×

காவல் தெய்வங்களான கௌரவர்கள், பாண்டவர்கள்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் தாலுகா, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கிராமம் புளியங்குளம். புளியங்குளம் மக்கள்  தங்கள்  உயிராக மதித்து  வழிபடும் பண்டு ராஜா என்ற பாண்டிய ராஜா கோயில் இவ்விடத்தில் உருவாகக் காரணமே மிகவும் விசேஷமானது. சுமார் எட்டு தலைமுறைக்கு முன்பு  ஆதிநித்தன் குடும்பன் என்பவர் தனது மனைவி வைத்தியம்மாள் என்பவரோடு  இப்பகுதியில் வாழ்ந்து வந்தார்.  தாமிரபரணி ஆற்றங்கரையில் தற்போது பாண்டு  ராஜா கோயில் உள்ள இடத்தில் சுமார் 220 ஏக்கரில் மாட மாளிகை கட்டியிருந்தார்.

ஆதி நித்தன் குடும்பன் தனது குடும்பத்துடன் இப்பகுதி விளை நிலங்களை அனுபவித்து வந்தார். இவரின் கோட்டையில் நூற்றுக்கணக்கான மாடுகள் இருந்தன.  இந்த மாடுகள் கழிக்கும் சிறுநீரே ஒரு குளத்து  மடையில் இருந்து வரும் தண்ணீர் போல கோட்டையை விட்டு வெளியேறி  கொண்டிருக்குமாம். அந்த மாடுகள்  மூலம் கிடைக்கும் பால் முழுவதையும் அவர் கோட்டையில் வாழ்ந்த மக்களுக்கே இலவசமாக வழங்கி வாழ்ந்து வந்தார். இவ்விடம் எப்போதுமே   பூஞ்சோலையாக விளங்கியது. தாமிரபரணி ஆறு ஓடி வரும் கரையில் மரங்கள் பல ஒன்றை ஒன்று பிணைந்து நிற்க, நெற் பயிர்கள் வயல்வெளிகளில்  வண்ணமயமாக காட்சியளிக்கும் இடமாகும்.

இதை யார் பார்த்தாலுமே மனதை கொள்ளை கொள்வதாகவே விளங்கும். இந்த வனப்புத்தான் மேலோகத்தினை சேர்ந்தவர்களையே மதிமயங்க செய்தது. ஆகவே  இந்த கோட்டையைப் பார்க்க சிவன், விஷ்ணு ஆகிய இருவரும் தாமிரபரணி ஆற்றின் வழியாக கோட்டைக்கு வந்தனர். அந்த இடத்தில் அவர்கள் இருக்க  வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆகவே கோட்டைக்குள் ஒரு  பாம்பு புற்றாக அமர்ந்து கொண்டனர். இந்தப் புற்று தினமும் ஆதி நித்தன் குடும்பன்  செல்லும்போதும், வரும்போதும் காலில் பட்டுக்கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரம் கொண்ட அவர், அந்த புற்றை உடைக்க தனது காவலர்களை ஏவினார்.  காவலர்கள் புற்றை உடைக்கும்போது அதிலிருந்து  ரத்தம் பீரிட்டது.

இதனால் மனது நொந்தார் ஆதிநித்தன்குடும்பன். அன்று இரவு படுக்கையில் அவர் இருக்கும்போது கனவு கண்டார். அதில் சிவன், விஷ்ணு இருவரும் ஒருங்கே  காட்சியளித்து, ‘பாம்பு புற்றாக வந்தது நாங்கள்தான்.  இங்கு நாங்கள் குடிபுக விரும்புகிறோம். ஆகவே  எங்களுக்குக் கோட்டையை விட்டு கொடுத்து விட்டு   உனது சந்ததிகள்  எங்களை வணங்க வழிவகை செய்’ என்று கூறினார்களாம். மறுநாள். ஆதிநித்தன் யோசனையோடு படுத்து தூங்கினார். அன்று இரவு  மேலோகத்தில் இருந்த பஞ்ச பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் பூலோகத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று விரும்பினர். எனவே  இவர்கள் கடல் வழியாக கொற்கையில் இறங்கி தாமிரபரணி படுகை வழியே நதியை எதிர்த்து வந்தனர்.

அப்போது பெருங்குளத்தில் அர்ச்சுனனும், திருப்புளியங்குடியில் சகாதேவனும், நத்தத்தில் பீமனும், தர்மர் திருவைகுண்டத்திலும், இரட்டை திருப்பதியில் நகுலனும்   இளைப்பாறினர். அவர்கள் இளைப்பாறிய இடம் அனைத்தும் வைணவத்தலங்கள். தற்போது இவை நவ திருப்பதி என்றழைக்கப்படுகிறது. பின்பு அவர்கள்  அனைவரும்  ஒரே இடத்தில் தங்க ஏற்ற இடம் எது என்று அறிய சூலாயுதம் ஒன்றை எறிந்தனர். அந்தச்சூலாயுதம்  ஆதிநித்தன்குடும்பன் கோட்டை முன்  விழுந்தது. அப்போது அங்கிருந்து ஒரு வெள்ளை எலி வேகமாக ஓடியது. இந்த சம்பவம் கோட்டையினுள் தூங்கிக்கொண்டிருந்த ஆதிநித்தன் குடும்பன் கனவிலும்  தெரிந்தது. என்ன ஏது என்று தெரியாமல் தவித்தார் ஆதிநித்தன் குடும்பன்.

இதற்கிடையில் பாண்டவர்கள் தாங்கள் தங்க இதுவே ஏற்ற இடம் என்று முடிவு செய்தனர். எனவே குடும்பனின் கனவில் தர்மர் தோன்றினார், “நாங்கள் இந்த  இடத்தில் இருக்க விரும்புகிறோம். ஆகவே இந்த இடத்தினை எங்களுக்கு விட்டு கொடு” என்று கேட்டார். மறுநாள் விடிந்தது. ஆதி நித்தன் குடும்பன்  தெய்வங்களுக்காக இந்த  கோட்டையை விட்டு புளியங்குளத்தில் குடியேறினார். இந்தக் கோட்டையில் சிவன், நாராயணன், பஞ்சபாண்டவர்கள் 5 பேர், கவுரவர்கள்  101 பேர் ராமன் வகையறா ஆகிய தெய்வங்கள் உள்ளன. இதுபோக தெற்கே குந்திதேவியும், வடக்கே காந்தாரியும் காவலாய் உள்ளனர்.  கோயில் திருவிழாவின்  போது நாராயணனின் 10 அவதாரம், சிவனின் ஐந்தொழில்கள் ஆகியவை காட்சியாக காட்டப்படும்.

இங்கு தர்மர், அரிச்சந்திரன், துரியோதனன் ஆகியோர்களுக்கு சாமியாடுகிறார்கள். தற்போது புளியங்குளத்தில் வசிக்கும் இவர்களின் வாரிசுகள் தங்கள்  குழந்தைகளுக்கு சகாதேவன், திரௌபதி போன்ற பெயர்களையே சூட்டுகிறார்கள். இந்த கோயிலில்  அவதார காட்சிகள்  காட்டும் கவசங்கள் வெள்ளியால்  செய்யப்பட்டது. அந்த கவசங்கள்  8 தலைமுறையாக பத்திரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் சைவ பூஜை நடைபெற்று வருகிறது. இடைக்காலத்தில்  ஆடு பலியிட ஆரம்பித்தார்கள். ஆனால் அது மற்ற கோயிலைப்போல் சாமிபூடம் முன்னால்  பலியிடுவது இல்லை. கோயில்  பின்புறம் மறைமுகமாக வைத்து   500ல் இருந்து 600 கிடா வரை பலியிடப்படும்”.

“திருவிழாவின் போது ராத்திரி வேளையில் அந்த அற்புத நிகழ்ச்சி நடக்கும். பெண்கள் ஊரில் இருந்து கொண்டு வந்திருக்கும் புது நெல்லை அங்குள்ள உரலில்  போட்டு இடித்து  அரிசி ஆக்குவார்கள். அந்த அரிசியை வைத்து பொங்கலிடுவார்கள். அதற்காக அவர்கள் இரவு நேரத்தில் 100 க்கு மேற்பட்டவர்கள்  தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து பொங்கலிடுவார்கள். பொங்கல் பொங்கும் போது குலவையிடும் சத்தம் அப்பகுதியில் விண்ணதிரும்.  இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. ஆதிநித்தன்குடும்பன் குடும்பத்தோடு வாழ்ந்து விவசாய தொழில் செய்து வந்த காரணத்தால்தான் ஆதி நித்தன் நெல்லூர்   என்பது மருவிதான்  ஆதிச்சநல்லூர் என்று மாறி விட்டது. (ஆதித்தன் என்றால் கதிரவன் எனவும் பெயர் கொள்ளலாம்).

சுமார் 12 வருடங்களுக்கு முன் சித்திரை கொடை விழாவின் போது நடந்த சம்பவம் இது.  அரிசி இடிக்க நெல்லை பெட்டியில் கொண்டு வந்தனர். அதை உரல்  மூலம் கோயில் உள்ளே வைத்து  குத்தி கொண்டு இருந்தனர். அப்போது நல்லமழை பெய்யும் அறிகுறி இருந்தது. மழைபெய்தால் தெய்வகாரியம் ஒன்றுமே  நடக்காது. ஆகவே பக்தர்கள் அனைவரும் தவித்து நின்றனர். அவ்வேளையில் அர்ச்சுணன் சாமியாடும் சி.என். தங்கவேல் என்பவர், அவரது தம்பி  சகாதேவன்  சாமி ஆடும் பெருமாளை பார்த்து “ சகாதேவா கோட்டையில் காவல் செய்” என்று கூறினார். உடனே பெருமாள்,  கோட்டையைச் சுற்றி திருநீரை  போட்டு  விட்டு உள்ளே  வந்தாராம்.  என்ன ஆச்சரியம்.  கோட்டைக்கு வெளியே பெரிய மழை பெய்தது.

ஆனால் கோயில் வளாகத்தில் ஒரு சொட்டு மழை தண்ணீர் கூட விழவில்லை. . அது மட்டுமா? ஆங்கிலேய ஆட்சி நடக்கும் போது  இந்து கோயில்கள் அடித்து  நொறுக்கப்பட்டது. அப்போது கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்ட சுவாமிகள் மட்டும் விடப்பட்டது. அதன்படி வெள்ளத்துரை,  பாண்டுராஜா கோயிலில் வந்து  “அர்ச்சுனா ” என்று  சத்தம் போட்டாராம். உள்ளே இருந்து  “என்ன ” என்று எதிர்குரல் கேட்டதாம். உடனே அதிர்ந்துபோன துரை கோயிலை அப்படியே விட்டு  விட்டு சென்று விட்டாராம். இவ்வூரில் மொத்தம் 9 குடும்பம். இதில் 101 கவுரவர்களுக்கும் 5 கும்பிடியும் (குடும்பம்), பாண்டவர்களுக்கு 3 கும்பிடியும், 1 கும்பிடி   கண்ண பெருமாளுக்கும்  சாமியாடுகிறார்கள். கோயிலில் பஞ்சபாண்டவர்களும், கௌரவர்களும், காந்தாரி அம்மன், குந்திதேவி, கர்ணன், விஷ்ணு, சிவன், பீஷ்மர்,   திருவாச்சாரியார், திரௌபதி, அர்ச்சுணனின் இரு மனைவியான பவளக்கொடி,  சுமுத்திரை ஆகியோர் தெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றனர்.

முத்தாலங்குறிச்சி காமராசு
படங்கள்: சுடலைமணிசெல்வன்

Tags : Kauravas ,Pandavas ,
× RELATED இழந்த செல்வங்களை மீட்டுத்தருவார் பீமேஸ்வரர் : ஓமந்தூர்