்ள சிவாலயத்திற்கு சென்று வழிபட்டு, அதன் அருகில் உள்ள அழுதா நதியில் நீராடி பூஜை செய்ய வேண்டும். இதன் பின் அழுதாமேடு என்று அழைக்கப்படும் குன்றின் மேல் ஏற வேண்டும். மிகக் கடினமான மலைப்பகுதி இது. (இதில் ஏறுபவர்களை அழ வைத்துவிடும் என்பதால் இதற்கு அழுதாமேடு என்ற பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.)

இஞ்சிப்பாறை

அழுதாமேட்டின் அருகே அமைந்த ஒரு பாறை. இதனருகில் கல்லிடும் பாறை ஒன்று உண்டு. அழுதை நதியிலிருந்து எடுத்துவரப்படும் கற்களை இந்தப் பாறையில் இடுவது வழக்கமான ஒன்று. இந்தப்பகுதியில் மூப்பன் கோயில் உள்ளது. இங்கு வழிபட்டு, அங்கேயே தங்கியும் செல்லலாம்.

கரிமலை

கரிமலை ஏற்றம் கடினம், கடினம் என்று ஒரு பாட்டு உண்டு. அந்த வரிகள் முற்றிலும் உண்மை என்பதை நிரூபிக்கும் ஏற்றம் இது. எட்டு அடுக்குகளாக உள்ள மலைப்பகுதி இது. இதில் எட்டாவது தட்டுதான் கரிமலை மேடு. இங்குள்ள கரிமலை நாதரை வழிபடுகிறார்கள் பக்தர்கள். இதன்பின் கரிமலை இறக்கம். இது கரிமலை ஏற்றத்தை விட கடினமானதுதான்.

பம்பை

சபரியாத்திரையில் எந்த வழியாக வந்தாலும் எல்லோரும் ஒன்று கூடுமிடம் பம்பைதான். இங்கு தான் புனித நதியான பம்பையாறு ஓடுகிறது. இங்கு புனித நீராடும் பக்தர்கள், பிதுர்க்கடன்களையும் நிறைவேற்றலாம். இங்கிருந்து புறப்பட்டு கணபதி கோயில், ராமர், அனுமன், பார்வதி மற்றும் நாகராஜாக்களை வணங்கிவிட்டு நீலிமலை ஏறவேண்டும்.

அப்பாச்சிமேடு

நீலிமலையை அடுத்துள்ளது அப்பாச்சிமேடு. இதன் இருபுறங்களும் பள்ளத்தாக்குகள் நிறைந்தபகுதி இது. இந்தப் பள்ளங்களில் உள்ள வனதேவதைகளை திருப்திப் படுத்த அரிசிமாவு உருண்டைகள் எறிவது வழக்கம். இந்த மாவு உருண்டைகள் அங்கேயே விலைக்கு கிடைக்கும். அப்பாச்சி மேட்டைக் கடந்தால் வருவது சபரிபீடம்.

சரங்குத்தி ஆல்

எருமேலியில் பேட்டை துள்ளும் கன்னி ஐயப்பசாமிகள் (முதன் முதலாக மற்றும் இரண்டாவதாக மாலை அணிந்து மலைக்கு வருபவர்கள்) அங்கிருந்து மரக்குச்சிகளால் ஆன சரங்களைக் கொண்டு வருவர். அதனை இந்தப்பகுதியில் குத்தி விட்டு தங்களது பயணத்தை தொடர வேண்டும்.

சன்னிதானம்

சரங்குத்தியிலிருந்து சிறிது தூரத்தில் சன்னிதானத்திற்கான பாதை நெருங்கிவிடுகிறது. பதினெட்டாம் படியை அடைந்ததும். அங்கு இருபுறமும் உள்ள காவல் தெய்வங்களை வணங்கிவிட்டு, தேங்காய் உடைக்க வேண்டும். பின்னர் சரண கோஷத்தை உரக்கச் சொல்லியபடி புனிதமான பதினெட்டாம் படிகளில் பக்தி பரவசத்துடன் ஏறவேண்டும். பின்னர் கலியுகவரதனை கண் குளிர தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் கோயிலை வலம் வந்து தாங்கள் கொண்டுவந்த நெய் தேங்காயை உடைத்து காணிக்கை செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து மாளிகைப்புறம் அம்மன் தரிசனம். அங்கு தேங்காயை தரையில் உருட்டிக் கொண்டே ஒரு பிரதட்சனம். அதைத் தொடர்ந்து நவக்கிரகங்கள், நாகர், வாவர் என ஒவ்வொரு சன்னதிகளில் தரிசனம் செய்ய வேண்டும்.

மண்டல பூஜை

சபரிமலையில் மண்டல பூஜை கார்த்திகை முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் நடைபெறும். முதல் நாள் தீபம் ஏற்றி வழிபாடுகள் தொடங்கும். முழுமையான விரதமிருந்த பக்தர்கள் ஐயனை தரிசிக்க வரும் காலமும் இதுவே. மண்டல பூஜைக்குப் பின்னர் கோயில் நான்கைந்து நாட்கள் அடைக்கப்பட்டுவிடும். மகர சங்கிரம தினத்தன்று மாலையில் நடத்தப்பெறும் தீபாராதனைக்காக மட்டும் விசேஷ ஆபரணங்கள் பந்தளத்திலிருந்து கொண்டுவரப்படும். சரண கோஷம் முழங்க, கருடன் வானில் வட்டமிட, வாத்திய இசை முழங்க ஆபரணப் பெட்டி பதினெட்டாம் படி வழியாக சந்நிதானத்தை அடையும். இந்த அணிகலன்கள் சாத்திய ஐயனின் திருக்கோலம் காணக்கிடைக்காத ஒன்று.
 
மகரஜோதி

சபரிமலையின் மிக மிக முக்கியமான அம்சமே மகரஜோதிதான். ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சிதரும் உன்னத வைபவம் அது. சபரிமலையாத்திரையின் நிறைவு மகரஜோதி வழிபாடு. ’”தம்ஸோ மா ஜ்யோதிர் கமய” எனும் ஞானப் பிரார்த்தனையின் உள் நின்று ஒளிதரும் ஒளியின் அடையாளமே மகரஜோதி. மகர சங்கிரம் நாளில் (தை மாதம் முதல் தேதி) சபரிமலை சந்நிதானத்தில் சந்தியா காலத்தில் தீபாராதனை நடக்கும்போது பொன்னம்பல மேட்டில் சிறிது நேரம் தோன்றி மறையும் அற்புத ஒளிதான் மகரஜோதி. ஆன்மீகம் ஒரு அற்புதம் என்பதை எடுத்துக் காட்ட சபரிமலை நமக்கு அளிக்கும் மேன்மை அது. தினமும் காலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு பிற்பகல் ஒரு மணி வரை நடை திறந்து இருக்கும். பின்னர் மாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

பம்பையிலிருது சன்னிதானம் செல்லும் வழியில் ஆங்காங்கே மருத்துவ முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக விநியோக்கப்படுகிறது. இது தவிர மருத்துவ வசதிகளும் உண்டு. பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் ஆக்சிஜன் பார்லர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மலை ஏறும் பக்தர்களில் யாருக்கேனும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அவர்களுக்கு இந்த பார்லர்களில் இலவசமாக ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது.

இது தவிர தினமும் மதியம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஆங்காங்கே உள்ள தகவல் மையங்களில் மைக் மூலம் பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்க அனைத்து மொழிகளிலும் அறிவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பண்டங்களின் விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இப்படி பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பக்தர்கள் தங்களுக்குத் தேவையான எல்லா விபரங்களையும் தகவல் மையம் மூலம் 24 மணி நேரமும் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

டோலி

பம்பையிலிருந்து சன்னிதானம் வரை உள்ள நான்கு கி.மீ தூரமுள்ள மலைப் பாதையில் நடந்து செல்ல இயலாதவர்களுக்காக டோலி வசதியும் இங்கு உண்டு. சாய்ந்த நிலையில் அமர்ந்து கொள்ளும் வசதி கொண்ட மூங்கில் டோலியை நான்கு நபர்கள் சுமந்து செல்கிறார்கள். இதில் சன்னிதானம் சென்று திரும்ப ஒரு நபருக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நடக்கவே முடியாத மலையில் டோலியை தூக்கி வருபவர்களின் பணி மிகக்கடுமையான ஒன்றுதான். முதியவர்களும், ஊனமுற்றோருக்கும் இது ஏற்றது. போக்குவரத்து சபரிமலைக்குச் செல்ல கேரளாவின் முக்கிய நகரங்களிலும் மற்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை மற்றும் தென்காசி ஆகிய இடங்களிலிருந்து நேரடி பஸ் வசதி உண்டு. ரயில் மூலம் வருபவர்கள் கேரளாவில் கோட்டயம் மற்றும் செங்கனூர் வழியாகவும், தமிழகத்தில் நெல்லை, தென்காசி வழியாக புனலூர் வரை ரயிலில் செல்ல முடியும். இங்கிருந்து பஸ்கள் மூலம் சபரிமலை செல்லலாம். கேரளாவில் புனலூர், கொல்லம், கோட்டயம், தமிழகத்தில் செங்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து அடிக்கடி பஸ்வசதி உண்டு. சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.
    
எருமேலியிலிருந்து நடந்து செல்பவர்கள் அழுதை, இஞ்சிப்பாறை, கரிமலை வழியாக மலைக்குச் செல்லலாம். இந்தப்பாதை 45 கி.,மீ.தூரமுடையது. வண்டியில் பெரியாரிலிருந்து கொழிகாணம், உப்புப்பாறை வழியாகவும் சபரிமலைக்குச் செல்ல முடியும். இந்த வழித்தடம் 28 கி.மீ தூரமுடையது.
   
இதுதவிர வாகனங்களில் வருபவர்கள் கேரளாவில் கோட்டயம், செங்கனூர் அல்லது புனலூர், பத்தனம் திட்டா வழியாக சபரிமலைக்குச் செல்லலாம். எருமேலியிலிருந்து பம்பை 80 கி.மீ, கோட்டயத்திலிருந்து 116 கி.மீ, திருவனந்தபுரத்திலிருந்து 180 கி.மீ, கொச்சியிலிருந்து
200 கி,.மீ. புனலூரிலிருந்து 101 கி,மீ, பத்தனம் திட்டாவிலிருந்து 65 கி.மீ தூரத்தில் பம்பையை அடையலாம்.

Tags : Sabarimala Pilgrimage ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி