×

துயரங்களை களைவார் தோரணமலை முருகன்

கடையம், தென்காசி

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழியில் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற முதுமொழிக்கு ஏற்ப, தோரணமலை மீது எழுந்தருளி அருட் பாலிக்கிறார் முருக பெருமான். யானை படுத்திருப்பது போல் தோற்றம் உள்ள இம்மலைக்கு வானமழை என பெயரும் உண்டு. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முத்துமாலைபுரம் என்ற ஊரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கனவில் வேல் ஏந்திய சிறுவனாய் முருகன் சென்று நான் நீண்ட நெடுங்காலமாய் சுனையில் இருக்கிறேன் என்னை வெளியே எடுத்து பூஜை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்.

கனவில் கண்டதை மறுநாள் காலையில் சென்று சுனையில் உள்ள நீரை இறைத்து வெளியே எடுத்தனர் அந்த அழகு திருவுருவச் சிலையை. அந்த தெய்வச்சிலை தான் என்று மூலவராக தோரணமலை மீது நமக்கு காட்சி கொடுக்கிறார். மாமுனிவர் அகத்தியர் தென்திசையை சமன்படுத்த வரும்வழியில் அவரின் சீடராக தேரையரும் கந்தையரும் சிறப்புற்று விளங்கினார். அகத்தியர் தென் பொதிகை சென்றவுடன் அகத்தியர் விட்ட பணிகளை தேரையரும் கந்தையரும் இருந்து செவ்வனே செய்து இந்த தோரண மலையில் ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.

மலைமீது எழுந்தருளி அருட் பாலிக்கும் தோரணமலை முருகன் குகையை குடைந்து மூலஸ்தானம் உருவாக்கப்பட்டதால் குகை முருகன் கோயில்  எனவும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. தோரண மலை அடிவாரத்தில் ஸ்ரீ  வல்லப விநாயகர் அருள் பாலிக்கிறார் அருகில் அரசமரத்தடியில் நாகர்களும் வியாழ பகவானும் தரிசனம் கொடுக்கிறார்கள். அடுத்தபடியாக நவக்கிரகங்களும் சிவபெருமான், ஸ்ரீ  கிருஷ்ணர், ஸ்ரீ  லக்ஷ்மி, ஸ்ரீ  சரஸ்வதி, ஸ்ரீ  சப்தகன்னியர் ஆகியோரை தரிசனம் செய்துவிட்டு படிக்கட்டுகளில் ஏறி வந்தால், சின்னஞ்சிறு பாலகனாய் நான்கு கரங்களுடன் அருள் பாலிக்கிறார் முருகப்பெருமான்.

அழகே உருவான முருகனை தரிசனம் செய்யும் முன்பு தோரண மலையில் உள்ள சுனை தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது மிகப்பெரிய ஐதீகம் ஆகும் இம்மலையில் மொத்தம் 64 சுனைகள் உள்ளது எந்தக் கோடையிலும் இத்துறையில் உள்ள நீரானது வற்றாது ஒரு சுனைக்கு ஒரு சுனை நீரின் சுவையாது அது சற்று வித்தியாசமாக இருக்கும்.

கிழக்கு முகமாக எழுந்தருளி அருட்பாலிக்கும் தோரணமலை முருகனை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வழிபட்ட பலன் கிடைக்கும் திருச்செந்தூர் மற்றும் பழனி பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருப்பது போல் இக்கோயிலுக்கு இப்பகுதியில் உள்ள மக்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரை மேற்கொள்கின்றனர். பொதுவாக இரு நதிகளுக்கு இடையே உள்ள தலமானது சிறப்பான புனித தலமாக கருதப்படும் அதன்படி தோரணமலை சுற்றி ராமநதி, ஜம்பு நதி ஓடுகிறது.

தேரையர் மலையில் அரூப நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக இப்பகுதி மக்கள் சிலர் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயிலில் முத்துமாலைபுரத்தைச்சேர்ந்த 84 வயது நிறைந்த ஆதி நாராயணன் உள்ளிட்டோர் முன்னின்று திருப்பணிகள் மேற்கொண்டனர். இத்திருக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். தமிழ் மாத கடைசி வெள்ளியன்று விவசாயம் செழிக்க வருண கலச பூஜை இக்கோயிலில் நடைபெறுகிறது. தோரணமலை முருகன், தன்னை வழிபடும் அன்பர்களின் துன்பங்களை நீக்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் அருள்கிறார்.

- ச. சுடலைகுமார்

Tags : Thoranamalai Murugan ,
× RELATED மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி