×

சந்திரனின் சாபம் நீக்கிய பரிமளரங்கன்

சிந்தை தன்னுள் நீங்காதிருந்ததிருவே! மருவிளிய மைந்தா!
அந்தணாலிமாலே! சோலை மழகளிறே!
நந்தாவிளக்கின் சுடரே! நரையூர் நம்பீ! என்
எந்தாய்! இந்தயுளூராய்! அடியேற்கு இறையும் இரங்காயே!
- திருமங்கையாழ்வார்

சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க வைணவத் திருத்தலங்களில் ஐந்தாவது அரங்கமாக போற்றப்படுவது ‘பரிமளரங்கம்’ எனும் திருஇந்தளூர்.  இந்த இந்தளூர் தலம். 108 திவ்ய தலங்களில் 22வது திவ்ய தலமாகவும் ‘ஆலிநாடன் பாடு புகழ் ஸ்தலம்’ என அடியார்களால் போற்றப்பட்டும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் பெற்றும், வேதங்களுக்கு மணம் தந்ததால் ‘பரிமள அரங்கம்’ எனவும் அழகான பெயர் பெற்றது. இங்கு நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த காடுகள் விளங்குகின்றன.

திருஇந்தளூர் எனப்பெருமை வரக்காரணம் சந்திரனையே சாரும். முன்னொரு காலத்தில் தட்சப்பிரஜாபதி என்பவரால் சபிக்கப்பட்ட சந்திரன் க்ஷயரோகம் என்ற கொடுமையான நோய்க்கு ஆட்பட்டான். இங்குள்ள பொன்னி நதியாம் காவிரியில் துலாமாத இறுதி நாளன்று புனித நீராடி இக்கோயிலின் வலப்புறத்திலுள்ள புஷ்கரணியின் கரையில் கடுந்தவமிருந்து திருமாலின் அருளையும், தன்னைப் பற்றிய க்ஷயரோகம் நீங்கி, எப்பொழுதும் அவர்தம் திருவடியிலிருந்து வழிபடும் வரமும் வேண்டினான். அவன் வேண்டுதலுக்கு மனமிரங்கிய ஆழிவண்ணன் அருள்புரிந்தான்.

சந்திரன் தவமிருந்ததால், இத்தலம் திரு இந்தளூர் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள புஷ்கரணி, இந்து புஷ்கரணி என புராண சான்றாகியது. ‘இந்து’ என்ற சொல் சந்திரனைக் குறிக்கும். இங்கு திருமால், பரிமள ரங்கநாதராகவும், தாயார், சுகந்தவனநாயகியும் சேவை சாதிக்கிறார்கள்.
மிகத் தொன்மையான காலத்தில் திருமாலால் உபதேசிக்கப்பட்டு நான்முகனால் பாதுகாக்கப்பட்ட நான்கு வேதங்களையும், மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் கவர்ந்து சென்று கடல் நடுவில் ஒளிந்துக் கொண்டனர். மனம் வருந்திய பிரம்மதேவர் இங்குள்ள பரிமள ரங்கநாதரை சரண் புகுந்து வேதங்களை மீட்டுத் தருமாறு வேண்டினார். அவரின் வேண்டுதலை ஏற்று எம்பெருமான் மச்ச வடிவமெடுத்து கடல் நடுவே ஒளிந்த இரு அரக்கர்களை அழித்து, வேதத்தை மீட்டு, மீண்டும் பிரம்ம தேவனிடம் சேர்ப்பித்தார்.

அசுரர்கள் கைப்பற்றியிருந்ததால், நான்கு வேதங்களும் துர்நாற்றம் வீசின. நான்மறைகளும் தம் மேல் எழும் துர்நாற்றத்தைப் போக்க பெருமானாம் பரிமளரங்கனைக் குறித்து வேண்டின. அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றிய ரங்கநாத பெருமான், நறுமணம் வீசச் செய்தார். சுகந்த மணத்தை வேதங்களுக்கு அளித்ததால், இத்தலம் ‘சுகந்தாரண்யம்,’ ‘பரிமள ரங்கம்’ எனப் பெயர் பெற்றது.  மாமன்னன் அம்பரீஷ் தர்ம, வேத சாஸ்திரப்படி ஆண்டு, மக்கள் அனைவரையும் இறைத் தொண்டிலும், விரதத்திலும் ஈடுபடச் செய்தான். அவருடைய அரசாட்சியில் ஏகாதசி விரதம் மக்களால் பரிபூரணமாக அனுஷ்டிக்கப்பட்டு, அவர்கள் முழுப் பயனடைந்தனர்.

இப்படி பக்தியில் ஆழ்ந்த மன்னரால் நிர்மாணிக்கப்பட்டு குடமுழுக்கும் சிறப்பிக்கப்பட்டு, பிரமோற்சவம், தேர்திருவிழா என ஏற்படுத்தி சிறப்புற நடத்தப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. திருஇந்தளூர் எழுந்தருளி அழகன் ரங்கன், பரிமள சுகந்தத்தோடும், பாற்கடலில் பள்ளிகொண்ட  வண்ணமும் உள்ள பேரழகைக் காண, பல கோடி கண்கள் தேவை என்பது மட்டுமல்லாது, அதற்குப்  புண்ணியமும் செய்திருக்க வேண்டும். மரகதத் திருமேனியாகவும் நான்கு திவ்ய ஹஸ்தங்களோடும், வீர சயனமாக, பள்ளி கொண்ட பெருமானின் அழகைச் சொல்லில் வடிக்க வார்த்தையில்லை. திருமங்கையாழ்வார் ‘இன்ன வண்ணமென்று காட்டிய இந்தளூர் பரிமளரங்கன்’ என பக்தி பரவசத்துடன் பாடினார்.

இங்குள்ள ராஜகோபுரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. “பச்சை மாமலை போல் மேனி, பவளவாய் கமலச் செங்கண், அச்சுதா..” என மரகத பச்சை வண்ணனரான ரங்கன், ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் துலங்க இத்தலத்தில் சேவை சாதிக்கிறார். பிரம்மா பெருமானின் நாபியில் எழுந்தருளி உள்ளார். எம்பெருமானின் திருவடியில் அமர்ந்து எமதர்ம ராஜரும், அம்பரீஷ் சக்கரவர்த்தியும், இரவு பகலாக பூஜித்து கொண்டிருக்கிறார்கள்.  தாயார் ஸ்ரீசுகந்தவன நாயகியாய் அருள்கிறாள். சந்திரனின் சாபம் நீக்கிய தலம் என்பதால், ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கினால், அத்தகைய தோஷங்கள் நீங்கப் பெறுகிறார்கள். இத்தலம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள திருஇந்தளூரில் அமைந்துள்ளது.

- ஆர்.அபிநயா

Tags :
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா