×

வாழையடி வாழையாக வம்சம் தழைக்கும்!

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

* என் மகளுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? தற்போது தையல் பயிற்சிக்கு போகிறார். தையல் சம்பந்தமான வேலைக்குச் செல்லலாமா? - செல்வம், சித்தாம்பூர்.

தங்கள் மகளின் ஜாதகத்தை வாக்ய கணித முறையில் கணித்ததில் தற்காலம் 16.02.2020 வரை ராகு தசையில் சனி புக்தி நடைபெற்று வருகிறது. ரோகிணி நக்ஷத்ரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் அவருடைய ஜாதக பலத்தின்படி அரசுப் பணி கிடைக்கும் என்று சொல்வதை விட இவர் நிரந்தரமாக வேலை பார்த்து அல்லது சுயதொழில் செய்து சம்பாதிப்பார் என்று வேண்டுமானால் சொல்லலாம். இவரது ஜாதக பலத்தின்படி தன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பதால் நிரந்தர சம்பாத்யம் என்பது உண்டு. இவருடைய ஜாதகத்தில் வேலை வாய்ப்பைப் பற்றிச் சொல்லும் பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் எந்த கிரகமும் இல்லை. என்றாலும் ஜீவன ஸ்தான அதிபதியாகிய சனி வக்ர கதியில் ஜென்ம லக்னத்திலேயே சஞ்சரிக்கிறார்.

வக்ர கதியோடு நீச பலமும் பெற்றுள்ளார். தையல் சார்ந்த பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது இவரது எதிர்காலத்திற்கு நல்லதே. வரும் 2020ம் வருடம் முதல் தையல் சம்பந்தமான பணிக்குச் செல்வது நல்ல பலனைத் தரும். சில வருடங்கள் மட்டும் பணி செய்து விட்டு வெகு விரைவிலேயே இவரால் சொந்தமாக தொழிலை துவக்க இயலும். தன ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டில் உண்டாகியிருக்கும் குரு சந்திர யோகம் இவரை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். நல்ல தனலாபத்தோடு சுயதொழிலை வெற்றிகரமாக நடத்துவார். பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் அளவிற்கு இவர் தனது தொழிலை விரிவுபடுத்துவார். இளம் வயதிலேயே அதற்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. திருமணத்திற்கு அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை. திருமண வாழ்வினைப்பற்றி சிந்திக்காமல் கைத்தொழிலை சிறப்பாகக் கற்றுக் கொள்ள துணை நில்லுங்கள். ஓரிரு வருடங்கள் சிரமத்தினை சந்தித்தாலும் அதன் பின்னர் வாழ்வு நல்ல முன்னேற்றத்தினைக் காணும் என்பதையே இவரது ஜாதகம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

* டி.எம்.ஈ. படித்துள்ள எனக்கு இதுவரை நிலையான வேலை ஏதும் அமையவில்லை. நான் சொந்தமாக கடை அல்லது வியாபாரம் செய்ய ஜாதகத்தில் வழி உள்ளதா? அப்படி இருந்தால் எந்த மாதிரி தொழில் ஆரம்பிக்கலாம்? அல்லது நிலையாக வேலை பார்க்க நான் ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? என் எதிர்காலம் எப்படி இருக்கும்? - சந்திரமோகன், உடுமலைப்பேட்டை.

உங்களது ஜாதகத்தைக் காணும்போது “வாயுள்ள பிள்ளை பிழைக்கும்” என்ற பழமொழியே நினைவிற்கு வருகிறது. பேச்சுத்திறனைக் கொண்டு உங்களது உத்யோகத்தை நீங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு கணித்துப் பார்த்ததில் தற்காலம் செவ்வாய் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது என்பதை அறிய முடிகிறது. பூரம் நக்ஷத்ரம், சிம்ம ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் ஆகிய பத்தாம் பாவகத்தின் அதிபதி ஆகிய புதன் வாக்கு ஸ்தானம் எனும் இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.

அதே இடத்தில் சூரியன் நீச பலத்துடன் அமர்ந்திருப்பதால் அரசியல்வாதி ஒருவரின் தொடர்பும், அவரிடம் பணி செய்து வருவதும் உங்களுடைய வளர்ச்சிக்கு துணை புரியும். சூரியன் நீச பலம் பெற்றிருந்தாலும், அதே இடத்தில் சனி உச்ச பலத்துடன் சஞ்சரிப்பது உங்களுக்குத் துணை புரியும். நான்காம் பாவகத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கும் குருவும், உடன் இணைந்திருக்கும் செவ்வாயும் குரு, மங்கள யோகத்தினைத் தந்திருக்கிறார்கள். இவர்களது நேரடிப் பார்வை ஜீவன ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுடைய தொழிலை தற்போது நடந்துகொண்டிருக்கும் செவ்வாய் தசையின் காலத்திலேயே நிலைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களுடைய ஜாதக பலத்தின்படி 24.10.2019 முதல் திருப்புமுனையைக் காண உள்ளீர்கள். பேச்சுத்திறமையைக் கொண்டு சாதிக்கும் ரியல் எஸ்டேட், தரகு, கமிஷன் முதலான தொழில்கள் உங்கள் வளர்ச்சிக்குத் துணை புரியும்.

செவ்வாய் தசையின் காலத்தில் சுயதொழிலை அமைத்துக் கொள்ளும் நீங்கள் ராகு தசையின் காலத்தில் அதாவது 38 வயது முடிந்து 39வது வயது துவங்கும் காலத்தில் இருந்து பொருளாதார ரீதியாக சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். ராகு நீச பலம் பெற்றிருந்தாலும் தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சூரியனின் சாரம் பெற்று தனது தசையை நடத்த உள்ளதால் ராகு தசைக்கு உரிய காலத்தில் சூரியனை தனது ராசியின் அதிபதியாகக் கொண்ட நீங்கள் உயர்ந்த நிலைமையை அடைவீர்கள். தங்கள் துணைவியாரின் புஷ்பவதியான குறிப்பினையும் அனுப்பியுள்ளீர்கள். மனைவியின் ருது ஜாதகத்தைக் கொண்டு கணவனின் தொழில்நிலையை கணிக்க இயலாது. ருது ஜாதகத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

 சிம்ம ராசியில் பிறந்திருக்கும் நீங்கள் உங்கள் ராசிக்கு உரிய இயற்கை குணத்துடன் அரசயோகத்தினைப் பெற்று வாழ்வீர்கள் என்பதையே உங்கள் ஜாதகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. வாழ்வினில் வளர்ச்சி காண பரிகாரம் கேட்டிருக்கிறீர்கள். மாதந்தோறும் கிருத்திகை விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். மனம் சஞ்சலப்படும்பொழுது பழனிக்குச் சென்று பழனியாண்டவனை தரிசிப்பதால் சஞ்சலம் நீங்கி தெளிவு கிடைக்கக் காண்பீர்கள். வருடத்தில் ஒரு நாள் பழனியில் அன்னதானம் செய்யவேண்டும் என்பதை உங்கள் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்படுங்கள். ஆண்டவனின் துணை எப்போதும் உடன் இருக்க வீண் கவலை எதற்கு என்ற தைரியத்தோடு செயல்படுங்கள். வெற்றி உங்களுடையதே. வாழ்க வளமுடன்.

* எனக்கு மூன்று மகன்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது. முதல் இரண்டு மகன்களுக்கும் பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது மகனுக்கு இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அவருடைய ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் உள்ளதா? குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்? வம்ச விருத்திக்கு ஒரு ஆண் வாரிசு இல்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டுகிறது. - சுப்ரமணியன், திருவண்ணாமலை.

ஆண்பிள்ளை பிறந்தால் மட்டும்தான் வம்சம் விருத்தியடையும் என்ற உங்கள் எண்ணம் தவறானது. தர்ம சாஸ்திரமும் இந்த கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவனுக்கு வெறும் பெண் பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்களுக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகள் தன் தாய் வழிப்பாட்டனின் வாரிசு ஆக கருதப்படுவார்கள் என்றும் ஆண்வாரிசுக்கு உரிய உரிமைகளும், கடமைகளும் பெண் வயிற்றுப் பேரனுக்கு கட்டாயம் வந்து சேரும் என்று தர்ம சாஸ்திரம் அறுதியிட்டுச் சொல்கிறது. இதே கருத்தினை ஜெனட்டிக்ஸ் என்று அழைக்கப்படும் மரபியல் உறுதி செய்திருக்கிறது.

 பெண் வயிற்றுப் பேரன் தாய்வழிப் பாட்டனின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பான் என்று அறிவியல் அடித்துச் சொல்கிறது. அவ்வாறு இருக்கையில் உங்களுடைய மனக்கவலை என்பது வீணான ஒன்று. ஆண் வாரிசு பற்றிய சிந்தனையை விட்டுவிட்டு மூன்றாவது மகனுக்கு நல்லபடியாக ஒரு வாரிசு அமையவேண்டும் என்பதே உங்களுடைய முழுநேர பிரார்த்தனையாக இருக்க வேண்டும். பிள்ளைப்பேற்றினைப் பற்றி அறிந்துகொள்ள தம்பதியர் இருவரின் ஜாதகங்களும் அவசியம். நீங்கள் உங்கள் மகனின் ஜாதகத்தை மட்டும் அனுப்பியிருக்கிறீர்கள். மருமகளின் ஜாதகத்தையோ அல்லது பிறந்த தேதி மற்றும் நேரம் முதலான விவரங்களையோ அனுப்பவில்லை. உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணைகொண்டு கணிதம் செய்ததில் மூலம் நச்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

தற்காலம் சந்திர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. குழந்தைப் பேற்றினைத் தரும் ஐந்தாம் பாவகம் சுத்தமாக உள்ளது. ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி எட்டாம் வீட்டில் புதனின் சாரம் பெற்றும், புதன் அதே எட்டாம் வீட்டில் சனியின் சாரத்தினைப் பெற்றும் அமர்ந்திருப்பது தோஷத்தைத் தருகிறது. மேலும் புத்ர காரகன் ஆகிய குரு பகவான், சனியின் இணைவினைப் பெற்று ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் தோஷமான நிலையே. குரு சந்திரன் இருவரும் ஆறாம் வீட்டில் கிட்டத்தட்ட ஒரே பாகையில் சஞ்சரிப்பது குரு சண்டாள யோகத்தினைத் தருகிறது. ஒட்டுமொத்தத்தில் அவரது ஜாதகத்தினை ஆராயும்போது தத்துபுத்திரயோகம் என்பது இருப்பதை ஜோதிடத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. குரு, சண்டாள யோகத்தினால் உண்டாகும் சிரமங்களை எதிர்கொள்ள குருமகான்களின் ஆசி அவசியம். உங்கள் மகன் யாரை தனது குருவாக நினைக்கிறாரோ அவரிடம் சென்று பாதபூஜை செய்து ஆசி பெற அறிவுறுத்துங்கள்.

 சாயிபாபா, ராகவேந்திரர் முதலான மகான்களை வழிபட்டு வருவதும் நல்ல பலனைத் தரும். அவரது ஜாதகத்தின்படி பித்ரு தோஷமோ அல்லது குலதெய்வ வழிபாட்டில் குறை என்பதோ எதுவும் கிடையாது. அவரது பூர்வ ஜென்ம பலனை மட்டுமே அனுபவித்து வருகிறார். மேற்சொன்ன பரிகாரங்களைச் செய்வதன் மூலம் இவர் தத்து எடுத்துக்கொள்வதற்கான பிள்ளை எங்கே உள்ளது என்பதை இவரால் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு நல்ல நாளாகப் பார்த்து ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் ஆதரவற்ற நிலையில் உள்ள ஆண்குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வரச் சொல்லுங்கள். தத்துப்பிள்ளையின் ஸ்பரிசமும், அந்தப் பிள்ளை வீட்டிற்கு வரும் நேரம் கூட ஒரு சிலருக்கு பிள்ளை பாக்கியத்தைத் தரக்கூடும்.

39வது வயதில் இருக்கும் உங்கள் மகனை இனியும் காலம் தாழ்த்தாமல் ஒரு பிள்ளையை தத்து எடுத்து வளர்க்க பெற்றோர் என்ற முறையில் அனுமதியும் அறிவுரையும் வழங்கி அவர்களது நல்வாழ்விற்குத் துணை நில்லுங்கள். தத்துபுத்திரயோகம் இருப்பதை உங்கள் மகனின் ஜாதகம் தெளிவாகத் தெரிவிப்பதால் மனதில் எந்தவிதமான சஞ்சலத்திற்கும் இடம் தராமல் உங்கள் குலதெய்வத்தின் ஆலயத்தில் உத்தரவு கேட்டு தெய்வத்தின் அனுமதியுடன் ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வரச் சொல்லுங்கள். வாழையடிவாழையாக உங்கள் வம்சம் தழைத்து உயர்வடையக் காண்பீர்கள்.

* நன்றாக வாழ்ந்து தற்போது வறுமையில் வாடும் குடும்பம் என்னுடையது. என் மகன் அரசாங்க வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவர் ஒருவரின் வருமானம்தான் குடும்பத்தை உயர்த்த வேண்டும். அவரது வேலை, திருமணம், எதிர்காலம் எவ்வாறு அமையும்? என் மகனின் வாழ்கைக்கு நல்வழி காட்ட வேண்டுகிறேன். - கீதா, கும்பகோணம்.

நீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தினை ஆய்வு செய்ததில் அவருக்கு நிரந்தர உத்யோகம் என்பது நிச்சயமாக உண்டு என்பதையே அவரது ஜாதகம் தெளிவாகக் காட்டுகிறது. பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே சூரியனும், புதனும் இணைந்திருக்கிறார்கள். உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கிறார். உத்யோக ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை பலமும் இணைவதால் நிச்சயமாக அரசாங்கப் பணிக்கு இணையான நிரந்தர உத்யோகம் என்பது வெகுவிரைவில் கிடைத்துவிடும். தொடர்ந்து அரசுத்துறை சார்ந்த தேர்வுகளை எழுதி வரச் சொல்லுங்கள்.  

தனது திறமையால் உயர்ந்த பதவியில் அமர்ந்துவிடுவார். திருமணத்திற்கு அவசரப்பட வேண்டாம். ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய செவ்வாய் 12ம் வீட்டில் கேதுவுடன் இணைந்திருப்பதால் திருமண விஷயத்தில் நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். உங்கள் மகன் தனது சகோதரியை நல்லபடியாக பார்த்துக் கொள்வதோடு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் செயல்படுவார். அவரது எதிர்காலம் என்பது ஊரார் போற்றும் வகையில் அமைந்துள்ளது. உங்கள் மகனின் வளர்ச்சியைக் கண்குளிரக் காண்பதன் மூலம் நீங்கள் படுகின்ற கஷ்டங்களுக்கு உரிய பலனை அடைவீர்கள். சிவாலய வழிபாட்டினை தொடர்ந்து செய்து வாருங்கள். பரமேஸ்வரனின் அருள் உங்கள் மகனின் ஜாதகத்தில் நிறைந்துள்ளது. சிறப்பான எதிர்காலம் அவருக்கு உண்டு என்பதை அவரது ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

* 69 வயதாகும் எனக்கு இதுவரை சொந்த வீடு கிடையாது. வீடு வாங்கும் அதிர்ஷ்டம் கிடைக்குமா? கேரளாவிற்குச் சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்யலாமா? 10 ஆண்டு காலமாக கால் மூட்டுவலி உள்ளது. எப்போது சரியாகும்?
- நல்லமுத்து, கள்ளக்குறிச்சி.

உங்களது ஜாதகத்தை பஞ்சாங்க கணித முறைப்படி துல்லியமாக கணித்ததில் தற்காலம் 13.01.2020 வரை புதன் தசையில் குரு புக்தி நடைபெற்று வருகிறது. அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாதம், கும்ப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் இணைந்திருக்கின்றன. வலிமையான ஜாதக அம்சத்தினைப் பெற்றிருந்தும் அதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் ராகுவின் வலிமை செயல்பட்டிருக்கிறது. ஜென்ம லக்னம் ராகுவின் சாரத்தில் அமைந்திருப்பதும், அதே ராகு லக்னத்தில் அமர்ந்திருப்பதும் உங்களை பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்க வைத்துவிட்டது. ராகுவின் தாக்கத்தினால் லாட்டரி சீட்டு விற்கும் எண்ணமும் உருவாகி இருக்கிறது.

தற்போது நடந்து வரும் தசாபுக்தியின்படி வெளியூருக்குச் சென்று வேலை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் உங்கள் விருப்பம் போல் தற்போது வசித்து வரும் வாடகை வீட்டினை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நன்றாக உள்ளது. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலமும், கோச்சார கிரஹ நிலையும் சாதகமாகவே அமைந்துள்ளது. லாட்டரி சீட்டு விற்கும் எண்ணத்தை கைவிட்டு தற்போது செய்து வரும் தொழிலையே ஈடுபாட்டுடன் செய்யுங்கள். மூட்டுவலி என்பது உங்கள் வயதில் இருப்பது சகஜம்தான். ஆனால் அதனை பொருட்படுத்தாது செயல்பட உங்களால் இயலும். அதிர்ஷ்டத்தை நம்பியிராமல் உங்கள் உழைப்பினை நம்புங்கள். வெறும் அதிர்ஷ்டம் நிரந்தரமான நன்மையைத் தராது. உழைப்புடன் கூடிய அதிர்ஷ்டம்தான் உயர்வினைத் தரும். இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

வலிமையான ஜாதக அம்சத்தினைக் கொண்டுள்ள நீங்கள் உழைப்பினை நம்பி முழு மூச்சுடன் பணியாற்றுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி குரு மற்றும் சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டம் என்பது நன்றாகவே உள்ளது. உழைப்பு என்பதே அவசியமாகிறது. சொந்த வீடு வாங்கும் யோகம் என்பது உங்கள் ஜாதக பலத்தின் படி நன்றாகவே உள்ளது. இறைவனின் அருளால் விரைவில் சொந்த வீட்டில் அடியெடுத்து வைப்பீர்கள்.

சுபஸ்ரீ சங்கரன்

Tags :
× RELATED திருப்புகழில் தேவாரம்