சகலமும் அருள்வாள் சாகம்பரி தேவி

பராசக்தியின் திருக்கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று. துர்கமன் எனும் அசுரன் நான்முகனை வேண்டி கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய பிரம்மன். அவனுக்கு வேண்டும் வரமளித்தார். அந்த வரத்தின்மூலம் அசுரன், நான்முகனிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றான். அதனால் வேதங்களும், மந்திரங்களும் அவனுக்கு அடிமையாயின. அனைத்துமே அவன் வசமாகி விட்டதால் பக்தர்கள் செய்யும் எந்த புண்ணிய செயல்களின் பலனும் அவர்களுக்குக் கிட்டவில்லை. முனிவர்களும், ரிஷிகளும் யாகங்களையும், பூஜைகளையும் செய்யாமல் உயிருக்கு பயந்து குகைகளிலும், பொந்துகளிலும் மறைந்து வாழ்ந்தனர்.

அதனால் மழை பொய்த்துப் போனது. மழை பெய்யாததால் பயிரினங்கள் செழிக்கவில்லை. எங்கும் வறட்சி, பஞ்சம், அன்ன ஆகாரங்கள் இன்றி உயிரினங்கள் மடிந்தன. அதைக் கண்டு அஞ்சிய தேவரும் முனிவரும் இமயமலைச்சாரலில் ஒன்று கூடி பராசக்தியைப் பிரார்த்தித்தனர்.  அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் கைகளில் பச்சைப்பயிர் காய்கறிகளுடன் தோன்றி அனுக்ரஹம் செய்தாள். சில நிமிடங்களில் காய்கள், கனிகள், தானியங்கள், உணவுப்பொருட்கள் போன்றவை அவள் உடம்பிலிருந்து பூத்துக் குலுங்கி தேவியின் அருள் மழையோடு பொழிந்தன. உணவுப் பஞ்சத்தைப் போக்கிய தேவி பின்  பக்தர்களின் கஷ்டங்களுக்குக் காரணமான துர்கமனை தன் சூலாயுதத்தால் அழித்தாள்.

உலக மக்களின் பஞ்சத்தைக் கண்டு மனம் வருந்தி தேவி சிந்திய கண்ணீரே மாபெரும் மழையாக மாறி ஒன்பதே நாட்களில் உலகமெங்கிலும் உள்ள ஆறு, ஏரி, குளங்களையெல்லாம் நிரம்பியது. பச்சைப் பயிர்களும் செழித்து வளர்ந்து உலகம் சுபிட்சமானது. தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி கைகளில் பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால் சாகம்பரி என்ற பெயரிலும் அவர்கள் வணங்கி வழிபட்டனர். சாகம் எனில் பச்சைக் கறிகாய் என்று பொருள். துர்கமனை அழித்ததால் துர்க்கா தேவி என்றும் இத்தேவிக்கு பெயருண்டு. சாகா என்றால் மாமிசமில்லாத உணவுப் பொருள் என்றுமொரு பொருள் உண்டு. காரி எனில் அதைக்கொண்டவள் எனவே சாகாரி எனும் பொருள்படி மகாராஷ்ட்ராவில் இத்தேவி வணங்கப்படுகிறாள்.

Related Stories: