×

குழந்தையாக வரும் தெய்வம்

வெல்லக் கட்டியில் எந்தப் பக்கம் இனிப்பு என்று கேட்பதைப் போலத்தான் சக்தி வழிபாட்டில் எந்த வழிபாடு உயர்ந்தது என்பது! அதாவது சக்தியை எந்த உருவில்  எப்படி வழிபட்டாலும் அது உள்ளம் நெகிழச் செய்யும் அற்புத ஆராதனைதான். அந்த வகையில் பாலா திரிபுரசுந்தரியைப் பற்றியும் அவள்  வழிபாட்டு முறைகள்  பற்றியும் அறிவோம். பிரமாண்ட புராணத்திலுள்ள லலிதோபாக்யானத்தில் பாலாவின் பெருமையை விளக்கும் 125 சுலோகங்கள் உள்ளன. பண்டாசுர வதம்  நடந்தபோது பண்டாசுரனின் புதல்வர்கள் போருக்கு வந்ததும் அவர்களை வதம் செய்ய பாலாதேவி தோன்றினாள்.

லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். இப்போதும் ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால்  ‘ஸதாநவவர்ஷா’ எனவும், (ஸதா & எப்போதும்,  நவவர்ஷா & ஒன்பது வயதினள்) வெள்ளை அன்னங்கள் பூட்டிய கர்ணீ ரதத்தில் ஏறி பண்டனின் புதல்வர்களை அழித்ததால் ‘பண்டபுத்ர வதோத்யுக்த பாலா  விக்ரம நந்திதா’ எனவும் லலிதா ஸஹஸ்ரம நாமத்தில் வஸின்யாதி வாக்தேவதைகள் இத்தேவியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வசின்யாதி  வாக்தேவதைகள் எட்டு பேர்களே திருமீயச்சூரில் அன்னையின் அருளாணைப்படி லலிதா ஸஹஸ்ரநாமத்தை அரங்கேற்றியவர்கள்.

காஞ்சி காமாட்சியின் முன் ஆதிசங்கரர் நிறுவிய சக்கரத்தில் அமர்ந்து கருணையுடன் ஆட்சி புரிபவர்கள்.  சிறு குழந்தையைப் போல விளையாட்டில் ஆசை  கொண்டதால் அம்பிகைக்கு பாலா எனும் பெயர் ஏற்பட்டதாக திரிபுரா ரகஸ்யம் எனும் நூல் விளக்குகிறது. அம்பிகை வழிபாட்டின் உச்சபட்ச வழிபாடான  மஹாக்ஷோடஸி தேவிக்கு உள்ள பெருமைகள் யாவும் பாலா லீலா வினோதியான இந்த திரிபுரசுந்தரிக்கும் உண்டு. பாலாதேவியின் திருவருள் கிட்டினால்  லலிதாம்பிகையின் திருவருளும் உடனே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம். இந்த பாலா மந்திரம் த்ரைலோக்ய வசகாரிணீ என்று மந்திர சாஸ்திரங்களில்  கூறப்பட்டுள்ளது.

இவள் தன் இடக்கரத்தில் நூலை ஏந்தியிருப்பது சகல வித்யைகளையும் சாதகர்களுக்கு அருளவே. இவள் மறுகரத்தில் கொண்டுள்ள ஜபமாலை, அம்பிகையின்  நாமத்தை அனைவரும் ஜபிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.  அபய வரத கரங்கள் பக்தர்களைக் காக்கவும், கேட்ட வரங்களைத் தரவும் தயாராக உள்ளன.  நித்ய கல்யாண சீலையான இவள், சகல நலன்களையும் இம்மையில் தந்து, வறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள். குண்டலினி யோகத்தில் முதல்  இரு ஆதார சக்கரங்களில் அம்பிகை பாலாவாகவும், அடுத்த இரண்டு ஆதாரங்களில் தருணியாகவும், அடுத்த இரண்டு ஆதாரங்களில் சுமங்கலியாகவும்.  ஸஹஸ்ராரத்தில் சுவாசினியாகவும் பூஜிக்கப்படுகிறாள்.

திருமூலர் தன் திருமந்திரத்தில்,

சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்
பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்
சுத்திய நாய் போல கதறுகின்றனவே (1199)

 - பராசக்தி சாதகர்களுக்கு சாதகமான பாலாவாவாள். அவளே முக்திக்கும் தலைவி. இதை மக்கள் அறியாமலிருக்கிறார்களே என்று பாடியுள்ளார். கருவூர் சித்தர்,

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு

 - என்று பாடியுள்ளார். அம்பிகையை வாலை பெண்ணாக முன் வைத்து அவளது மாயை முதலான கூறுகளை பல வடிவங்களாக்கி அவளை கன்னியாகவும் மன  அடக்கத்தை சோதிக்கும் சிவகாமசுந்தரியாகவும் விளையாட்டு வம்புக்காரியாகவும் சித்தரித்துள்ளார். மேலும்

முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசி பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை அமர்ந்திருக்கிறாள் வாலைப் பெண்ணே
காலனை காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த மானுடன் கோட்டை பிடித்தவளாம் என்று போற்றுகிறார்.

கொங்கண சித்தர் அருளிய வாலைகும்மி பிரசித்தி பெற்றது. பாலா நம் உடம்பில் குடி கொண்டுள்ளவள் என்பதை, ‘மானுடக் கோட்டையை பிடித்தனளாம்’  என்கிறார். நாம் தூங்கும் போதும் அவள் நம்மைக் காப்பதையே கடமையாகக் கொண்டவள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் பாலா என்கிறார் அவர். பாலை  எனும் பாலாதிரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டின் முதற்படி என்பர். ஸ்ரீவித்யா உபாசனா மார்க்கத்தில் பெரும்பாலோர் பாலா மந்திரத்தை மட்டுமே  உபாசிப்பது வழக்கம். அதனால் இம்மந்திரத்திற்கு லகு ஸ்ரீவித்யா என்றே பெயர்.

ஆழ்வார்கள் காலத்தில் ஒருவர் கூட குருவாயூரப்பனை மங்களாசாஸனம் செய்யவில்லை. ஏனெனில் அக்காலத்தில் குருவாயூரப்பன் கோயில் பாலா  க்ஷேத்திரமாக இருந்ததுதான். திருக்கடவூரில் மிருத்யுஞ்ஜய சக்கரத்திற்கு, ‘பாலாசமேத ம்ருத்யுஞ்ஜயாய நமஹ’ என்றே அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த  பாலாம்பிகையின் மந்திரத்தில் உள்ள ‘ஐம்’ எனும் வாக்பவ பீஜம், ஜபிப்பவர்களுக்கு சகல வித்யைகளையும் தரும். ‘க்லீம்’ எனும் மன்மத பீஜம்,  ஜபிப்பவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும்.

‘ஸௌ:’ எனும் சக்தி பீஜம் அம்பிகைக்கு உரியது. அதை ஜபித்தால் தேவியின் பேரருள் கிட்டும். இந்த பாலா வழிபாடு ஸ்ரீவித்யையில் மிக முக்கியமானது.  அந்த ஸ்ரீவித்யையில் விடாமுயற்சி என்ற வைராக்கிய குணமும், பற்றின்மையும் மிக மிக முக்கியம். அவை இரண்டையும் அஸ்திவாரமாக அமைக்காமல்  ஸ்ரீவித்யை எனும் மாளிகையை எழுப்ப முடியாது. குழந்தைகள் ஒரு பொருள் வேண்டும் என்று அழுது ஆகாத்தியம் செய்யும். இது விடாமுயற்சி. அப்பொருள்  கிடைத்ததும் அதை பத்திரமாக வைத்துக் கொள்ளாமல் தூக்கி எறிந்து விடும்.

அது பற்றற்ற நிலை. பாலா வழிபாடு பலமடைந்தால்தான் ஸ்ரீவித்யை பரிபூரணமாக சித்திக்கும். இந்த ஸ்ரீவித்யை எனும் தேவி வழிபாட்டை பெரும்பாலானோர்  பாலா மந்திர உபதேசத்துடனே நிறுத்தி விடுவர். எனவே பாலா உபாசனை லகு ஸ்ரீவித்யை என்று போற்றப்படுகிறது. இந்த பாலாம்பிகை உபாசனை  புரிபவர்களுக்கு தேவி சொற்திறன், அழியாத செல்வங்களோடு சகல மங்களங்களையும் அருள்பவள். குழந்தைகளை இந்த பாலாம்பிகையை வணங்கி வரச் செய்ய  அவர்கள் கல்வியறிவு செழிப்புறும். பால முருகன், பால கிருஷ்ணன், பால ஐயப்பன், பால கணபதி எனத் தெய்வங்களை பால ரூபத்தில் வழிபடுவதால் நமக்கு  அவர்கள் அருள் எளிதில் கிட்டும்.

தேவி பாலா, ஸர்வேஸ்வரி. குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பர். இங்கே தெய்வமே குழந்தையாக வரும்போது கொண்டாட்டத்திற்குக்  கேட்கவும் வேண்டுமோ?. இவ்வளவு மகிமை வாய்ந்த பாலா வேலூர் மாவட்டம் அனந்தலை வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் ஆலயம் கொண்டருளப் போகிறாள்.  நவம்பர் 3ம் தேதி (3.11.2019) அன்று காலை மணி 11 முதல் 12க்குள் 1008 சுமங்கலி பூஜை, 51 தம்பதி பூஜையுடன் அன்ன வாகனத்தில் அமர்ந்த பாலாவின்  திருவுருவம் பூஜ்யஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 59 வது ஜெயந்தி மகோற்சவ வைபவம் காரணமாக ஸ்வாமிகளின் அருளாசியால் பிரதிஷ்டை செய்யப்படப்  போகிறது. பக்தர்கள் பாலாவை தரிசியுங்கள். பேரருள் பெற்றிடுங்கள்.

Tags : goddess ,
× RELATED பள்ளூர் வாராஹி