நங்கையின் நரி முகத்தை மாற்றிய ஈசன்

திருச்சி அருகேயுள்ள பெருகமணி கிராமத்தை அடுத்துள்ள நங்கவரத்தில் அமைந்துள்ளது சுந்தரேஸ்வரர் ஆலயம். சோழ நாட்டை ஆண்டுவந்த சோழ மன்னர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.  மன்னனும், ராணியும் வேண்டாத தெய்வம் இல்லை. ஒரு சிவனடியாரின் அறிவுறுத்தலின் பேரில் சிவ தலங்கள் பலவற்றிற்கு சென்று தரிசித்து வந்ததன் பயனாக  அரசனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ராணியின் அறையிலிருந்து வெளிவந்து மருத்துவச்சி மன்னா, உங்களுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது என்றதும் மிகவும் மகிழ்ச்சியடைந்த மன்னன், மகளைக் காண விரைந்தான். அறைக்குள் மன்னன் கொண்ட பேரானந்தம் நீடிக்கவில்லை மகளைக்கண்டதும், காரணம் பிறந்த மகள் நரி முகம் கொண்டிருந்தாள்.

குழந்தையின் உடலமைப்பு பெண் உருவில் இருந்த போதிலும் முகம் மட்டும் நரியின் முகமாக இருந்தது. மன்னர்   வேதனைப் பட்டார்.   ராணி கண்ணீர் விட்டுக் கதறினாள். நாட்கள் சென்றது, பேதை, பெதும்பையாகி மங்கை பருவம் அடைந்தாள். ஆனாலும் நங்கையின் முகம் நரி முகமாகவே இருந்தது.  மந்திரிகளும், மன்னனின் நலம் விரும்பிகளும் இறைவனுக்குப் பரிகாரம் பூஜைகள் செய்தால் இந்தக் குறையை சரி செய்துவிடலாம் என்றனர்.   அதன்படி மன்னனும் ஒவ்வொரு ஆலயமாகச் சென்று பரிகாரப் பிரார்த்தனைகள் செய்தார்.  பலன் கிட்டவில்லை. ஒரு நாள் மன்னனின் கனவில் மகாதேவன் தோன்றினார்.  

‘‘மன்னா மகாராஷ்டிரா தேசத்தில் உள்ள பஞ்சவடி என்ற சிற்றூரில் முனிவர் ஒருவர் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வருகிறார்.  அந்த சிவலிங்கத்தை எடுத்து வா.  இந்த ஊரில் ஓர் ஆலயம் கட்டி அந்த சிவலிங்கத்தை அந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்.  அந்த சிவலிங்கத்தை நீ தினமும் பூஜை செய்து வந்தால் உன் பெண்ணின் நரி முகம் மாறி நங்கை முகமாக ஆகும். என்றார் ஈசன்’’. விடிந்தும், விடியாத பொழுது விழித்து எழுந்தான் மன்னன். உடனே தன் படைகளை பஞ்சவடிக்கு அனுப்பினான். அங்கு  சிவலிங்கத்தை பூஜை செய்து வந்த முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார்.  படைவீரர்கள் அந்த சிவலிங்கத்தை  தூக்கி வந்து மன்னனிடம் கொடுத்தனர்.

இறைவனின் ஆணைப்படி மன்னன் அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் ஒரு ஆலயம் கட்டி, அங்கு அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை  செய்தான். தினமும் இறைவனை பூஜித்தான். அதன் பயனாக, இறைவனின் அருளால் மன்னன் மகளின்  நரிமுகம் மாறி, அழகான நங்கை உருவானது. அவள் பேரழகியாய் திகழ்ந்தாள். இறைவன் நங்கையின் முகம் மாற வரம் கொடுத்தால் இந்த அரிஞ்சிகை  சதுர்வேதி மங்கலம்    என்ற ஊர் நங்கைவரம் என அழைக்கப்பட்டது.  பின்னர் சற்றே மருவி தற்போது நங்கவரம் என அழைக்கப்படுகிறது. நிஷ்டையில் இருந்த முனிவர் நிஷ்டை கலைந்தார்.  தான் பூஜித்து வந்த சிவலிங்கத்தைக் காணாது திகைப்புற்றார்.வேதனையடைந்தார்.

அவர் கனவில் தோன்றிய இறைவன் அந்த சிவலிங்கம் இருக்கும் இடத்தைக் கூறினார். முனிவர் கால் நடையாக சிவலிங்கம் இருக்கும் ஊருக்குப் புறப்பட்டார். பல மாதங்கள் கடந்தன. முனிவர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தை அடைந்தார். நேரம் நடுநிசி. ஆலயத்தின் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. என்ன செய்வது என்று புரியாத முனிவர் கோயில் மதில்மேல் ஏறி உட்புறம் குதித்தார். உள்ளே தரை சேறும் சகதியுமாக இருந்தது. குதித்த முனிவரின் இரண்டு கால்களும் சேற்றில் புதைந்து போக முனிவர் ‘‘சிவ, சிவாய நமஹ, என்று முழங்க, சிவபெருமான், முனிவருக்கு முக்தி அளித்தார். முனிவர் அதே இடத்தில் சிலையாகி நின்றார். அந்த இடத்தில் அவருக்கு தனி சந்நதி அமைக்கப்பட்டது.  இன்றும் முனிவர் நின்ற கோலத்தில் அங்கு அருட்பாலிக்கிறார்.

அந்த முனிவர் அகண்டேஸ்வரர் என்றும் தீண்டாத் திருமேனி என்ற   பெயரிலும் அழைக்கப்படுகிறார்.  இங்கு சிவபெருமானுக்கு என்னென்ன பூஜைகள் நடைபெறுகிறதோ அவை அனைத்தும் அகண்டேஸ்வரருக்கும் நடைபெறுகிறது. அகண்டேஸ்வரரை தொடாமல்தான் அனைத்து பூஜைகளும் நடைபெறுகின்றன.  நெற்றியில் சந்தனப் பொட்டை வைக்ககூட அவரது சிலைமேனியை தொடுவதில்லை. மாறாக, அர்ச்சகர், சற்றுத் தொலைவில் இருந்தபடி சந்தனத்தை நெற்றியை நோக்கி வீசுவார். அது அகண்டேஸ்வரர் சிலை மேனியில் நெற்றிப்பகுதியில் ஒட்டிக்கொள்கிறது. சுந்தரேஸ்வரர் ஆலய முகப்பின் முன் நந்தியும் பலிபீடமும் இருக்க முகப்பைத் தாண்டியதும்மகா மண்டபத்தின் வலதுபுறம் அகண்டேஸ்வரர் சந்நதி சற்றே   உள்ளடங்கி  உள்ளது.  

 

அடுத்து அன்னை கோமளாம்பிகையின் சந்நதி உள்ளது.  அன்னை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருட் பாலிக்கிறாள்  அடுத்துள்ள  அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டடாயுதபாணியும் அருட் பாலிக்கின்றனர். தேவக்கோட்டத்தில் தென்புறம்  தட்சிணாமூர்த்தி,   மேற்கில்  மகாவிஷ்ணு வடக்கில் பிரம்மா ஆகியோர் அருட்பாலிக்கின்றனர்.    பிரகாரத்தில் தெற்கில் சப்தமாதர்கள் மேற்கில் கன்னிமூலை கணபதி, அருணகிரி நாதர், வள்ளி, தேவ சேனாவுடன்   ஷண்முகநாதர்,  பாலசுப்பிரமணியர்,   ஜேஷ்டாதேவி,  துர்கை, சண்டிகேஸ்வரர், வடக்கில்  பைரவர், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருட் பாலிக்கின்றனர். கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் கீழ்திசை நோக்கி லிங்கத்திருமேனியில் அருட்பாலிக்கிறார்.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் ஐப்பசி மாதம்   சஷ்டியின் போது சூரசம்ஹார விழா 6 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும், கார்த்திகை சோமவாரத்தின் போது 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.

ஆலயத்தின் தல விருட்சம் மகிழமரம். `நங்கவரம், திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த சுந்தரேஸ்வரர் ஆலயம்.  திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்தில் சென்று பெருகமணி என்ற ஊரில் இறங்க வேண்டும்.  அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது நங்கவரம்.  திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து மற்றும் மினி பஸ் வசதி உள்ளது.

Related Stories:

>