தீராப் பிணி தீர்ப்பார் பூதலிங்கசுவாமி

வளம் கொழிக்கும் நாஞ்சில்நாடு எனும் இப்பகுதியை முன்னொரு காலத்தில் ஆண்டு வந்த பாண்டிய மன்னன் தீவிர சிவபக்தன் ஆவார். அவருக்கு தீராத வயிற்றுவலி உருவானது. இதனால் மிகுந்த வேதனைப்பட்டார். சிரமம் தீர சிவபெருமானை வேண்டி கண்ணீர்மல்க வழிபட்டார். மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘‘எனக்கு காடு நீக்கி ஆலயம் எழுப்பு நோய் நீங்கப்பெருவாய்’’  என்றார். மனம் மகிழ்ந்த மன்னன் மறுநாள் முதல் ஆலயம் அமைப்பதற்கான ஏற்ற இடத்தை தேடினார். தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிரம்ப காடுகள் உள்ளன. இதில் எந்த காடு, சிவபெருமானுக்கு கோயில் எழுப்ப ஏற்றது என்று ஆலோசித்து வந்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் ஆடைகள் நெய்யும் நெசவுத்தொழில் சிறப்புற்று இருந்தது. அவ்வாறு ஆடை நெசவு செய்யும் தொழில் புரிந்து வந்த சாலியர், பூர்வ புண்ணியசாலி என்பவரது பசு அன்று மாலை பால் கறக்கவில்லை. மாறாக மாட்டின் மடு வற்றிப்போய் இருந்தது. உடனே புண்ணியசாலி, மாடுமேய்க்கும் இடையரிடம் இதுபற்றி கேட்டார். அவர்,  ஐயா, எப்படி மாடு, மடு வற்றி, பால் தராமல்போனது என்று தெரியவில்லை என்று கூறினான். உடனே சாலியர், இனி இப்படி மாடு பால் தராமல் போனால் நீ தான் பொறுப்பு என்றார். சரிங்க ஐயா என்ற அந்த இடையர், அடுத்தநாள் அந்த பசுவை கவனித்து வந்தார். பகல் 12 மணிக்கு மேய்ந்து கொண்டிருந்த பசு, பழையாற்றங்கரையில் அமைந்த திருமலைப்பாறைக் குகைக்கு சென்றுவிட்டு, திரும்புவதைக்கண்டார்.

உடனே அந்த பசு மாட்டை ஓட்டிக்கொண்டு சென்று பசுவின் உரிமையாளரிடம் போய் கூறினார். மறு நாள் மாட்டின் உரிமையாளர் சாலியரும், மேய்த்து வந்த இடையரும் பசுவை கண்காணித்தனர். அதேபோல் சரியாக பகல் 12 மணிக்கு கனத்து மடுவுடன் பசு, திருமலைப்பாறைக் குகைக்குள் சென்றது. பசுவின் பின்னால் சாலியரும் பின் தொடர்ந்து சென்றார். பசு குகையினுள் இருக்கும் சுயம்பாக தோன்றிய லிங்கத் திருமேனி மீது பேரானந்தத்துடன் பால் சொரிந்தது. அந்த தெய்வீக அற்புதகாட்சியைக்காணும் பேறு பெற்றனர் இருவரும். எனவே இத்திருமேனிக்கு  சாலியர் கண்ட திருமேனி எனப்பெயர் வழங்கலாயிற்று. இந்த அற்புத நிகழ்வுபற்றிய செய்தி அன்று அழகியபாண்டியபுரத்தில் தங்கியிருந்த பாண்டிய மன்னனுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது.

மன்னனும் அமைச்சர் பரிவாரங்களுடன் வந்து சுயம்புலிங்கத் திருமேனியைக்கண்டு பேரானந்தம் அடைந்தார். ஏற்கனவே ஈசன் அருளிய வார்த்தைப்படி காடுநீக்கி ஆலயம் அமைக்க இடம் தேடினோம். இதோ இடமும், மூலவருமே கிடைத்து விட்டனர் என்று மகிழ்ந்த மன்னர், அவ்விடமே கோயில் எழுப்பினார். ஈசன் அருளால் நோயும் நீங்கப்பெற்றார். ரதவீதியுடன் அமைந்த இவ்வூரும் பாண்டிய மன்னன் பெயராலேயே   பூதப்பாண்டி  என அழைக்கப்படலாயிற்று. இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார்.  நினைத்ததை முடிக்கும் விநாயகர் பெருமானுக்கு தனிக்கோயில் உள்ளது.  சுப்ரமணிய சுவாமிக்கும் சாஸ்தாவிற்கும் தனிச் சந்நதி  உள்ளது. மூலவரின் முன்புறம் வடக்குப்பக்கம் பூதநாதர் என்ற முனிவரின் திருச்சந்நிதி அமைந்துள்ளது.

இவருக்கு வேக வைக்காத பொருட்கள் மட்டுமே படைக்கப்படுகிறது. இவரும் வேண்டுவன வழங்கும் ஆற்றல் மிக்கவர். இங்கே இறைவனே பூசாரியாக வந்து பிரசாதம் வழங்கப்பெற்ற ஆண்டிச் செட்டியார் என்னும் பக்தருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக செட்டி மண்டபம் விளங்குகிறது. மூலவரின் வலப்புறம் அன்னை சிவகாமியின் திருச்சந்நதியும் வடபுறம் காசிவிசாலாட்சி விஸ்வநாதர் சந்நதியும் அமைந்துள்ளது. கல்லில் சங்கிலியும் சுழலும் வலை அமைப்பும், அம்பாள் விமானமும் சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெருமை சேர்க்கின்றது. மேலும் இக்கோயிலில் மிக உயரமான தேர் உள்ளது. இது மிக எடை உடைய தேர் ஆகும். இத்தேர் நிலையை வந்தடைவதற்கு அதிக நேரம் பிடிக்கும்.

தினமும் காலை 5.10 மணியளவில் பள்ளியரை வழிபாட்டில் திருவாசகப்போற்றித்திருவகவல் (108 வரிகள்) அனைவரால் பாடப்பெறுகிறது. 41 நாட்கள் இதில் கலந்துகொள்பவர்கள் ஆன்ம பலம் பெறுவதோடு, தீமைகள் அகன்று, வேண்டுவன பெறுகின்றார்கள் என்பது கண்கண்ட உண்மை. மற்ற எந்த கோயிலிலும் இல்லாத ஒன்று இக்கோயிலில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. இவ்விழாவில் இறைவன் சந்திரசேகரராய் அழகு மணித்தேரில் கிரிவலம் வருகிறார். இது ஒரு குகைவரைக் கோயில். இத்தலம் தாடகை வனமாக இருந்தது. இதற்கு இயற்கைச் சான்றாக கிழக்கே தாடகைமலை, மேற்கே துவரங்காடு, வடக்கே விளாங்காடு, தெற்கே நாவல்காடு என்ற பெயர்களில் ஊர்கள் அமைந்துள்ளன. தலவிருட்சம் வில்வம் மரம்.

பாண்டிய மன்னர்களால்  சுமார் 500-600 வருடங்களுக்கு முன் இக்கோயில்  கட்டப்பட்டது. தாடகை மலை (இராமாயணத்தில் ராமன் தாடகையை வதம் செய்த இடம்)  முகப்பில் கோயில் உள்ளது. ராமன் தாடகையை வதம் செய்ய திரிசரம் (மூன்று அம்புகள்) கோர்ப்பு செய்யப்பட்ட இடமே இன்று தெரிசனங்கோப்பு என மருவி வழங்கப்படுகிறது. தாடகை என்னும் ஒட்டுமொத்த தீமையின் உருவம் அழிக்கப்பட்டதால் இவ்வூர் தீமையில்லாத புனிதமான திருத்தலமாக விளங்குகிறது. எனவே இங்கு வழிபடுவோர் வேண்டியன வேண்டியவாறு பெறுகின்றனர் என்பது உண்மை. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயில் நாகர்கோவில் அருகேயுள்ளது. இக்கோயில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலுக்கு அடுத்துள்ளது பூதப்பாண்டி.  

- ச. சுடலை குமார்,

படங்கள்: நாஞ்சில் லெட்சுமணன்,

சோமசுந்தரம்

Related Stories: