தெளிவு பெறுஓம்

ஆவணி அரசி!

* பஞ்சாங்கத்தில் கடன் கொடுக்கக் கூடாத நட்சத்திரங்கள் என்று உள்ளது. வங்கிகளில் மட்டும் தினம் தினம் வாங்குவதும் கொடுப்பதுமாக உள்ளார்களே..? - மீனாவாசன், வந்தவாசி.

‘ஆதிரை பரணி கார்த்திகை ஆயில்யம் முப்பூரம் கேட்டை தீதுறு விசாகம் சோதி மகம் சித்திரை ஈராறில் மாதனம் கொண்டார் தாரார்’ என்று பஞ்சாங்கத்தில் மேற்சொன்ன பனிரெண்டு நட்சத்திரங்களில் கடன் கொடுக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இந்த விதி கடன் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டவர்களுக்குப் பொருந்தாது. வட்டிக்கடைக்காரர்கள் இந்த 12 நட்சத்திரங்களை மனதில் கொண்டு 12 நாட்கள் விடுமுறை விட இயலாது. தொழில் என்பது வேறு, உதவி செய்வது என்பது வேறு. நண்பர் ஒருவர் கடன் கேட்டு நாம் அதனைத் தருவது என்பது உதவி.

அவ்வாறு உதவி செய்யும்போது இந்த 12 நட்சத்திரங்களை மனதில் கொண்டு அந்த நட்சத்திரங்கள் இடம் பெறாத நாட்களில் பொருளுதவி செய்தால் அந்தப் பணம் ஆனது நிச்சயமாக மீண்டும் நம்மை வந்து சேரும். வங்கிகள் என்பது தனிப்பட்ட மனிதனுக்கு சொந்தமானது அல்ல. எல்லோருக்கும் உதவி செய்கின்ற நிறுவனம். அதே போல வங்கிகளில் பணம் சேமித்து வைப்போரும் உண்டு. தங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த விரும்புவோர் இந்த 12 நட்சத்திரங்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கடன்கொடுப்பதைத் தொழிலாகக் கொண்ட வங்கிகளை மட்டுமல்ல, வட்டிக் கடைக்காரர்களையும் இந்த 12 நட்சத்திரங்கள் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது.

* அக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாமா? சாஸ்திரம் என்ன சொல்கிறது? - அரிமளம் இரா. தளவாய் நாராயணசாமி.

அக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம். இது சாஸ்திரத்திற்கு விரோதமானது அல்ல என்பதால் இதனை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் ஒருவருடைய குலம் விருத்தி அடைய பெண்ணின் துணை அவசியம் தேவை. அடுத்தவர்களுடைய குல விருத்திக்காக ஒருவன் தனது பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பது என்பது தானத்திலேயே மிகப்பெரியது என்ற பெயரில் அதாவது மஹாதானம் என்று அழைக்கப்படுகிறது. இத்தனை பெரிய தானத்தை ஒரே குலத்தின் விருத்திக்காக அளிப்பதை விட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அத்தகையை சிறப்பு வாய்ந்த மஹாதானத்தை வெவ்வேறு குலங்களின் விருத்திக்காக பயன்படுத்தும்போது அது மேலும் சிறப்பினைத் தரும்.

வர்த்தனீ குல சம்பதாம் என்று சொல்வார்கள். மனைவி என்பவள் அந்த குலத்திற்கே கிடைத்த மாபெரும் சொத்து. ஒரே வீட்டைச் சேர்ந்த பெண்கள் ஒரேயொரு குலத்தை மட்டும் விருத்தி செய்வதை விட வெவ்வேறு வீட்டிற்குச் சென்று வெவ்வேறு குலங்களை விருத்தியடையச் செய்வது என்பது சாலச் சிறந்தது. அக்கா தங்கைகள் வெவ்வேறு வீட்டில் பிறந்த ஆண்களைத் திருமணம் செய்து கொள்வது விசேஷமான பலனைத் தரும். அதே நேரத்தில் ஒரே வீட்டில் பிறந்த அண்ணன் தம்பிகளை திருமணம் செய்து கொள்வது சாஸ்திரத்திற்கு எதிரானது அல்ல என்பதால் இதனை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே உங்கள் கேள்விக்கான பதில் ஆகும்.

* 13 என்ற எண் அதிர்ஷ்டமற்ற எண்ணா? மேலும் வெள்ளிக்கிழமை 13ந் தேதியன்று வந்தால் அபசகுனமான நாளா? - அயன்புரம் த.சத்தியநாராயணன்.

நிச்சயமாக இல்லை. 13 என்ற எண் அதிர்ஷ்டமற்ற எண் சொல்வதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. எண்கணிதம் என்ற கலை ஆங்கிலேயர்களின் மூலமாக இந்தியாவிற்குள் வந்தது. நியூமராலஜி என்பது வேறு. எண்கள் பற்றிய இந்த கணிப்புகள் என்பது வேறு. இவை அனைத்தும் அவரவர் கண்ட அனுபவத்தின் அடிப்படையில் எழுதி வைக்கப்பட்ட கருத்துக்கள். இயேசுநாதரின் கடைசி இரவு விருந்தில் பங்கேற்றவர்கள் 13 நபர்கள் என்பதாலும் இயேசுவை காட்டிக்கொடுத்த ஜூடாஸ் 13வது நபராக அங்கே அமர்ந்திருந்ததாலும் அந்த எண்ணை அதிர்ஷ்டமற்ற எண்ணாகக் கருதத் துவங்கினார்கள்.

வெள்ளிக்கிழமை 13ம் தேதி அன்று வந்தால் அது அபசகுனம் என்று சொல்லப்படுவதும் ஐரோப்பியர்களின் நம்பிக்கையே. ஐரோப்பியர்களில் கூட விதிவிலக்கு ஆக இத்தாலி நாட்டில் 13 என்ற எண் அதிர்ஷ்டம் நிறைந்ததாகக் கொண்டாடப்படுகிறது. அவர்கள் 17 என்ற எண்ணை அதிர்ஷ்டமற்றதாக ஒதுக்குவார்கள். இந்த எண்கள் பற்றிய கணிப்புகள் அத்தனையும் அவரவர் அனுபவத்தில் கண்டதே அன்றி ஜோதிடவியல் ரீதியாக இந்த கருத்துக் களுக்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. அதே போல ஒரு வருடத்தில் 13 பௌர்ணமிகள் அல்லது 13 அமாவாசை வந்தாலும் அந்த வருடம் அதிர்ஷ்டமற்ற வருடம் என்று சொல்லப்படுவதும் முற்றிலும் மூடநம்பிக்கையே. இந்த 13 என்ற எண் பேய் பயத்தினைத் தரும் என்று சொல்லப்படுவதற்கும் 8 என்ற எண் கஷ்டத்தைத் தரும் என்று சொல்லப்படுவதற்கும் எந்தவிதமான ஆதாரமும் கிடையாது.

* திருக்கடையூர் செல்ல முடியாதவர்கள் வேறு கோயில்களில் சஷ்டியப்த பூர்த்தி செய்யலாமா? -அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

செய்யலாம். கோயிலில் வைத்துத்தான் சஷ்டி அப்த பூர்த்தியைச் செய்ய வேண்டும் என்பதில்லை. அவரவர் வசிக்கும் இல்லங்களில் செய்வது மிகவும் விசேஷமான பலனைத் தரும். சஷ்டி அப்த பூர்த்தியின் போது உச்சாடனம் செய்யப்படுகின்ற மந்திரங்களின் அதிர்வலைகள் அந்த இல்லத்திற்குள் சுற்றி வரும்போது அங்கே வசிப்பவர்களின் மனநிலையும், உடல்நிலையும் வலுப்பெறுகிறது. முடிந்தவரை தாம் வசிக்கின்ற இல்லத்திலேயே நடத்துவது நல்லது. இடவசதி இல்லாதவர்கள் அருகிலுள்ள ஆலயத்திலோ அல்லது திருமண மண்டபத்திலோ வைத்து நடத்தலாம். திருக்கடையூர் என்பது மார்க்கண்டேய ஸ்தலம் என்பதால் ஆயுள்விருத்திக்கான விசேஷ ஸ்தலமாகக் கருதி அங்கே சென்று மணிவிழாவினை நடத்துவதை வழக்கத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக திருக்கடையூரில் வைத்துத்தான் மணிவிழாவை நடத்த வேண்டும் என்ற விதி ஏதும் கிடையாது. அவரவர் சௌகரியப்படி எங்கு வேண்டுமானாலும் சஷ்டி அப்த பூர்த்தியை செய்து கொள்ளலாம். குறிப்பாக தாம் வசிக்கின்ற வீட்டிலேயே வைத்து நடத்துவது மிகவும் விசேஷமானது.

* கோயிலில் விபூதி பிரசாதத்தை இடது கையில் வாங்குவது தவறா? - மு. மதிவாணன், அரூர்.

தவறுதான். விபூதி பிரசாதம் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும் இடது கையால் வாங்கக் கூடாது. இடது கையும் நம் உடலின் ஒரு அங்கம்தானே என்று வாதம் செய்யலாம். இடது கையால் ஒரு பொருளை வாங்குவதை விட வலது கையால் வாங்கும் பொருட்கள் நமக்கு பயன்தரும் வகையில் அமையும் என்பது அனுபவபூர்வமான உண்மை. அதே போல இடது கையால் ஒரு பொருளை எங்காவது வைக்கும்போது அந்தபொருளை வைத்த இடத்தை மறந்துபோய்விடுவோம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

 இந்த கருத்திலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இதற்கு மனித உடலின் அமைப்புதான் காரணம். மனித இதயம் இடம் பெற்றிருக்கும் பாகத்தை வைத்து வலப்புறமும் இடப்புறமும் தங்களுக்கான பணியினை பிரித்துக் கொள்கின்றன. இடது கையால் செய்கின்ற பணிகளை வலது கையால் செய்யக்கூடாது என்பதையும் பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். மந்திரமாவது நீறு என்று போற்றப்படுகின்ற திருநீற்றினை இடது கையால் வாங்கக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் வலது கையில் விபூதி பிரசாதத்தினை வாங்கி அதனை இடது கையில் மாற்றிக்கொண்டு, அதன்பின்பு வலதுகை விரல்களால் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். வலது கையில் வாங்கிய விபூதியை இடது கைக்கு மாற்றுவது தவறு என்று சொல்லக்கூடாது.

ஒரு சிலர் இடது கையில் விபூதி அல்லது குங்குமத்தினை மாற்றிக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் வலது உள்ளங்கையில் இருந்து மோதிர விரலால் தொட்டு அதனை அப்படியே நெற்றியில் இட்டுக்கொள்வதாக முயற்சிப்பார்கள். இந்த முயற்சியில் கையில் இருக்கும் பிரசாதம் பெரும்பாலும் கீழே கொட்டி வீணாகிவிடும். இவ்வாறு விபூதி பிரசாதம் கீழே விழுவதை விட அதனை முதலில் வலது கையில் வாங்கி அதன்பின்பு இடது உள்ளங்கைக்கு மாற்றிக்கொண்டு அதன் பின்பு வலது கை விரல்களால் நெற்றியில் வைத்துக்கொள்வதே சரியான முறை ஆகும்.

* ஒரே தாயின் வயிற்றில் சில நிமிட வித்தியாசங்களில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் எதிர்காலம் ஒரே மாதிரி இருப்பதில்லையே, இறப்பு கூட ஒன்றாக வருவதில்லை. இது பற்றிய விளக்கம் தேவை.

- ப.த. தங்கவேலு, பண்ருட்டி.

ஒரே தாயின் வயிற்றில் சில நிமிட வித்தியாசங்களில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கு மாத்திரமல்ல, ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளின் எதிர்காலமும் ஒரே மாதிரி அமையாது. ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை அறுவை சிகிச்சையின் மூலமாகப் பிரித்திருப்பார்கள். அந்தக் குழந்தைகளின் வளர்ச்சியும், செய்கின்ற தொழிலும், அனுபவிக்கின்ற வாழ்வியல் சூழலும் நீங்கள் குறிப்பிட்டபடி மரணமும் கூட ஒன்றாக அமையாது. இது அவரவர் கர்ம வினையைப் பொறுத்தே அமையும்.

ஒவ்வொரு குழந்தையின் பிறப்பு என்பது இந்த பூவுலகில் அந்தக் குழந்தையின் முதல் சுவாசத்தைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. கருவறையில் தனது தாயின் துணை கொண்டு சுவாசித்து வந்த அந்தக் குழந்தை முதன்முதலில் இந்த பூமியில் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து அதனை வெளிவிடும்போது ‘வீல் 39;’ என்று அலறுகிறது. குழந்தையின் முதல் அலறல் சத்தம் கேட்கும் நேரமே அந்தக் குழந்தையின் பிறந்த நேரமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.

இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும் அவற்றின் முதல் அழுகை சத்தமம் என்பது வெவ்வேறு நொடிகளில்தான் அமைகிறது. இந்த நொடிப்பொழுது மாற்றம் கூட குழந்தையின் வளர்ச்சியில் மாறுபாட்டினைத் தோற்றுவிக்கிறது. நாம் சாதாரணமாக பார்க்கும் ஜாதகத்தில் ராசி, நவாம்சம் என்ற இரண்டு கட்டங்களை மட்டும் பார்த்திருப்பீர்கள். இன்னும் திரேக்காணம், திரிம்சாம்சம், ஸப்தாம்சம், தசாம்சம், துவாதசாம்சம், சஷ்டி அம்சம் என்று பல்வேறு கணக்குகள் உண்டு. இதில் சஷ்டி அம்சம் என்பது ஒரு ராசியை அறுபது கூறுகளாகப் பிரித்து பலனை அறியும் முறை ஆகும். இந்த முறையில் ஒவ்வொரு விநாடிக்கும் பலன் என்பது மாறுபடும்.

 இந்த சஷ்டி அம்சம் என்ற கட்டம்தான் ஒரு மனிதனின் பொதுவான வளர்ச்சியைப் பற்றிச் சொல்லும். இரட்டைக் குழந்தைகளின் ஜாதகத்தினை கணிக்கும்போது இந்த சஷ்டி அம்சம் மாறுபடுவதைக் காண இயலும். இதன் பொருட்டுதான் அவர்களின் வளர்ச்சி, தொழில்நிலை, வாழ்க்கைத்துணை, வாழ்வியல் உயர்வு, மரணம் அத்தனையும் மாறுபாடு அடைகிறது. அவரவர் செய்த கர்மவினையின் அடிப்படையில் இந்த அம்சம் அமைகிறது. அதற்கு ஏற்றார்போல் அவரவர் வாழ்வினில் காணும் பலனும் மாறுபடுகிறது.

திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா

Related Stories: