×

சங்கத் தமிழ் இலக்கியங்களில் ராமாயணம்

சங்கத் தமிழ் இலக்கியங்களில் ராமாயணம்

சங்கத்தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையுடையது.ராமாயண நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள், வால்மீகி, கம்பன் சொல்லாத செய்திகள் தமிழ்  சங்க இலக்கியங்களில், புறநானூறு, அகநானூறு பாடல்களில் காணப்படுகிறது.

1. சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது. காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு.

“அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே” - புறநானூறு 378

சோழ வேந்தன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி நாட்டை விரிவாக்கும் நோக்கத்தில் வஞ்சிப் பூச் சூடி, செருப்பாழி என்னும் கோட்டையை அழித்துத்  தனதாக்கிக்கொண்டான். அந்த வஞ்சிப் போரைப் புலவர் பாடினார். அது கேட்ட வேந்தன் புலவர்க்கு அவர் அறிந்திராத அரிய அணிகலன்களை வழங்கிச்
சிறப்பித்தான். அதனைப் பார்த்த புலவரின் பெருஞ் சுற்றத்தார் விரலில் அணியவேண்டிய அணிகலனைக் காதில் மாட்டிக்கொண்டனர். காதில்  அணியவேண்டியவற்றை விரலில் மாட்டிக்கொண்டனர்.

இடுப்பில் அணியவேண்டியவற்றைக் கழுத்தில் மாட்டிக்கொண்டனர். கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டியனவற்றை இடுப்பில் கட்டிக்கொண்டனர். கடும்  போர்த்திறம் கொண்ட ராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் ராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன்  கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம்  தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது என்று உவமை கூறுகிறார்.

2. ‘வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே’
- கடுவன் மள்ளனார் (அகம் 70 - வரிகள் 13 முதல் 17 வரை)

உவமை: தோழி சொன்னாள், “ஆம் தலைவி. பாண்டியரின் தொல்முது கோடியான கடற்கரை ஊரில் பல விழுதுகளை உடைய ஆலமரம் ஒன்று இருந்தது. காலம் காலமாய்  அதில் வாழ்ந்து வந்த பறவைகளின் அடங்காத கீச்சொலியால் அந்த ஊரே அமைதியின்றி இருந்தது. சீதையைத் தேடி அந்த ஊருக்கு வந்த போரில் வெற்றி  கொள்ளும் பண்பினரான ராமன், தம் நண்பர்களுடன் கூடிச் சீதையைத் தேடும் வழிமுறைகளை ஆராய முயன்ற போது பறவைகளின் அடங்காத ஒலி  இடையூறாய் விளைந்தது. பார்வையாலோ, இதழ் விரித்து எழுப்பிய ஓசையாலோ ராமர் அந்தப் பேரொலியை ஒரு நொடியில் அடங்கச் செய்தாராம். அதைப்  போலத்தான் நம் பெற்றோர் உனக்கும் அவருக்கும் திருமணம் என்றதும் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த ஊர் வாயும் அடக்கிவிட்டது”.
(கோடி = தனுஷ்கோடி - தொன் முது கோடி, கவுரியர் = பாண்டியர்).

3. “இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல”
- கபிலர் / திணை - குறிஞ்சி (கி.மு. 3ஆம் நூற்றாண்டு)

இமய மலையை வில்லாக்கி வளைத்தவர் சிவபெருமான், அவன் கங்கை ஆறு பாயும் ஈரச் சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு
சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை கொண்டவனான அரக்கர் தலைவன் ராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில்  புகுத்தி அந்த மலையை எடுக்க முயன்றான்.

4. திருப்பரங்குன்றத்து குகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஓவியக் கலைகளில் அகலிகை பற்றிய குறிப்பு:

“என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,
இரதி காமன், இவள் இவன்’ எனாஅ,
விரகியர் வினவ, வினா இறுப்போரும்;
‘இந்திரன், பூசை: இவள் அகலிகை;
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது’ என்று உரைசெய்வோரும்”

திருப்பரங்குன்றத்து முருகப் பெருமானை வணங்கிய பிறகு, மக்கள் இந்த ஓவிய மண்டபத்தில் சென்று அங்குள்ள ஓவியக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள்  என்றும், வரையப்பட்டிருந்த ஓவியங்களில் காமன், ரதி, அகலிகை, அவளிடம் சென்ற இந்திரன், கௌதம முனிவன், அவனைக் கண்ட இந்திரன் பூனையுருவங்  கொண்டோடியது முதலிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன என்றும், அவற்றைக் கண்டவர் ‘இது என்ன, இது என்ன’ என்று அறிந்தவர்களைக் கேட்க, அவர்கள்  இது இது இன்னின்ன ஓவியம் என்று விளக்கிக் கூறினார்கள் என்றும் நப்பண்ணனார் கூறுகிறார்:
-நப்பண்ணனார் (கி. பி. மூன்றாம் நூற்றாண்டு)

“ பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல் ’’

-பழமொழி நானூறு - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இலங்கை அரசன் ராவணனின் தம்பி வீடணன். இவன் ராமனை நண்பனாகப் பெற்று இலங்கை அரசனானான் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.

6. சிலப்பதிகாரத்தில் திருமால் அவதாரங்களில் ராமரும் துதிக்கப்படுகின்றார். கம்பர் (கி.பி. 12-ஆம் நூற்றாண்டு) தோன்றி ராமாயணத்தைத் தமிழில்
எழுதுவதற்கு முன்பே இளங்கோவடிகள்(கி. பி முதல் நூற்றாண்டு) சிலப்பதிகாரத்தை இயற்றிக் கொடுத்திருக்கிறார். அந்தச் சிலப்பதிகாரமும் ராமனைக்
கடவுளாகவே கூறுகிறது

“மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!”

- ஆய்ச்சியர் குரவைப் பாடல், மதுரைக்காண்டம்,

7. “தாதை யேவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ” - ஊர்காண்காதை

என, கவுந்தியடிகள் ராமனைப் பற்றிக் கோவலனிடம் கூறுமிடத்து, ராமன் கடவுள் என்பது தமிழகத்தின் புது மொழியல்ல; நெடுமொழி. அதாவது; நீண்ட  காலமாகவே தமிழ் மக்களிடையே இருந்துவரும் நம்பிக்கை என்றும் கவுந்தியடிகள் கூறுகின்றார்.

மதுஜெகதீஷ்

Tags :
× RELATED 'அனுமன் போன்று உதவியுள்ளீர்கள்':...