×

அண்ணாசாலை பச்சையம்மன்

சென்னையில் சிந்தாதரிப்பேட்டை எழும்பூர் திருவல்லிக்கேணி பகுதிகளுக்கு நடுவே அன்று மவுண்ட் ரோடு என அழைக்கப்பட்ட அண்ணாசாலையின் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் இன்றைய மின்வாரியத் தலைமையகத்திற்கு அருகில் மவுண்ட் ரோடு மன்னார்சாமி பச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. ஒரு பெரிய வெட்டவெளியில் அமைந்துள்ள கோயில் இதுவாகும். அன்றைக்குப் பாலிநதி என்றழைக்கப்பட்டு இன்றைக்குக் கூவம் என அழைக்கப்படும் நதி இக்கோயிலுக்கு அருகில் ஓடுகிறது.

சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோயில் இருக்கிறது. சிவபெருமானின் இடப்பாகம் பெற வேண்டி பார்வதி வாழை இலைப்பந்தல் அமைத்து மணல் லிங்கம் செய்து வழிபட்டாள். மணல் லிங்கம் செய்ய தன் கைப்பிரம்பால் தட்டி நீர் கொண்டு வந்து மணல் லிங்கம் செய்து வழிபட்டாள். அவ்வாறு இருக்கும் போது கதலி வனத்திலிருந்து அரக்கன் ஒருவன் தொல்லை கொடுக்கவே சிவனும், விஷ்ணுவும் வாழ்முனி, செம்முனியாக அவதாரம் எடுத்து வந்து அரக்கனை அழித்தனர். அன்னை சிவ வழிபாடு முடிந்து கயிலை சென்றாள். அம்பாள் பிடித்த மணல் லிங்கம் கல் லிங்கமாக மாறியது.

ஈசன் மன்னார்சாமியாக அம்மனுக்கு வலப்புறம் தனியாக அமர்ந்து அருள் புரிகிறார். நடுவில் சுதை வடிவில் அம்பிகை இருக்கிறாள். பச்சை மணலினால் சிவலிங்கம் செய்து வழிபட்டதால் பச்சையம்மன் என அழைக்கப்படுகிறாள். வெளியில் விநாயகரும் முருகனும் உள்ளனர். வாழ்முனியின் பெரிய சிலை ஒன்றுள்ளது. அருகில் 6 முனிகள் தனி மண்டபத்தில் உள்ளனர். வீராட்சி அம்மன் மற்றும் ஏழு கன்னிகள் உள்ளனர். விநாயகர், முருகன் சந்நதிகள் உள்ளன. கிழக்குப் பார்த்து அமைந்துள்ள கருவறை தென் வடலாக நீள வாக்கில் உள்ளது.

கருவறையில் மூல பச்சையம்மன் அமர்ந்த நிலையில் காட்சி தருநின்ற நிலையில் அபிஷேக அம்மன் இருக்கிறாள். இருபுறமும் முடியாலழகி, பூங்குறத்தி, காத்தாயி அம்மன் ஆகியோர் உள்ளனர். எதிரில் நந்தி உள்ளது. சந்நதிக்குப் பின்புறம் நாக கன்னிகையும் உள்ளனர். காலை 6.30 மணிமுதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திருக்கோயில் திறந்திருக்கும். வாரத்தில் ஞாயிறு செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் முக்கியமான நாட்களாகும். விசேஷ காலங்களில் வாழ்முனிக்கு வழிபாடு செய்த பின்னரே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

சித்திரை மாத அக்னி நட்சத்திர பூஜை, ஆடி மற்றும் தை மாதம் வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகள், புரட்டாசி நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, தைப் பொங்கல், ஆகியவை சிறப்பு மிக்க திருவிழாக்களாகும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படும். அதற்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்று காப்புக்கட்டி தீமிதித் திருவிழா 11 நாட்களுக்கு பிரம்மோற்சவமாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காப்புக்கட்டி கரகம் சுமந்து தீமிதியும் முருகன்,வள்ளி,தெய்வானை திருமணமும் நடைபெறும் திருக்கோயிலாகும். மன்னார் ஈஸ்வரருக்கு ஆண்டு தோறும் மார்கழி மாத விடியற்காலை பூஜை, ஆருத்ரா, மகாசிவராத்திரி போன்றவை கொண்டாடப்படுகிறது.

Tags : Annasalai Pachayamman ,
× RELATED கருடாழ்வார் தரிசனம்