×

திருவண்ணாமலை

 திருவண்ணாமலையில்தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடினார். பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தர் பிறந்த தலம் இது.

 சிவன் சிவசக்தி வடிவமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் கொண்டது திருவண்ணாமலையில் ஒரு கார்த்திகை தீபத் திருவிழாவின்
போதுதான்.

 அண்ணாமலைக்கு மேற்கில் திருமால் நிறுவிய லிங்கம், அடி அண்ணாமலையார் என வழங்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தின் 2, 3ம் நாட்களில் உற்சவ அருணாசலேஸ்வரர் இங்கு எழுந்தருள்கிறார்.

 கௌதம ஆசிரமத்திற்கு எதிரில் மலை மூன்று பிரிவாகக் காட்சி தரும் இடம் த்ரிமூர்த்தி தரிசனம் எனப்படும். அங்கு சேஷாத்ரி சுவாமிகள் மண்ணால் தன்னை மூடிக்கொண்டு தவமிருந்த இடம் உள்ளது. இங்கு மட்டும் மண் கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது.

 திருவிழாக்காலங்களில் அண்ணாமலையார் ராஜகோபுரம் வழியாக வெளிவருவதில்லை. அதற்கு அடுத்த வாசல் வழியாகவே
எழுந்தருள்கிறார்.

கார்த்திகை தீபத்தன்று மலைமேல் மகாதீபம் ஏற்ற பயன்படும் வெண்கலக் கொப்பரை கி.பி.1745ம் ஆண்டு மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதி ராயரால்
வழங்கப்பட்டது.

 கிரிவலப்பாதையில் உள்ள இடுக்குச் சுனையில் உள்ள நீரை வலது கையால் பாறையைப்பிடித்துக் கொண்டு இடக்கையால் மட்டுமே நீர் அருந்த முடியும். எனவே இதற்கு ஒரட்டுக் கை சுனை என்று பெயர்.

 மலையின் கிழக்கே அர்க்க மலையிலிருந்து இந்திரனும், தெற்கே தெய்வமலையில் இருந்து எமனும், மேற்கே தண்டமலையிலிருந்து குபேரனும், மற்ற திக்குகளிலிருந்து தேவர்களும் அண்ணாமலையானை வணங்குவதாக
ஐதீகம்.

 எமதர்மராஜரின் கணக்கர் சித்ரகுப்தரும் அவருடன் விசித்ர குப்தரும் இத்தலத்தில் தனி சந்நதியில் அருள்கின்றனர்.

 கிரிவலப் பாதையில் இடுக்குப்பிள்ளையார் கோயிலின் மூன்று வாசல்களையும் கடந்து வருவோர்க்கு நோய்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது. மழலை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த வரம் கிட்டுவதாகவும் கூறப்படுகிறது.

 கொடியேற்றவும், மலைமேல் தீபம் ஏற்றவும் திரியாகப் பயன்படும் துணியை, பர்வதராஜகுலத்தினரும், தேவாங்கர் இனத்தவரும் இன்றும் அளித்து வருகிறார்கள். மகா தீபம் ஏற்ற, திரியாக ஆயிரம் மீட்டர் துணியும், 3,500 கிலோ நெய்யும் பயனாகின்றன. இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும். மகா தீபம் ஏற்றப்படும் முன்பு சில நிமிடங்கள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருள்வார்.

 திருவண்ணாமலையில் ஆலய தரிசனம் செய்த பின்னரே கிரிவலம் வருவது மரபு. ஒருபோதும் வாகனத்தில் ஏறி கிரிவலம் கூடாது என்று அருணாசல மகாத்மிய நூல் தெரிவிக்கிறது.

 அருணாசலேஸ்வரர் சந்நதி முன் உள்ள நந்தியம்பெருமானும், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களின் முன் உள்ள நந்திகளும் ஈசனை நோக்காமல் மலையை நோக்கியே அமர்ந்துள்ளன.

 ஆலயத்துள் கல்யாண மண்டபத்திற்கருகே உள்ள தல விருட்சமான மகிழ மரத்தின் அருகிலிருந்து பார்த்தால் திருவண்ணாமலை ஆலயத்தின் ஒன்பது கோபுரங்களையும் ஒருசேர தரிசிக்கலாம்.

Tags : Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...