×

கடம்பவன வாசவி அம்மன் மடியில் விநாயகருடன் வீற்றிருக்கும் அபூர்வம்

வேலூர்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் கணியம்பாடி அருகே கணவாய் பகுதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறாள் கடம்பவன வாசவி அம்மன். அடர்ந்த வனப்பகுதியில் தாயார் வீற்றிருப்பதால் கடம்பவனவாசவி என்ற திருநாமம் பெற்றுள்ளார். இத்தலத்தில் கடம்பவனவாசவி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். கோயிலுக்கு எதிரே 30அடி உயர கொடிமரமும், அருகில் பலி பீடமும் உள்ளது. கோயில் வளாகத்திலேயே சப்தகன்னியர்கள் கோயிலும் உள்ளது.

சிவபெருமானை நோக்கி தவமிருக்கும் பார்வதி தேவி, தனது தவம் கலையாமல் இருக்க விநாயகரை மடியில் வைத்து கடம்பவனத்தில் தவமிருந்தார். தவக்கோலத்தில் இருக்கும் பார்வதி தேவியை கடம்பவன வாசவி அம்மன் என்ற திருநாமத்துடன் பக்தர்கள் வழிபட தொடங்கினர். இந்த வரலாற்றின் அடிப்படையிலேயே இந்த கோயில் அமைய பெற்றுள்ளது. வேண்டுதலை நிறைவேற்றும் தெய்வமாக கடம்பவனவாசவி அம்மன் அருள்பாலித்து வருகிறார். அம்மன் மடியில் விநாயகர் அமர்ந்து அருள்பாலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

இதனால் அம்மனை வேண்டும் போது எவ்வித காரியங்களும் தடை இல்லாமல் நடைபெறும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மனதில் உறுதியாக உள்ளது. இந்த கோயிலில் அருகில் சப்தகன்னி கோயில் உள்ளது. சிவபெருமான் அந்தகாசுரன் என்னும் அரக்கனுடன் போர் புரியும்போது அரக்கனின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தில் இருந்து ஏராளமான அரக்கர்கள் தோன்றினர். அவர்களை அழிக்க சிவபெருமான் யோகேஸ்வரி என்னும் சக்தியை வாயிலிருந்து வெளிப்படுத்தினார்.  யோகேஸ்வரி, மகேஸ்வரி என்ற சக்தியை உருவாக்கினாள்.

இவளுக்கு உதவியாக பிரம்மா பிராம்மியையும், முருகன் கவுமாரியையும், விஷ்ணு வைஷ்ணவியையும், வாரகமூர்த்தி வாராஹியையும், இந்திரன் இந்திராணியையும், யமன் சாமுண்டியையும் உருவாக்கினர். இவர்களே சப்த கன்னியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சும்ப நிசும்பர்களை அழிக்க அம்பிகை போர்புரிந்தபோது அவளுக்கு உதவியாக சப்தகன்னியர்கள் தோன்றினர் என்றும் கூறப்படுகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கன் கருவில் உருவாகதா பெண் சக்தியால் மட்டுமே அழிவு வேண்டும் என வரத்தினை பெற்று ஆணவத்தால் உலக உயிர்களை துன்புறுத்தி வந்தான்.

அதனால் அம்பிகை தனது சக்தியாக கருவில் உருவாகாத சப்தகன்னியர்களை தோற்றுவித்து, அவர்கள் மூலம் மகிஷாசுரனை வதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. சப்தகன்னியர்கள் முத்தலை, சூலம், கத்தி, கபாலம், முண்டம் ஆகியவற்றை தனது கரத்தில் ஏந்தி சவத்தின் மீது அமந்திருப்பர். வெற்றி தேவதையான இவளை வழிபட எதிரிகளை வெல்லும் சக்தி கிட்டும். மேலும் சொத்துகள் மற்றும் சகல சுகங்களையும் வழங்கி அருள்பாலித்து வருகிறாள். இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அம்மன் மடி மீது எலுமிச்சை பழம் வைத்து, நினைத்த காரியம் கைக்கூடி வெற்றிபெற வேண்டிக்கொண்டு எலுமிச்சை பழத்தை பெற்று செல்கின்றனர்.

அந்த எலும்மிச்சை பழத்தை கொண்டு சென்று வீட்டில் வைத்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல் தம்பதி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்ப ஒற்றுமை மேலோங்கும். திருமண தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைக்கூடும். குழந்தைபேறும் கிட்டும். ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் இந்த கோயிலில் குலதெய்வ வழிபாடு, காது குத்து நிகழ்ச்சிகளை பக்தர்கள் செய்து வருகின்றனர். வேடுதல் நிறைவேறும் பக்தர்கள் ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

மேலும் வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வாகனங்களில் சுற்றுலா செல்பவர்களும், புதிய வாகனங்கள் வாங்கியவர்களும் இங்கு அம்மனுக்கு பூஜை செய்து, எலும்மிச்சை பழத்தில் கற்பூறம் வைத்து ஏற்றி வாகனத்திற்கு சுற்றி உடைத்துவிட்டு செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது அம்மன் வழித்துணையாக வந்து பயணத்தை எவ்வித தடையும் இன்றி முடித்து கொடுப்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Tags : Ganesha ,Kadambavana Vasavi Amman ,
× RELATED வினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்