திருமுருகன் பாதம் பற்றுங்கள் குருவருள் கிட்டும் பாருங்கள்

?கடந்த செப்டம்பர் மாதம் ஹார்ட் அட்டாக் உண்டானதும் உடனடியாக வைத்தியம் செய்யப்பட்டு தற்போது நலமுடன் உள்ளேன். எனக்கு ரத்தக்குழாயில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டு உள்ளது. மறுபடியும் தொல்லை ஏதும் நேராமல் இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- சண்முகம், கும்பகோணம்.

அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி துவங்கி உள்ளது. சனி தசையில் கேதுபுக்தியின் காலத்தில் இதயம் சார்ந்த பிரச்னையை சந்தித்திருக்கிறீர்கள். இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நான்காம் பாவகத்தில் கேதுவின் அமர்வு உள்ளதால் கேதுவிற்கு உரிய காலத்தில் பிரச்னை உண்டாகியிருக்கிறது. ஜென்ம லக்னத்தில் செவ்வாயின் உச்சபலம் எதையும் தாங்கும் வலிமையை உங்கள் இதயத்திற்குத் தந்துவிடும். பிரச்னையான நேரத்தினை கடந்துவிட்டீர்கள். இனிமேல் எந்தவிதமான பயமும் தேவையில்லை. தொடர்ந்து உங்கள் பணியினை எந்தவிதமான தொய்வும் இன்றி சுறுசுறுப்பாக செய்து வாருங்கள். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச பலத்துடன் சஞ்சரிப்பதாலும் தற்போது சுக்கிர புக்தி நடந்து வருவதாலும் உடலில் உண்டான பிரச்னையை மறந்து வெகுவிரைவில் துள்ளிக்குதித்து செயல்படுவீர்கள். மாசி மாத அமாவாசை நாளில் பிறந்திருக்கும் நீங்கள் பிரதி மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில் ஆலய வாசலில் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்து வாருங்கள். குருபெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சியினால் எந்தவிதமான பாதிப்பும் உங்களுக்கு உண்டாகாது. கவலை வேண்டாம்.

?30 வயதாகும் என் 3வது மகளுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. தெரிந்த பையன் ஒருவனால் தொந்தரவு ஏற்படும் என்றும், திருமணத்திற்கு முன்பாகவே தாத்தா-பாட்டி அல்லது தாய்-தகப்பன் இறந்துவிடுவார்கள் என்றும் ஜோதிடர் கூறுகிறார். தாத்தா- பாட்டி தற்போது இல்லை. அவளுடன் படித்த பையன் போன் செய்து உன் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று பயமுறுத்துகிறான். பயத்தின் காரணமாக என் மகள் திருமணமே வேண்டாம் என்கிறாள். உரிய பரிகாரம் கூறுங்கள்.

- ராதா, தஞ்சாவூர்.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் குரு புக்தியின் காலம் தொடங்கி உள்ளது. மூட நம்பிக்கையின் காரணமாக வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டிய காலத்தினை உங்கள் மகளிடம் இருந்து பறித்திருக்கிறீர்கள். நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போன்ற தோஷம் எதுவும் அவரது ஜாதகத்தில் இல்லை. எந்த ஒரு சக்தியாலும் அவரது திருமணத்தை தடுத்த நிறுத்த இயலாது. மேஷ ராசியில் பிறந்திருக்கும் அவருக்கு தற்போது குரு பலம் என்பது சிறப்பாகவே உள்ளது. தற்போது அவரது ஜாதகத்தின் படி குருபலம் முடிவடைந்துவிட்டது என்று உங்கள் ஜோதிடர் சொல்வது முற்றிலும் தவறு. தசாபுக்தியின் படியும் தற்போது குருவின் காலம் தொடங்கி உள்ளதால் உங்கள் மகளின் திருமணத்தை இந்த நேரத்தில் வெகு சிறப்பான முறையில் நடத்திட இயலும். வீணான பயத்தினைத் துறந்து மாப்பிள்ளை பார்க்கத் துவங்குங்கள். உங்கள் மகளின் மனதிற்குப் பிடித்தமான வகையில் மேற்கு திசையில் இருந்து மாப்பிள்ளை அமைவார். ஆடுதுறையில் உள்ள சூரியனார்கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நாளில் உங்கள் மகளை அழைத்துச் சென்று அவர் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்லுங்கள். 23.12.2020ற்குள் அவரது திருமணம் நல்லபடியாக நடந்துவிடும்.

?எங்களுக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டது. இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தகுந்த தீர்வு கூறுங்கள்.

- தீபிகா, விழுப்புரம்.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. உங்கள் கணவரின் பிறந்த தேதி, நேரம் மற்றும் நட்சத்திரம், ராசி என நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்கள் ஒன்றோடொன்று ஒத்துப் போகவில்லை. முதலில் உங்கள் கணவரின் ஜாதகத்தை சரியான முறையில் கணித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தை பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் புத்ர காரகன் குரு பகவான் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. ஐந்தாம் பாவக அதிபதி சூரியனும் நல்ல நிலையிலேயே அமர்ந்துள்ளார். 29.01.2020 முதல் துவங்க உள்ள நேரம் சிறப்பாக உள்ளதால் உங்களுக்கு வரும் வருடத்தில் குழந்தை பாக்கியம் நிச்சயமாக கிடைத்துவிடும். வியாழன்தோறும் விரதம் இருந்து சஷ்டி கவசம் படிப்பதோடு முருகப்பெருமானுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து உங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 12 வயதிற்குள் இருக்கும் ஒரு சிறுவனுக்கு அதனைத் தந்து பருகச்செய்யுங்கள். அதன்பிறகு அந்த பாயசத்தை முருகனின் பிரசாதமாக நீங்களும் உங்கள் கணவரும் அருந்துங்கள். தொடர்ந்து 16 வாரங்கள் வியாழன் தோறும் விடாமல் செய்து வாருங்கள். வரும் வருடத்தில் வம்சம் விருத்தியடையக் காண்பீர்கள்.

Related Stories:

>