×

குழந்தை வரம் அருளும் பெரியநாயகி அம்மன்

சேத்துப்பட்டு அருகே அருள்பாலிக்கிறார்

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு அருகே உள்ள தேவிகாபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. அன்னையின் திருநாமம் பெரியநாச்சியார் என்னும் பெரியநாயகி. காஞ்சி மாநகரில் அன்னை காமாட்சி  தனிபெரும் ஆலயத்தில் எழுந்தருளியிருப்பதுபோல இங்கும் அன்னை ஆதிசக்தி தனி  ஆலயத்தில் எழுந்தருளி அருளாட்சி செய்து வருகிறாள். இக்கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாக  கருதப்படுகிறது. 7 நிலை ராஜகோபுரம் மற்றும் 3 பிரகாரங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. தேவி இங்கு தவமிருந்து சிவபெருமானிடம் சேர்ந்ததால்  திருமணத்தடை உள்ளவர்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து வழிபட்டால்  திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஒரு சமயம் அன்னையும், சிவனும் கயிலைமலையில் வீட்டிறிருக்கும்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கி சென்றார். அதனை கண்டு வருத்தமடைந்த அன்னை இறைவனை நோக்கி வணங்கி ஐயனே தங்கள் உடலில் சரிபாதியை எனக்கு தரவேண்டும் என்று வேண்டினாள். சிவனும் சக்தியிடம் ‘நீ பூவுலகம் சென்று காஞ்சியபதியில் (காஞ்சிபுரம்) காமாட்சி என்ற பெயருடன் தவமிருந்து என்னை பூஜித்து வா. உரிய காலத்தில் உன்னை மணந்து கொள்வேன். பின்னர் திருவருனை (திருவண்ணாமலை) வந்து வழிபாடு செய்யும்போது உமக்கு இடபாகம் தருவேன்’ என்று உறுதி அளித்தார். அன்னையும் காஞ்சிபுரம் வந்து ஏகாபரநாதரை மணந்தார்.

பின்னர் திருவண்ணாமலை செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டலம் தங்கி இங்குள்ள கனககிரி நாதரை வணங்கி தவமிருந்தார். அதனால் இத்தலம் தேவிகாபுரம் என்று பெயர் பெற்றது. ஆலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்பு சிற்பங்களாக அமைந்த லிங்கோத்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர்கள் காட்சியளிக்கின்றனர். கருவறையின் எதிரே பலிபீடமும், கொடிமரமும் உள்ளன. இதையடுத்து  நந்திதேவர் அன்னையை நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். கோயிலின் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் ஆறுமுகப்பெருமானும் உள்ளனர்.  அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய 5 நிலைக்கோபுரம் உள்ளது.  இரண்டாம் பிரகாரத்தில்  வலப்புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி கொலு மண்டபமும் உள்ளன.  

அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கி நடராஜர் அருள்பாலிக்கிறார். முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களும், விநாயகர், திருமால், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீகேஸ்வரர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி காட்சி தருகிறாள். அன்னை மேல் இருகரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு நின்ற கோலத்தில் அழகுறக் காட்சியளிக்கின்றாள். அம்பாள் குழந்தை வரம், கல்யாண வரம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இந்த அம்மனை குழந்தை இல்லாத தம்பதிகள் மனமுருக வேண்டிக்கொண்டு விளக்கேற்றி கோயிலை சுற்று வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும்  அம்பாளுக்கு பால், தயிர் இளநீர், எண்ணெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!