×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

196. ஹிரண்யநாபாய நமஹ

(Hiranyanaabhaaya namaha)
(195-வது திருநாமமான ‘புஜகோத்தம:’ என்பதிலிருந்து 199-வது திருநாமமான ‘ப்ரஜாபதி:’ வரையிலான 5 திருநாமங்கள், திருமால் ஆதிசேஷனில் சயனத்திருக்கும் வடிவமாகிய பத்மநாப ரூபத்தின் பெருமைகளைச் சொல்கின்றன.)  மார்க்கண்டேய முனிவர் திருமாலைக் காண விரும்பிப் பல யுகங்களாகத் தவம் புரிந்தார். அவரது தவத்தைக் கலைக்க மன்மதன் எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. அத்தகைய திடமான தவத்தை மேற்கொண்ட மார்க்கண்டேயருக்கு நர-நாராயணர் வடிவில் காட்சியளித்த திருமால், “மார்க்கண்டேயா! உன் தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

 “உன்னைத் தரிசனம் செய்ததே யான் பெற்ற பெரும் பேறு! இதற்கு மேல் வேறு எந்த வரத்தையும் நான் விரும்பவில்லை. எனினும் நீயாக வரம் தர விரும்பி முன்வருவதால், ஒரு வரம் கேட்கிறேன்!” என்று சொன்ன மார்க்கண்டேயர், “உன்னை எல்லோரும் காக்கும் தெய்வம் என்று போற்றுகிறார்களே! உன் காக்கும் சக்தி எத்தகையது, நீ எப்படி உயிர்களைக் காக்கிறாய் என்பதை அடியேனுக்கு நீ காட்டியருள வேண்டும்!” என்று வேண்டினார். “காலம் வரும் போது காட்டுகிறேன்!” என்று சொல்லி விட்டுத் திருமால் மறைந்தார்.

 பல யுகங்கள் கடந்தன. திடீரென ஒரு நாள் ஊழிக் காலத்து வெள்ளம் வந்து உலகையே சூழ்ந்து கொண்டது. அந்த வெள்ளத்தில் சிக்கி மார்க்கண்டேயர் தத்தளித்தார். அப்போது ஓர் ஆல மர இலை அந்த வெள்ளத்தில் மிதந்து வருவதைக் கண்டார் மார்க்கண்டேயர். அந்த இலையில் ஒரு சிறுவன் சயனித்திருந்தான். அவன் தனது கைகளால் தனது வலக்கால் கட்டை விரலை எடுத்துத் தன் வாயில் வைத்தபடி மார்க்கண்டேயரைப் பார்த்துச் சிரித்தான்.  அச்சிறுவனின் மூச்சுக்காற்று மார்க்கண்டேயரை வேகமாக இழுக்க, அவர் அந்தச் சிறுவனுக்குள் சென்று விட்டார். சிறுவனுக்குள் சென்ற அவர், ஏழு தீவுகள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் என அனைத்து உலகுகளும் அச்சிறுவனின் வயிற்றுக்குள் இருப்பதைக் கண்டார். சிறுவன் மூச்சை வெளியே விட்ட போது மார்க்கண்டேயர் வெளியே வந்து விழுந்தார். “யார் இந்த மாயச் சிறுவன்?” என்று சிந்தித்தபடி அவனை உற்று நோக்கினார் மார்க்கண்டேயர்.

 “காலம் வரும் போது என் காக்கும் திறனை உனக்குக் காட்டுகிறேன்!” என்று சொன்ன திருமால் தான் இப்போது ஆலிலைக் கண்ணனாகத் தனக்குத் தரிசனம் தந்துள்ளார் என உணர்ந்து, “அனைத்து உலகுகளையும் ஆள்பவனான உனது சக்தியெனும் சமுத்திரத்தில் ஒரு துளியைக் கண்டதற்கே நான் மலைத்துப் போய்விட்டேன்!” என்று சொல்லி வியந்து திருமாலைத் துதித்தார் மார்க்கண்டேயர். மேலும், “காக்கும் சக்தியைக் காட்டுவதாகச் சொல்லிவிட்டு நீ உனது அழிக்கும் சக்தியை அல்லவோ காட்டிக் கொண்டிருக்கிறாய்! காணும் இடமெல்லாம் வெறும் ஊழிக் கடலாகவே உள்ளதே. உலகை எல்லாம் நீ அழித்து விட்டாயா?” என்று கண்ணனிடம் கேட்டார் மார்க்கண்டேயர்.

 அதற்குக் கண்ணன், “மார்க்கண்டேயரே! இப்போது நான் செய்த செயல் சம்ஹாரம் அல்ல. ஊழிக் கடலில் இருந்து அனைத்து உயிர்களையும் காக்கும் எண்ணத்தில் அனைத்து உலகுகளையும் உயிர்களையும் உண்டேன். இந்திரன், யமன், பிரம்மா உட்பட அனைவருமே இப்போது என் வயிற்றினுள்தான் இருக்கிறார்கள். ஊழிக் காலம் முடியும் வரை அவர்களை எனது வயிற்றுக்குள் வைத்துக் காப்பேன். மீண்டும் படைப்புக் காலம் வருகையில், எனது உந்தியில் இருந்து ஒரு தாமரை தோன்றும். அதில் பிரம்மாவை முதலில் படைப்பேன். அதன் பின், என் வயிற்றுக்குள் நான் வைத்துப் பாதுகாக்கும் உயிர்கள் ஒவ்வொருவருக்கும் பிரம்மாவின் மூலம் மீண்டும் பிறவி தருவேன். இவ்வாறு சிருஷ்டி-சம்ஹாரம் இரண்டுமே சுழற்சி முறையில் தொடரும்!” என்று கூறினான்.

இதை நம்மாழ்வார்,

“காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே
வாய்த்த இந்திரன் திசைமுகன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே”  - என்று பாடியுள்ளார்.

 ‘ஹிரண்ய’ என்றால் அழகிய என்று பொருள். அழகிய இவ்வுலகையும் இதில் வாழும் உயிர்களையும் ஊழிக் காலத்தில் உள்ளே வைத்துக் காத்து, படைப்புக் காலத்தில் வெளியே தோற்றுவிக்கும் அழகிய நாபியை உடையவராகத் திருமால் விளங்குவதால், ‘ஹிரண்யநாப:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 196-வது திருநாமம்.  “ஹிரண்யநாபாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மார்க்கண்டேயரைப் போன்ற இளமையையும் நீண்ட ஆயுளையும் திருமால் அருள்வார்.

197. ஸுதபஸே நமஹ  (Suthapase namaha)

 ராமாநுஜர் திருவரங்கத்தில் வாழ்ந்த காலம். காவிரிக் கரையிலுள்ள மணலில் சிறுவர்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து நிமிர்த்தி வைத்து, “இவர் தான் நம் பெருமாள்” என்று சொன்னார்கள். அந்தப் பெருமாளுக்குப் பிரசாதமாக மண் உருண்டைகளையே எடுத்து நிவேதனம் செய்தார்கள்.  தங்களுடைய விளையாட்டு, பார்ப்போரின் கண்களுக்குக் கோயிலில் நடைபெறும் நித்திய பூஜையைப் போலவே தெரிய வேண்டும் என்று கருதினார்கள் அச்சிறுவர்கள். அதனால், ஒருவன் அர்ச்சகரைப் போலவும், ஒருவன் மடப்பள்ளி சமையல்காரரைப் போலவும், சிலர் வேதம் ஓதுவாரைப் போலவும், சிலர் ஆழ்வார் பாசுரங்களை ஓதுவார் போலவும், சிலர் பாதம் தாங்கிகள் போலவும் பலவாறு வேடமிட்டுக் கொண்டார்கள். அச்சிறுவர்களுள் ஒருவன், கோயிலில் முதல் மரியாதைகளைப் பெறும் ராமாநுஜரைப் போல் காவி உடை அணிந்து கொண்டான்.

 கோவிலில் பிரசாத நிவேதனம் ஆனவுடன், அர்ச்சகர், “ஜீயரே வாரும்!” என்று ராமாநுஜரை முதல் மரியாதை பெற்றுக் கொள்வதற்காக அழைப்பது வழக்கம். அதுபோல், இங்கேயும் அர்ச்சகர் வேடமணிந்திருந்த சிறுவன், ராமாநுஜர் வேடத்திலிருந்த சிறுவனைப் பார்த்து, “ஜீயரே வாரும்!” என்று அழைத்தான்.  ஆனால் தற்செயலாக அங்கே வந்த ராமாநுஜர், “ஜீயரே வாரும்!” என்ற குரலைக் கேட்டு, “அடியேன் தாசன்!” என்று சொல்லிக் கொண்டு ஓடி வந்தார். “பகவத் பிரசாதம்!” என்று சொல்லி மண் உருண்டையை அந்தச் சிறுவன் ராமாநுஜரிடம் தந்தான். “யாம் பெறும் சம்மானம்!” என்று சொல்லிக் கண்ணில் ஒற்றிக் கொண்டு மண் உருண்டைப் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார் ராமாநுஜர்.
 ராமாநுஜரின் சீடர்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்துப் போனார்கள். “என்ன சுவாமி இது? மண் உருண்டையைப் போய்ப் பிரசாதம் என்று சொல்லி வாங்கிக் கொள்கிறீர்களே!” என்று ராமாநுஜரிடம் கேட்டார்கள். “மண் உருண்டை என்று சொல்லாதீர்கள். இது பெருமாள் அமுது செய்த பிரசாதம்.

பெருமாளின் வாய்க்குச் செல்வதற்கு முன்னால் வாழைப் பழம், மாதுளம்பழம், திராட்சைப்பழம் எனப் பிரித்துச் சொல்லலாம். ஆனால் எப்போது அவரிடம் சென்று திரும்பி வந்து விட்டதோ, அதன்பிறகு அனைத்துமே பிரசாதம்தான். அதில் வேறுபாடில்லை. இந்த மண் உருண்டையும் பிரசாதமே!” என்றார் ராமாநுஜர்.  சீடர்களோ, “சுவாமி! முதலில் அங்கு இருப்பவர் பெருமாளே இல்லை. விளையாட்டுக் குழந்தைகள் ஒரு கல்லை வைத்து அதற்கு நிவேதனம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகத்துக்கா நிவேதனம் செய்தார்கள்?” என்று கேட்டார்கள்.

 அதற்கு ராமாநுஜர், “சீடர்களே! உங்களுக்குக் கீதை தெரியாதா? “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்” (என் பக்தர்கள் எந்த வடிவில் என்னை வழிபடுகிறார்களோ, அந்த வடிவில் நான் வந்து அவர்களுக்கு அருள்புரிவேன்) என்று கண்ணன் கூறியுள்ளானே! நம் பொய்கையாழ்வார்,

“தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமர் உகந்தது எப்பேர் மற்றப்பேர் - தமர் உகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியான் ஆம்”

என்று பாடியுள்ளாரே! அடியார்கள் எந்த வடிவில் பெருமாளை வழிபட விரும்புகிறார்களோ, அந்த வடிவில் அவர்களுக்கு அவர் காட்சி தருகிறார் என்பதைக் கண்ணனும் ஆழ்வார்களும் இவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்கும் போது, இந்தச் சிறுவர்கள் தங்கள் பிஞ்சு மனதில் பக்தியோடும், இந்தக் கல்லில் பெருமாள் உள்ளார் என்ற நம்பிக்கையோடும் பூஜை செய்கையில், அந்தக் கல்லில் பெருமாள் இருப்பாரா மாட்டாரா?” என்று சீடர்களைப் பார்த்துக் கேட்டார்.
 “நிச்சயம் இருப்பார்!” என்று கூறினார்கள் சீடர்கள்.

 “அப்படியானால் நீங்களும் சென்று பிரசாதம் பெற்றுக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சொன்னார் ராமாநுஜர்.  ‘தபஸ்’ என்றால் சிந்தனை என்று பொருள். “தப ஆலோசனே” என்கிறது வடமொழி நிகண்டு. அடியார்கள் தம் மனதில் சிந்திக்கும் வடிவம் எதுவோ, அச்சிந்தனையிலுள்ள வடிவையே தன் வடிவாகக் கொண்டு திருமால் விளங்குவதால், ‘ஸுதபா:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 197-வது திருநாமம்.
 “ஸுதபஸே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பிய நற்பலன்களை அவர்கள் விரும்பிய படி திருமால் அருள்வார்.
 
198. பத்மநாபாய நமஹ (Padmanaabhaaya namaha)

 திவாகரர் என்ற முனிவர் தினமும் திருமாலுக்குப் பூஜை செய்து வந்தார். ஒருநாள் அவர் முன்னே ஓர் அழகான சிறுவன் வந்து நின்றான். அவனைக் கண்ட அடுத்த நிமிடமே அவனது அழகில் மயங்கினார் திவாகர முனிவர். அந்தச் சிறுவன் யார் என்று கூட விசாரிக்காமல், “கண்ணா! எப்போதும் என்னோடேயே நீ இருப்பாயா?” என்று கேட்டார். அந்தச் சிறுவனோ, “நான் உங்களோடு வசிக்க வேண்டுமெனில், நான் என்ன செய்தாலும் நீங்கள் என் மீது கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும்! நீங்கள் கோபப்பட்டால் அடுத்த நொடியே உங்களை விட்டுச் சென்று விடுவேன்!” என்று சொன்னான்.

திவாகர முனிவரும் சம்மதித்தார். சிறுவன் அன்று முதல் முனிவரின் ஆசிரமத்தில் வசிக்கத் தொடங்கினான்.  முனிவருக்கு அன்றாடம் பல தொல்லைகள் கொடுத்து வந்தான் சிறுவன். முனிவர் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பாத்திரங்களை நாசம் செய்வதும் சிறுவனின் தினசரி நடவடிக்கைகளாக இருந்தன. ஆனால் முனிவர் அத்தனையையும் பொறுத்துக் கொண்டிருந்தார். ஒருநாள் முனிவர் பூஜை செய்யும் சாளக்கிராமத்தை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டான் சிறுவன். அதைக் கண்டு வெகுண்ட முனிவர், “இனியும் உன் விஷமங்களை என்னால் சகித்துக் கொள்ள முடியாது!” என்று சொல்லிச் சிறுவனைப் பிடித்துக் கீழே தள்ளினார். “நம் ஒப்பந்தத்தை நீங்கள் மீறியதால், இனி உங்களோடு நான் இருக்க மாட்டேன். என்னை நீங்கள் காண விரும்பினால் அனந்தன் காட்டுக்கு வாருங்கள்!” என்று சொல்லி விட்டு மறைந்தான்.

 இத்தனை நாட்கள் தன்னுடன் சிறுவன் வடிவில் இருந்தவன் மாயக் கண்ணன் என்பதை அப்போது தான் உணர்ந்தார் திவாகர முனிவர். உணவு உண்ணாமல், உறக்கமில்லாமல், கண்ணன் சொன்ன அனந்தன் காடு இருக்கும் இடத்தைத் தேடிப் பல நாட்கள் அலைந்தார். எத்தனையோ பேரிடம் விசாரித்தும் அனந்தன் காடு இருக்கும் இடத்தை அவரால் அறிய முடியவில்லை. களைத்துப் போய் ஒரு மர நிழலில் அமர்ந்தார். அருகிலிருந்த குடிசையில் கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். கணவன் மனைவியைப் பார்த்து, “நீ இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் உன்னை அனந்தன் காட்டில் கொண்டு போய் விட்டு விடுவேன்!” என்று கூறினான். அதைக் கேட்டு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய முனிவர், அவனிடம் சென்று அனந்தன் காடு இருக்கும் இடத்தை விசாரித்தார். அவனும் வழி சொன்னான்.

 கல்லும் முள்ளும் நிறைந்த அக்காட்டுப் பாதையில் கண்ணனைக் காணும் ஆவலுடன் பயணிக்கலானார் திவாகர முனிவர். இறுதியாக அனந்தன் காட்டை அடைந்தார். அங்கே கண்ணனையும் தரிசித்தார். ஆனால் முனிவரைக் கண்டவுடன் கண்ணன் ஓடத் தொடங்கினான். திவாகரரும் அவனைத் துரத்திச் சென்றார். ஓர் இலுப்பை மரத்துக்குள் சென்று கண்ணன் மறைந்தான். அந்த மரம் முறிந்து கீழே விழுந்தது. அந்த மரம் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட திருமாலின் வடிவமாக மாறியது. எட்டு மைல் தூரம் நீண்ட திருமேனியோடு திருமால் காட்சியளித்தார். கேரளாவில் உள்ள திருவல்லம் எனும் ஊரில் அவரது தலையையும், திருவனந்தபுரத்தில் அவரது உடலையும், திருப்பாதபுரம் எனும் ஊரில் அவரது திருவடிகளையும் தரிசித்தார் முனிவர்.

 “இத்தகைய பெரிய உருவத்துடன் இருக்கும் உன்னை அடியேனால் முழுமையாகத் தரிசிக்க முடியவில்லை. எனக்காக உனது திருமேனியின் அளவைக் குறைத்துக் கொள்ள முடியுமா?” என்று வேண்டிய திவாகரர், தனது கையிலுள்ள தண்டத்தைக் கீழே போட்டு, “இதன் நீளத்தில் மூன்று மடங்குக்கு மிகாமல் நீ வடிவம் எடுத்துக் கொள்ள வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டார். திருமாலும் தனது வடிவைக் குறைத்துக் கொண்டு அவரது தண்டத்தின் மூன்று மடங்கு நீளத்துக்குட்பட்ட வடிவத்தோடு திருவனந்தபுரத்தில் திவாகர முனிவருக்குக் காட்சியளித்தார்.

 “முன்பு மூன்று வெவ்வேறு இடங்களுக்குச் சென்று எனது உடலின் மூன்று பகுதிகளைத் தரிசித்தீர்கள். அதை நினைவூட்டும் விதமாக, இங்கே திருவனந்தபுரத்தில் மூன்று வாசல்கள் வழியாக என் உடலின் மூன்று பகுதிகளைத் தரிசிக்கலாம்!” என்று கூறினார் திருமால்.  அவரது உந்தியில் இருந்து பெரிய தாமரை மலர்ந்து வருவதைக் கண்டார் முனிவர். அத்தாமரையில் எட்டு இதழ்கள் இருந்தன. அவற்றுள் ஒரு இதழ் பொன் நிறத்தில் இருந்தது. அதுதான் மேரு மலை என முனிவர் உணர்ந்து கொண்டார். ‘பத்மம்’ என்றால் தாமரை என்று பொருள். தனது நாபியில் பத்மத்தைக் கொண்டவராகத் திருவனந்தபுரத்தில் திருமால் தரிசனம் தருவதால், அவருக்கு ‘பத்மநாப:’ என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 198-வது திருநாமம்.  “பத்மநாபாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், அனந்தபத்மநாப ஸ்வாமியின் பரிபூர்ணமான அருளுக்குப் பாத்திரமாவார்கள்.

199. ப்ரஜாபதயே நமஹ (Prajaapathaye namaha)

 திருமால் மோகினி அவதாரம் எடுத்த செய்தியைக் கேள்வியுற்ற பரமசிவன், பார்வதியை அழைத்துக் கொண்டு திருப்பாற்கடலுக்குச் சென்றார். அங்கே திருமாலிடம், “பாற்கடலில் இருந்து வந்த அமுதம் அசுரர்களுக்குக் கிட்டாமல், தேவர்களுக்குக் கிட்டும் பொருட்டு, அசுரர்களை மயக்கும் மோகினியாக நீங்கள் பெண் வேடம் பூண்டதைக் கேள்வியுற்றேன். ஆனால் ஆலஹால விஷத்தை அருந்திவிட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தமையால், என்னால் அப்போது வந்து உங்களது மோகினி அவதாரத்தைத் தரிசிக்க முடியவில்லை. இப்போது எனக்காக இரண்டாவது முறையாக மோகினி அவதாரம் எடுக்க முடியுமா?” என்று கேட்டார் பரமசிவன்.

 அவரது விருப்பத்தை நிறைவேற்றத் திருமால் மோகினியாகப் பரமசிவனுக்குக் காட்சியளித்தார். மோகினியைத் தரிசித்த மாத்திரத்தில் பரமசிவன் மோகினி மேல் காதல் கொண்டார். அப்போது பரமசிவனின் வீர்யம் கசிந்து அதிலிருந்து
ஐயப்பன் தோன்றினார்.  இந்தச் சம்பவத்திற்குப் பின் பரமசிவன் சிந்தித்துப் பார்த்தார். “திருமால் தான் புருஷோத்தமன் என்று போற்றப்படுபவர். மற்ற அனைத்து ஜீவாத்மாக்களும் பெண்களுக்குச் சமமானவர்களே. இவ்வாறு இருக்க, புருஷோத்தமரான திருமாலைப் போய் நமக்கு நாயகியாக எண்ணி விட்டோமே. இது பெரும் தவறாயிற்றே!” என்று அவர் உள்ளத்தில் தோன்றியது.

 தன் தவறுக்கு வருத்தம் தெரிவிக்க எண்ணிய பரமசிவன், தமிழக-கேரள எல்லையிலுள்ள திருவட்டாறு என்னும் திவ்ய தேசத்துக்குச் சென்று, அங்கு ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் ஆதிகேசவப் பெருமாளிடம் மன்னிப்பு கோரினார். ‘க’ என்பது பிரம்மாவைக் குறிக்கும். ‘ஈச’ என்பது சிவனாகிய என்னைக் குறிக்கும். க, ஈச இருவருக்கும் தலைவனானபடியால், நீங்கள் ‘கேசவன்’ என்று அழைக்கப்படுகிறீர்கள். அத்தகைய கேசவனான உங்களை எனது நாயகியாக எண்ணியது தவறு!” என்றும் கூறினார்.

 அதற்குத் திருமால், “இதில் எந்தத் தவறுமில்லை. என் பக்தர்கள் விரும்பும் போதெல்லாம் அவர்கள் விரும்பும் வடிவங்களை நான் எடுத்துக் கொள்வேன். நீங்கள் என்னைப் பெண்வடிவில் காண விழைந்தபடியால் பெண்ணாகக் காட்சி தந்தேன்!” என்று கூறினார். (இன்றும் திருவட்டாறு திவ்ய தேசத்தில் ஆதிகேசவப் பெருமாளுக்கு அருகில் சிவபெருமான் இருப்பதைக் காணலாம்!) மேலும், “அனந்தன் காட்டுக்குச் செல்லுங்கள். உங்கள் வருத்தம் அனைத்தும் தீரும்!” என்றார் திருமால்.

 பரமசிவனும் அனந்தன் காடு என்றழைக்கப் படும் திருவனந்தபுரத்துக்குச் சென்றார். உலகைப் படைக்கும் பிரம்மாவைப் படைத்தவன் தானே என்பதைத் தெளிவாக விளக்கும் விதமாகத் தனது உந்தித் தாமரையில் பிரம்மாவுடன் திகழும் அனந்தபத்மநாபஸ்வாமியைத் தரிசித்தார் பரமசிவன். பரமசிவனை அருகில் அழைத்து அவர் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார் திருமால். அதனால் சிவனின் வருத்தம் தீர்ந்தது.

 இச்சம்பவத்தை நம்மாழ்வார்,

“அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர் அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங்கு அகப்பணி    செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக்கேண்மின் நாமும்போய்     நணுகவேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த     கோவிந்தனாரே”

என்று பாடியுள்ளார். குமரன் என்பது முருகன், ஐயப்பன் இருவரையுமே குறிக்கும். ஐயப்பனின் தந்தையான சிவனின் வருத்தத்தை போக்கிய கோவிந்தன் என்று பத்மநாபஸ்வாமியை மங்களாசாசனம் செய்கிறார் ஆழ்வார்.
 இன்றும் அனந்தபத்மநாபஸ்வாமி தனது வலது திருக்கரத்தால் சிவலிங்கத்தை ஆதூரத்துடன் அரவணைப்பதைத் திருவனந்தபுரத்தில் காணலாம்.  இவ்வாறு பிரம்மா, சிவன், இந்திரன் போன்றோருக்கு முதல்வராக, அவர்கள் மனம் தளரும் சமயங்களில் அவர்களை அரவணைக்கும் தலைவராகத் திருமால் விளங்குவதால் ‘ப்ரஜாபதி:’ என்றழைக்கப்படுகிறார். ‘ப்ரஜா’ என்பது அனைத்து உயிர்களையும் குறிக்கும். புல், பூண்டு, ஈ, எறும்பு தொடங்கி பிரம்மா வரையிலான அனைத்துப் பிரஜைகளுக்கும் தலைவராகத் திருமால் விளங்குவதால் ‘ப்ரஜாபதி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 199-வது திருநாமம்.  “ப்ரஜாபதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தலைமைப் பண்புகள் நன்கு வளரும்படித் திருமால் அருள்புரிவார். (தொடர்ந்து நாமம் சொல்வோம்)

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!