×

கலையால் உலகம் இயங்கும்

பலகோடி யுகங்கள் கண்டு
பற்பல உயிரினம் படைத்து
பலவண்ண நிறங்கள் கோர்த்து
பசுமை நிரந்தர ஆடையாக
பகல் விளக்கு வீரசூரியனாய்
அகல் விளக்கு முழுநிலவாய்
அண்டம் பேரண்டம் கட்டி
ஆளும் அன்னை மகாசக்தி!
   
   
அறிவாகி, அறிவெனும் சுடராகி
உயிராகி உயிரின் விதியாகி
சத்தியமாகி, சத்திய விளக்கமாகி
புத்தியாகி புத்தியெனும் உணர்வாகி
கல்வியாகி  கல்வியின் பயனாகி
கவிதையாகி அதன் பெருமையாகி
ஞானமாகி ஆழ்ந்த  பொருளாகி
கலைகள் வளர்க்கும் கலைவாணி!
     
கலையால் உலகம் இயங்கும்
கலையால் இதயம் உயிர்க்கும்
கலையால் கவலைகள் தீரும்
கலைகள் திரவியம் சேர்க்கும்
பொன்மாளிகை கலைநயம் கண்டு
பொன்மகளின் பொற்கிழி உண்டு!
தீதில்லா செல்வம் குவித்து
திறமைகள் வளர்த்து வாழ்வோம்!
   
காவியம் படைக்கும் அறிவும்
கடைத்தெரு தூய்மை பணியும் கலையே
பாரபட்சமின்றி நினதருள்
அள்ளி வழங்கிடு திருவே!
பாறை கல்வி அதன்
ஊற்று செல்வம் - அது
உருண்டோடி கடல் சங்கமித்தல்
சக்தியெனும் தத்துவம்!
   
அணையா அன்புச்சுடர் அன்னையாய்
அறிவுத்தந்தையாய் - உதவிடும்
தமக்கையாய், குருவாய்
அணைக்கும் துணையாய்
ஆலோசனை மந்திரியாய்
நல்வாழ்வு தொழிலாய்
கற்பனை கவி தேனாய்
அந்திம தீயாய் எனை
ஆகுதி ஏற்கும் சக்திலீலை
எண்ணி வியந்துருகினேன்!
நினதருளால் அறிவு பெற்றதனை
நினதடியில் பாமாலை சூட்டி
சரணடையும் பாக்கியம் பெற்றேன்!

விஷ்ணுதாசன்

Tags : world ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் உற்சாக...